தமிழ் திரையுலகில் உதவி இயக்குநராக அறிமுகமாகி, இயக்குநராக உருவெடுத்து, பின்னர் நடிகராக மக்களின் மனதில் பதிந்தவர் மாரிமுத்து (வயது 57).
அதிலும் சன் டிவியில் தற்போது ஒளிப்பரப்பாகும் ’எதிர்நீச்சல்’ சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து பெரும் ரசிகர் பட்டாளத்தை தன்பக்கம் ஈர்த்தவர் மாரிமுத்து.
இந்த நிலையில் அவர் இன்று காலையில் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்துள்ளது திரை உலகினர் மட்டுமின்றி, அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள், ரசிகர்கள் என பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மாரிமுத்து இன்று படப்பிடிப்புக்கு செல்ல வேண்டி இருந்ததால், காலை 6.30 மணி அளவில் எதிர்நீச்சல் சீரியலுக்கு டப்பிங் பேசுவதற்காக வடபழனி குமரன் காலனியில் உள்ள ஸ்டூடியோவிற்கு சென்றுள்ளார். அவருடன் அதே சீரியலில் அவருக்கு தம்பியாக நடிக்கும் நடிகர் கமலேஷும் சென்றுள்ளார்.
அவசரம் கருதி முதலில் மாரிமுத்து தான் டப்பிங் பேச தொடங்கியுள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே, தனக்கு புழுக்கமாக இருப்பதாக கூறி டப்பிங் அறையை விட்டு வெளியே வந்துள்ளார்.
வெளியே வந்து தனக்கு நெஞ்சு வலிப்பதாக மாரிமுத்து கூறிய நிலையில், அவரை உடனடியாக வடபழனி சூர்யா மருத்துவமனைக்கு காரில் அழைத்து சென்று அனுமதித்துள்ளார் கமலேஷ்.
ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சை தொடங்குவதற்கு முன்னரே 8.30 மணியளவில் மாரிமுத்துவின் உயிர் பிரிந்துள்ளது. அவரை பரிசோதித்த மருத்துவர்களும், அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு நடிகர்கள் நாசர், சரத்குமார், எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி, சென்றாயன், இயக்குநர்கள் ரமேஷ் கண்ணா, வசந்த் போன்ற திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அதேபோன்று எதிர்நீச்சல் சீரியலின் ஒட்டுமொத்த நடிகர்களும் நடிகர் மாரிமுத்துவின் உடலை கண்டு அழுதபடி அஞ்சலி செலுத்திய காட்சிகள் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் மாலை 6 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக மாரிமுத்துவின் உடல் வைக்கப்படுகிறது. பின்னர் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை காலை மாரிமுத்து உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
உதயநிதி பேச்சால் தமிழகத்திற்கு தலைகுனிவு: ஆர்.பி.உதயகுமார்
”சிகரத்தை நோக்கி சென்றவனை…”: மாரிமுத்து மறைவிற்கு வைரமுத்து இரங்கல்!
Comments are closed.