”யானைக்குட்டியை பிடித்து கொண்டு அழுதிருக்கிறேன்” நெகிழும் பெள்ளி

சினிமா

நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட ’தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ’ என்ற ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை இன்று (மார்ச் 13) வென்றுள்ளது.

இந்நிலையில், ’தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவண குறும்படம் ஆஸ்கர் வென்றது குறித்து அதில் நடித்த பெள்ளி மற்றும் பொம்மன் தங்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

இது குறித்து பேசிய பெள்ளி “ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. யானை குட்டியை மட்டும் என் கையில் கொடுக்காமல் இருந்திருந்தால் இது எனக்கு கிடைத்திருக்காது. யானைக்குட்டி எங்களிடம் குழந்தைபோன்று பழகியிருக்கிறது.

அதை அப்படியே ஆவணப்படமாக எடுத்துவிட்டார்கள். இன்று விருது கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. எங்களின் முதுமலை முகாமிற்கே இது சந்தோசத்தை தருகிறது.

யானைக்குட்டிகளை வளர்ப்பதில் மிகுந்த கஷ்டங்களை சந்தித்தேன்.

வீட்டில் ஒரு கஷ்டம் என்றால் அதைப் பார்க்க முடியாது. இறப்புக்குக்கூட போக முடியாது. எங்களுடையே பிள்ளை நெருப்பில் எரிந்த போது கூட போக முடியாமல் யானைக்குட்டியை பிடித்து கொண்டு காட்டுக்குள் நின்று அழுதிருக்கிறேன்.

குட்டியும் ஒரு குழந்தை தானே. அதை விட்டு போக முடியாது. அதனை கூட்டிவந்து அதனுடைய இடத்தில் கட்டி வைத்துவிட்டுத்தான் என்னால் போக முடியும்.

அப்படி குட்டியை கூட்டி வந்து கட்டி வைத்துவிட்டு , அதனை பார்த்துக்கொள்ள வேறு ஒரு ஆள் வைத்துவிட்டு பிறகு தான் என்னுடைய பிள்ளையையே சென்று பார்த்தேன். நான் பெற்ற பிள்ளை இறந்தபோதுகூட மற்றவர்கள் தான் எடுத்துக்கொண்டு போனார்கள்.

என் கை உடைந்த போது கூட நான் குட்டியை விட்டு போகவில்லை. இப்படி கஷ்டப்பட்டுதான் ரகுவை வளர்த்தேன். ரகு வளர்ந்து வரும் போது தான் பொம்மி வந்தாள். அதன்பிறகு 7 மாதங்கள் வேலை செய்யாமல் இருந்தேன்.

பிறகு மீண்டும் என்னை வந்து வேலைக்கு சேர சொன்னார்கள். வருகிறவர்கள் எல்லோரும் எனக்கு யானைக்குட்டி எவ்வளவு பழக்கம் என்று கேட்பார்கள்.

அவை எனக்கு குழந்தைகள் என்று சொல்வேன். நான் சொல்கிற பேச்சை எல்லாம் கேட்கும்.

யானைக்குட்டிகளும் என்னுடைய பேத்தி , பேரனைப்போலத்தான் . இதுவரை அவற்றை நான் அடித்ததே இல்லை” என்று நெகிழ்ந்துள்ளார்.

மேலும், “ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது கொடுக்கும் மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. இவை அனைத்திற்கும் இயக்குநருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

ஆனால், இந்த நேரத்தில் யானை ரகு கூட இல்லையே என்றுதான் வருத்தமாக இருக்கிறது,” என்று பொம்மன் கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஆஸ்கரை வென்ற தமிழக குறும்படம்!

ஆஸ்கர் வென்ற தமிழக குறும்படம்: தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *