தமிழ் திரையுலகில் எப்போதுமே இரண்டு நட்சத்திர நடிகர்கள் முன்னிலை வகிப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. தியாகராஜ பாகவதர் – பி.யு.சின்னப்பா, எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல், அஜித் – விஜய் வரிசையில் அடுத்ததாக இணையப் போட்டி பலமாக இருந்து வருகிறது.
ஆனால், ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த நட்சத்திரங்களுக்கு இணையாக ஒருவரோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களோ கோலோச்சியதும் நிகழ்ந்திருக்கிறது. திரைப்பட வெற்றிகளின் சதவிகிதம் மற்றும் இன்ன பிற காரணங்களால் அவர்கள் மீதான வெளிச்சம் கொஞ்சம் குறைவு என்பதைத் தவிர, அவர்களைக் குறிப்பிடாமல் திரை வரலாற்றை எழுதுவது கடினம்.
அந்த வகையில் எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜி கணேசனுக்கு இணையாகப் பல வெற்றிகளைத் தந்ததோடு, தனக்கென்று தனிப்பட்ட ரசிக வட்டத்தையும் பெற்றிருந்தவர் ஜெமினி கணேசன். குடும்பப்பாங்கான கதைகளிலும், காதல் சித்திரங்களிலும், வித்தியாசமான பாத்திரங்களைக் கொண்ட படங்களிலும் அவரைக் காணலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியவர்.
அப்படிப்பட்ட ஜெமினியை ஒரு ‘ஆக்ஷன் ஹீரோ’வாக நான் உணர்ந்த படம் ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’.
ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று..!
தொண்ணூறுகளில் சென்னை தொலைக்காட்சி அலைவரிசையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழ் திரைப்படம் ஒளிபரப்பாகும். அது குறித்த அறிவிப்பு வெளியாகுமென்ற எதிர்பார்ப்போடு, இரண்டு நாட்களுக்கு முன்னதாக ‘எதிரொலி’ நிகழ்ச்சியைத் தூக்கக் கலக்கத்தோடு கண்டு ரசித்த நாட்கள் அவை.
அப்படித்தான் ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ படத்தைக் காண நேர்ந்தது. அதுவரை பார்த்த ஜெமினியின் படங்கள் சென்டிமெண்டில் ஊற வைத்த கதைகளைக் கொண்டிருந்தபோது ‘மனோகரா’, ‘மலைக்கள்ளன்’ பாணியில் அமைந்த அப்படம் வேறுபட்டு நின்றதில் வியப்பில்லை. போலவே, அதில் அவருக்கான சண்டைக்காட்சிகளும் அதிகம்.
அந்த வயதில், அப்படித்தான் ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ படம் குறித்த சித்திரம் மனதில் பதிந்தது. ’ஜெமினி ஆக்ஷன் படங்களிலும் நாயகனாக நடித்திருக்கிறாரா’ என்ற ஆச்சர்யத்தை விதைத்தது.
வள்ளுவர் சிலைக்கான போட்டி!
’எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ படத்தின் கதை இதுதான்.
வலியன் கோடு எனும் நாட்டை ஆண்ட மன்னர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட, அதன் திவான் ஆட்சி நிர்வாகத்தில் ஈடுபடுகிறார். மன்னரையும் அவரது மகளையும் மக்கள் பார்வையில் படாமல் தனியாக இருக்க வைத்து, அந்த திவான் கொடுங்கோலாட்சி நடத்துகிறார். அவருக்கு ஒரு மகன், ஒரு வளர்ப்பு மகன்.
மகனுக்கு மன்னரின் மகளை மணம் முடித்து அரியணையைப் பெற வைத்துவிட்டு, வளர்ப்பு மகனைக் கொண்டு ஆட்சி நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்வதே அந்த திவானின் திட்டம். ஆனால், அதற்கு குறுக்காக நிற்கின்றனர் வள்ளுவன் குன்றம் கிராமத்தினர்.
அந்த கிராமத்தின் தலைவரும் அவரது சகோதரரும் தங்கள் கிராமத்தில் வெள்ளம் வருவதைத் தடுக்க, ஆற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டுமென்று திவானிடம் சென்று தெரிவிக்கின்றனர். அவர் அதற்கு மறுப்பு தெரிவிப்பதோடு, அவர்கள் மன்னரை நேரில் சந்திக்க விடாமல் தடுக்கிறார்.
