மம்முட்டி விட்டதை பிடித்த மகன்… துல்கர் சல்மான் ‘பான் இந்தியா’ ஸ்டாரான கதை!

சினிமா

உதயசங்கரன் பாடகலிங்கம்

துல்கர் சல்மான். இவரை மலையாளத் திரையுலகைச் சார்ந்தவராக மட்டும் அடையாளப்படுத்திவிட முடியாது. காரணம், ஒரு ‘பான் இந்தியா’ நட்சத்திரமாகத் தன்னை இவர் முன்னிறுத்தும் பாங்கு. இந்தி, தெலுங்கு, தமிழ் என்று தன்னைத் தேடி வரும் கதைகளின் தரத்தை அறிந்து, அதில் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியுமா என்ற கேள்விக்குப் பதில் அறிந்தபிறகே, அவர் வேறு மொழிப் படங்களில் நடிக்கிறார்.

அதே நேரத்தில் மலையாளப் படங்களில் நடிப்பதையும் தயாரிப்பதையும் இன்னொருபுறம் தொடர்ந்து வருகிறார். சமீபத்திய ஆண்டுகளில் அவரது வளர்ச்சி என்பது அளவிட முடியாததாக மாறியிருக்கிறது. அதேநேரத்தில் ‘பெருக்கமாக’ அது அமையவில்லை. அதுவே, அவரது வளர்ச்சியை உற்று நோக்கக் காரணமாகியிருக்கிறது.

‘திடீர்’ சினிமா ஆர்வம்!

பெற்றோர் அல்லது மூத்த உறவினர்கள் ஒரு துறையில் பிரபலமாக விளங்கும்போது, அக்குடும்பத்தைச் சேர்ந்த இளம் ஆணோ, பெண்ணோ அதில் ஈடுபடுவதென்பது வழக்கமானது. ஒருவர் கொண்டிருக்கும் பரிச்சயத்தை, பிரபல்யத்தை, அதனால் கிடைக்கும் வெகுமதிகளை வெகுகாலமாகக் காண்பதால், இயல்பாகவே அதனைக் கைக்கொள்ளும் பாங்கு வசப்படும்.

அதேநேரத்தில், மிகச்சில வாரிசுகள் அதே துறையில் நாம் கால் பதிக்கக் கூடாது என்று விரும்புவார்கள். அப்படியொரு மனிதனாகவே, மலையாளத் திரையுலகைச் சேர்ந்தவர்களால் அடையாளம் காணப்பட்டவர் நடிகர் துல்கர் சல்மான். ஏனென்றால், நடிகர் மம்முட்டியின் மகன் இவர் என்பது திரைத்துறையில் நுழைந்தபிறகே பெரும்பாலான ஊடகங்களுக்குத் தெரிந்தது. அதுவரை அவரது முகம் யாருக்கும் தெரியாது என்பதே உண்மை.

வழக்கமாக, திரைத்துறை பிரபலங்கள் தங்களது வாரிசுகளைத் திரையில் அறிமுகப்படுத்த ஆர்வப்படுவார்கள். ஒரு பாத்திரத்தின் சிறு வயதுக் காட்சிகளைக் காட்டுகையில் அவ்வாறு நடிக்க வைப்பார்கள். ஆனால், நடிகர் மம்முட்டி அப்படி துல்கரை எந்தப் படத்திலும் முன்னிறுத்தியதில்லை. ஒருவேளை மலையாளத் திரையுலகில் அப்படியொரு வழக்கத்தை எவரும் முன்னெடுக்காதது அதற்கான காரணமாக இருக்கலாம்.

பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பு, வெளிநாட்டில் ஐடி வேலை என்றிருந்த துல்கர் சல்மான் கவனம், 2010வாக்கில் திரைத்துறை பக்கம் திரும்பியது. அதுவரை பார்த்துவந்த வேலையை உதறிவிட்டு, சினிமாவில் அறிமுகமாகும் முடிவை அவர் மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக, உடனடியாக நடிப்பு பயிற்சியில் சேர்ந்தவர், அடுத்த சில மாதங்களிலேயே கதைகள் கேட்கத் தொடங்கினார்.

2012ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதியன்று துல்கர் நாயகனாக நடித்த ‘செகண்ட் ஷோ’ மலையாளப் படம் வெளியானது. ஒரு இளம் நடிகர் அறிமுகமாவதற்கு ஏற்ற கமர்ஷியல் படமாக அது இருந்தது. பிறகு வந்த அஞ்சலியின் ‘உஸ்தாத் ஹோட்டல்’, மிகச்சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிற திறன் துல்கருக்கு உண்டு என நிரூபித்தது.

தொடர்ந்து ஏபிசிடி, பட்டம் போலே, நீலாக்‌ஷம் பச்சைக்கடல் ஸ்வந்ந பூமி உள்ளிட்ட மலையாளப் படங்களில் நடித்தார் துல்கர் சல்மான். ஒன்றுக்கொன்று வேறுபட்ட காட்சியனுபவத்தைத் தருவதாக அவை இருந்தன.