அதனால், தாங்களே அணையைக் கட்டிக்கொள்ள வள்ளுவன் குன்றம் மக்கள் தீர்மானிக்கின்றனர். அதற்கான பணிகளில் ஈடுபடும்போது ஒரு வள்ளுவர் சிலை கிடைக்கிறது. அதனைப் பாதுகாப்பாக ஓரிடத்தில் வைக்கிறார் அந்த கிராமத்தலைவர்.
ஆனாலும், விஷயம் எப்படியோ திவானுக்குத் தெரிந்து விடுகிறது. அதனைக் கைப்பற்றத் திட்டம் தீட்டுகிறார். தனது வளர்ப்பு மகனை ‘ஒற்று வேலை’ செய்ய வள்ளுவன் குன்றம் அனுப்புகிறார்.
வந்த இடத்தில், அந்த வளர்ப்பு மகன் கிராமத் தலைவரின் உறவினர் பெண்ணைக் காதலிக்கத் தொடங்குகிறார். அதேநேரத்தில், அந்த கிராமத் தலைவரின் சகோதரன் மன்னரின் மகளுடன் காதலுறவு கொள்கிறார்.
இது பற்றி திவானுக்குத் தெரிய வருகிறது. தன் மனதிலிருக்கும் கனவுக்கோட்டைகள் அழிந்துபோனாலும், நாட்டை ஆட்சி செய்யும் பொறுப்பை விட்டுத்தர மாட்டேன் என்று அவர் சில சதிச்செயல்களில் ஈடுபடுகிறார். தனது ஆட்களைக் கொண்டு அந்த வள்ளுவர் சிலையைக் கைப்பற்றுகிறார். வள்ளுவன் குன்றம் கிராமத்தினர் மீது அடக்குமுறைகளை அவிழ்த்து விடுகிறார்.
இறுதியில் என்னவானது? திவானின் கொட்டம் அடங்கியதா? வள்ளுவன் குன்றம் மக்கள் அடிமைத்தளையில் இருந்து விடுபட்டார்களா? மையப் பாத்திரங்களின் காதல் கனவுகள் நனவாகினவா என்பதைச் சொல்கிறது மீதமுள்ள திரைக்கதை.
கதை விலாவாரியாகத் திரையில் சொல்லப்பட்டாலும், வள்ளுவர் சிலையைக் கைப்பற்றுவதற்கான மோதலாகவே இத்திரைக்கதையின் மையப்புள்ளியைக் கருத வேண்டும்.
செறிவான உள்ளடக்கம்!
ஜுபிடர் பிக்சர்ஸ் சோமசுந்தரம் தயாரித்த ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ படத்தை இயக்கியவர் டி.பிரகாஷ் ராவ். மா.லட்சுமணன் எழுதிய மூலக்கதைக்குத் திரையுருவம் தந்து வசனம் அமைத்தவர் கலைஞர் மு.கருணாநிதி. இப்படத்திற்கு இசையமைத்தவர் டி.ஜி.லிங்கப்பா. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கு.மா.பாலசுப்பிரமணியம், ரா.பழனிச்சாமி. எஸ்.ரத்தினம் ஆகியோர் இதில் பாடல்கள் எழுதியிருந்தனர்.
ஒளிப்பதிவினை ஏ.வின்சென்ட், படத்தொகுப்பினை ஜி.டி.ஜோஷி, கலை வடிவமைப்பினை ஏ.கே.சேகரும், சண்டைக்காட்சி வடிவமைப்பினை ஷ்யாம் சுந்தரும் கையாண்டிருந்தனர்.
இவர்களது பங்களிப்பே ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ படத்தைச் செறிவான உள்ளடக்கம் கொண்டதாக ஆக்கியது.
வழக்கமாக, கலைஞரின் கதை வசனத்தில் அமைந்த படங்களில் எம்ஜிஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், கே.ஆர்.ராமசாமி போன்றவர்களே நாயகர்களாக இருந்தனர். அவர்களை தாண்டி ஜெமினி கணேசன் ஆர்ப்பரிப்பு மிக்க கலைஞரின் வசனங்களைப் பேசி நடித்ததும், கத்திச்சண்டை இட்டதும் நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தை அன்றைய ரசிகர்களுக்குத் தந்திருக்கும்.
இதில் சரோஜாதேவி, எம்.என்.நம்பியார், எம்.என்.ராஜம், டி.கே.பகவதி, ஆர்.நாகேந்திரராவ், கே.ஏ.தங்கவேலு, எம்.ஆர்.சந்தானம், ஏ.கருணாநிதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வில்லன்களில் ஒருவராக டி.கே.ராமச்சந்திரன் தோன்றியிருந்தார்.
’மணமெனும் வானிலே’, ‘என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே’ போன்ற பாடல்கள் இன்றும் சில ரசிகர்களால் கொண்டாடப்படுபவை.
இந்தப் படம் முழுக்க முழுக்க ஸ்டூடியோவுக்குள் படம்பிடிக்கப்பட்டபோதும், அணை கட்ட மக்கள் திரள்வது போன்று அமைக்கப்பட்ட டைட்டில் காட்சி போன்ற ஓரிரு இடங்கள் யதார்த்த உலகைக் காட்டின.
கதாபாத்திரங்களுக்குள் ஏற்படும் முரண், மோதல் போன்றவை திரைக்கதையில் அடுத்தடுத்து இரண்டு முறை இடம்பெற்றுக் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தினாலும், ‘ஒருமுறை பார்க்கலாம்’ என்ற வகையில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது இப்படம்.
ஆக்ஷன் நாயகனாக ‘ஜெமினி’!
ஒரு நடிகர் ஒரேமாதிரியான பாத்திரங்களில் தொடர்ந்து நடிக்கக் கூடாது. என்னதான் வெற்றிகள் தொடர்ந்து கிடைத்தாலும் கூட, அதனைச் செய்யவே கூடாது. வித்தியாசமான பாத்திரங்களில் தொடர்ந்து தன்னை வெளிப்படுத்தி, புதிய திசையில் பயணிப்பதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். ரசிகர்களை மனதளவில் அதற்குத் தயார்படுத்த வேண்டும்.
அந்த வகையில் வெவ்வேறுவிதமான பாத்திரங்களில் நடித்து தனக்கான இடத்தை வேறு எவராலும் நிரப்ப முடியாதவாறு இயங்கியவர் ஜெமினி கணேசன்.
வஞ்சிக்கோட்டை வாலிபன், அதிசய திருடன், பார்த்திபன் கனவு, வீரக்கனல், ஏழைப்பங்காளன் என்று சில படங்களில் ஆக்ஷன் நாயகனாகத் தன்னை வெளிப்படுத்தியவர் ஜெமினி கணேசன். ஆனாலும் காதல், நகைச்சுவை, குடும்பப் பாசத்தை மையமாகக் கொண்ட அவரது படங்கள் பெருவெற்றி பெற்ற காரணத்தால், அவரது ஆக்ஷன் பிம்பம் காலப்போக்கில் காணாமல் போனது.
எழுபதுகளுக்குப் பிறகு மாறிய முகம் மற்றும் உடல் தோற்றம், வயதுக்கேற்ற கதைகளைத் தேர்ந்தெடுக்க முனைந்த மனநிலை போன்றவை ஜெமினியின் படங்கள் மீது ரசிகர்கள் கொண்டிருந்த அபிமானத்தைக் குறைத்தன.
அதன்பிறகு ஏ செண்டர் ரசிகர்களை மனதில் வைத்து அவர் படங்கள் நடிக்கத் தொடங்கினார். அவற்றில் சில சர்ச்சைக்குரிய கதைக்கருவைக் கொண்டிருந்தபோதும் ரசிகர்களால் கவனிக்கப்படவில்லை.
அதனால், எண்பதுகளில் துளிர்த்த ரசிகக் குஞ்சுகளுக்கு ஜெமினி கணேசன் வெறுமனே ‘காதல் மன்னனாகவும்’, அவர் நடித்த படங்கள் ’சென்டிமெண்ட் சித்திரங்களாகவும்’ தென்பட்டதில் ஆச்சர்யமில்லை. அரிதாகச் சில நேரங்களில் ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ போன்ற திரைப்படங்கள் குறித்த தகவல்கள், அவர் குறித்து நம் மனதில் கட்டமைக்கப்பட்ட பிம்பங்களைத் தூள் தூளாக்கும். அந்த படங்களை முழுமையாகப் பார்த்து ரசித்துக் கொண்டாடுவதே, அவற்றில் அவர் தந்த பங்களிப்புக்கு நாம் அளிக்கும் மரியாதையாக இருக்கும்!
உதயசங்கரன் பாடகலிங்கம்
பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேல் சிறைகளில் இரவு, பகலாக சித்ரவதை: மருத்துவர் வேதனை!
தென் கொரியாவின் பாடல்களைக் கேட்ட வட கொரியா இளைஞருக்கு மரண தண்டனை!