பெங்களூர் டேஸ், விக்ரமாதித்யன், ஞான், 100 டேஸ் ஆஃப் லவ், சார்லி, கலி, கம்மாட்டிப்பாடம், ஆன்மரியா களிப்பிலானு, ஜோமோண்ட சுவிஷேசங்கள், காம்ரேட் இன் அமெரிக்கா என்று அடுத்தடுத்த ஆண்டுகளில் துல்கர் நடித்த படங்கள் வெற்றி தோல்விகளைத் தாண்டி, அவருக்கென்று தனிப்பட்ட ரசிகர்களை உருவாக்கித் தந்தன.

அதேநேரத்தில், தொடர்ந்து மலையாளப் படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்றோ, அதில் நம்பர் 1 இடத்தை பிடிக்க வேண்டும் என்றோ, துல்கர் சல்மான் யோசிக்கவில்லை. தந்தை மம்முட்டியின் வழியில், முதலில் தமிழில் அறிமுகமாக விரும்பினார். பாலாஜி மோகனின் ‘வாயை மூடி பேசவும்’ அதற்கான பாதையைக் காட்டியது.

உண்மையைச் சொன்னால், தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் அறிமுகமாகப் போவதாகச் செய்திகள் சில காலம் வந்தன. அதுவே அவரது முதல் படமாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. அதனைப் பொய்யாக்கும் விதமாகத் திடீரென்று ‘செகண்ட் ஷோ’வில் நடித்தார் துல்கர் சல்மான்.

அதனால், ‘வாயை மூடிப் பேசவும்’ பார்த்த தமிழ் ரசிகர்கள் பெரிய அளவில் குதூகலிக்கவோ அல்லது அதிர்ச்சியை வெளிப்படுத்தவோ இல்லை. ‘மம்முட்டி மாதிரி இல்லையே’ என்று அவரது நடிப்பு குறித்து ஒற்றை வரியில் தங்கள் விமர்சனத்தை முடித்துக் கொண்டார்கள்.

அதனால் விளைந்த எதிர்பார்ப்பின்மையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டார் துல்கர் சல்மான். தனக்கான அடுத்தடுத்த இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டார்.

எட்டுத் திக்கிலும் தடங்கள்!

மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’ படம் வெளியானபோது, இளம் ரசிகர்களுக்கு நெருக்கமானார் துல்கர் சல்மான். அதன் வழியே தமிழில் அவருக்குக் கிடைத்த அறிமுகமே, பிஜோய் நம்பியாரின் ‘சோலோ’ மாதிரியான படங்கள் மலையாளத்திலும் தமிழிலும் ஒரே நேரத்தில் தயாராகக் காரணமாக இருந்தது. ஆனால், அப்படத்தின் தோல்வி துல்கரை நிறையவே யோசிக்க வைத்தது.

2018ஆம் ஆண்டு கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடித்த ‘மகாநடி’ தெலுங்கில் வெளியானது. அதில் ஜெமினி கணேசனாக நடித்தார் துல்கர் சல்மான். அதுவே அவரது முதல் தெலுங்குப் படம்.

இருவருமே தோற்றம் சார்ந்து சம்பந்தப்பட்ட பிரபலங்களைப் பிரதிபலிக்காவிட்டாலும், தங்களது நடிப்பு மூலமாக அப்பாத்திரங்களை உயிர்ப்பித்திருந்தனர். அதுவே, அப்படத்தை ரசிகர்கள் கொண்டாடக் காரணமானது.

அதே ஆண்டு ‘கார்வான்’ மூலமாக இந்தியிலும் தடம் பதித்தார் துல்கர். அதில் மறைந்த இர்பான் கான் இன்னொரு நாயகனாக இடம்பிடித்தார். ‘யூடியூப்’ சென்சேஷனாக இருந்த மிதிலா பால்கர் நாயகியாக நடித்திருந்தார். ‘ரோடு மூவி’ வகைமையில் அமைந்த அப்படம் துல்கருக்கு நல்லதொரு அறிமுகத்தைத் தந்தது.

தொடர்ந்து ‘தி ஸோயா ஃபேக்டர்’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘ஹே சினாமிகா’, ‘சீதா ராமம்’, ‘சுப்’ படங்கள் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகின. அவற்றில் சீதா ராமம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இரண்டும் ‘ப்ளாக்பஸ்டர்’ வெற்றியைப் பெற்றன. இதர படங்கள் துல்கருக்கு நல்லதொரு பெயரையும் புகழையும் கொடுத்தன. இந்த காலகட்டத்தில் மலையாளத்தில் ஓரிரு படங்களில் நடித்தார் துல்கர் சல்மான்.

‘குரூப்’ போன்ற மலையாளப் படங்கள் தெலுங்கு, தமிழ், இந்தியில் ‘டப்’ செய்யப்பட அவரது பன்மொழி அறிமுகமே வழி வகுத்தது. சமீபத்தில் வெளியான ‘கல்கி 2898 ஏடி’யில் கூட துல்கர் வரும் காட்சிகளுக்கு விசில் பறந்தது.

இந்த வரவேற்பின் அடுத்த கட்டத்தைப் பறைசாற்றும்விதமாக, விரைவில் ‘லக்கி பாஸ்கர்’ நான்கு மொழிகளில் வெளியாகவிருக்கிறது. ‘ஆகாசம் லோ ஒக தாரா’ படம் குறித்த அறிவிப்பு இன்று வந்துள்ளது. இவ்விரண்டுமே தெலுங்கில் தயாராகின்றன.

புதிய பாதையில்..!

ஒவ்வொரு மொழியிலும் வெளியாகும் படங்கள் எப்படிப்பட்டவை, அவை எந்த ட்ரெண்டை பின்பற்றுகின்றன? அவற்றில் இருந்து விலகி நின்று, நம் மீதான கவனிப்பை அதிகப்படுத்த என்ன செய்ய வேண்டும்? இது போன்ற பல கேள்விகளுக்குத் தெளிவாகப் பதில்கள் வரையறுத்துக் கொண்டு செயல்படுகிறார் துல்கர் சல்மான்.

அதனால், வழக்கமான மலையாளப் பட பட்ஜெட்டில் இருந்து கொஞ்சம் அதிகமான பொருட்செலவில் அமைந்த படங்களையே அவர் தேர்வு செய்கிறார். அதில் கமர்ஷியல் அம்சங்கள் உள்ளனவா என்றும் பார்க்கிறார். நிச்சயமாக, இது சாதாரண விஷயம் கிடையாது.

பிரபாஸ், ராணா, யாஷ், சுதீப், அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் என்று பல நாயகர்கள் தங்களை ‘பான் இந்தியா’ நட்சத்திரங்களாக முன்னிறுத்தி வருகின்றனர். அதற்கேற்றாற் போல, அனைத்து மொழி ரசிகர்களும் ஏற்றுக்கொள்ளும்படியான கதைகளைத் தேடிப் பிடித்து நடிக்கின்றனர்.

கமர்ஷியல் வெற்றிகளை முன்னிறுத்தும் மசாலா படங்களில் தொடர்ந்து நடிப்பதைக் காட்டிலும் கடினமானது அப்பணி. அது மாதிரியான முயற்சிகள் தோல்வியடைந்தால் பெரிய சரிவை ‘கேரியரில்’ ஏற்படுத்தும்.

ஆதலால், ஒவ்வொரு மொழியிலும் மிக வித்தியாசமான கதைகள், திரைக்கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார் துல்கர் சல்மான். அதனால் கிடைக்கும் பெயரையும் புகழையும் கொண்டு, தனது படங்களை அம்மொழியில் ‘டப்’ செய்து வெளியிட அவர் விரும்புவதில்லை. இதுவும் வழக்கத்திற்கு மாறானதொரு விஷயம் தான்.

தொண்ணூறுகளில் தமிழிலும் தெலுங்கிலும், பின்னர் இந்தியிலும் அறிமுகமானார் மம்முட்டி. பிறகு ’டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர்’ போன்ற படங்களில் நடித்து ‘சிறந்த நடிகர்’ எனும் பெயரை ஈட்டினார்.  ஆனாலும், ‘பான் இந்தியா ஸ்டார்’ ஆகும் வாய்ப்பு அவருக்குக் கிட்டவில்லை. அப்போது அவர் சாதிக்காததை மகன் எட்டியிருக்கிறார் என்பது பெருமைப்படத்தக்க விஷயம்.

ஒருகாலத்தில் ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் தெலுங்கிலும் இந்தியிலும் புகழ் பெற்றிருந்தனர். அங்கு அவர்கள் நடிக்கும் படங்கள் வெற்றிகளைப் பெற்றாலும், அவ்வப்போது சில படங்களில் மட்டுமே தலைகாட்டினர். மீதமுள்ள நேரங்களில் அவர்களது கவனம் தமிழிலேயே இருந்தது.

இன்று, அந்த பாதையைப் பிருத்விராஜ், பகத் பாசில் உட்படப் பல மலையாள நட்சத்திரங்கள் பின்பற்றுகின்றனர். தனுஷ், சுதீப் போன்றவர்கள் அதனை வெகுகாலத்திற்கு முன்பே செயல்படுத்தத் தொடங்கிவிட்டனர். அவர்களில் ஒருவராக இருந்தாலும், வேறுபட்ட திரை ஆளுமையாக வளர்ந்து வருகிறார் துல்கர் சல்மான். தொடர்ந்து தனக்கான தனிப்பாதையில் பயணிக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செங்கோட்டையனை நோக்கி கேள்வி: அதிமுக தலைமை கழகத்தில் பரபரப்பு!

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இருந்த கட்டபொம்மன் சிலை எங்கே?

+1
1
+1
2
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *