விமர்சனம்: டிரைவர் ஜமுனா – ’ட்ரிப்’ ஓகேயா?

சினிமா

‘படத்தோட ஸ்கிரீன்ப்ளே ஜெட் வேகத்தில் இருந்தது, சைக்கிளில் ஏறி ஊர் சுற்றுவது போல இருந்தது, ஆமை போல நகர்ந்தது’ என்று விதவிதமாக கூறுவது விமர்சகர்களின் வழக்கம்.

அதை அச்சுப் பிசகாமல் பின்பற்றி, ஏதேனும் ஒரு வாகனத்தை மையமாக வைத்தோ அல்லது பயணத்தை மையமாக வைத்தோ கதைக்களத்தை அமைத்தால் இன்னும் பரபரப்பு கூடுமே என்று படைப்பாளர்கள் யோசிப்பதுண்டு.

அதற்கு மாறாக, ஒரு பயணம் ஒருவரது வாழ்வில் எத்தகைய மாற்றங்களை உண்டுபண்ணியது என்று சொல்ல முயல்பவர்களும் உண்டு.

டிரைவர் ஜமுனா’ தந்திருக்கும் இயக்குனர் கின்ஸ்லின் எந்த வகையில் சேர்த்தி என்று தெரியவில்லை. ஆனால், ஒரு பயணத்தின் மூலமாகப் பல பாத்திரங்களின் வாழ்வைத் தடம் புரட்டிப் போடும் ஒரு கதையைச் சொல்ல முயன்றிருப்பதென்னவோ உண்மை.

காரில் ஏறிய கதை!

கால் டாக்சி ஓட்டுநராகப் பணியாற்றும் ஜமுனா எனும் இளம்பெண். அவரது தந்தை உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத நிலை; ஏனென்றால், திடீரென்று ஒருநாள் அவர் காணாமல் போய்விட்டார். தாயோ பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு, செவிலியர் துணையில்லாமல் நடமாட முடியாத நிலைமை.

ஒரேயொரு தம்பியோ, பெங்களூருவில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகத் தகவல். வீட்டின் பத்திரம் அவனிடம் இருப்பதால், ஜமுனாவால் பணம் ஏதும் புரட்ட முடியாத சூழல். இதற்கு நடுவே, ஒரு பெண்ணாக இருந்துகொண்டு கால் டாக்சி ஓட்ட வேண்டுமா என்ற உறவினர்களின் கேள்விகள் வேறு அவரைச் சுற்றி வளைக்கிறது.

இந்த நிலையில், ஒருநாள் கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேருடன் அவர் பயணிக்க நேர்கிறது. அவர்களோ, ஒரு முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டுக்கு கொலை செய்யப் புறப்பட்டிருக்கின்றனர்.

அதேநேரத்தில், தனது மகனையும் மருமகளையும் கொன்ற கோபத்தில், கூலிப்படையைச் சேர்ந்த அந்த நபர்களை கூண்டோடு பிடிக்கத் திட்டமிடுகிறார் ஒய்வுபெற்ற ஒரு காவல் துறை அதிகாரி. அவருக்குத் தற்போது பணியிலிருக்கும் அதிகாரிகள் உதவுகின்றனர். அதனால், ஜமுனாவின் கார் பயணிக்கும் காஞ்சிபுரம் டூ இசிஆர் சாலைகளில் பழியாய் காவல் துறை காத்துக் கிடக்கிறது.

வழியில் கூலிப்படையினரின் உண்மை முகம் ஜமுனாவுக்குத் தெரிய வர, தங்களைக் காவல் துறை கண்ணி வைத்துப் பிடிக்க காத்திருப்பது கூலிப்படையினருக்குத் தெரிய வருகிறது. இரு தரப்புக்குமான ஆடுபுலி ஆட்டத்திற்கு நடுவே, பயந்து நடுங்கிச் செல்லாமல் அந்தப் பயணத்தைத் தொடர்கிறார் ஜமுனா. அது ஏன் என்பதுடன் படம் முடிவடைகிறது.

திரைக்கதையின் தொடக்கத்திலேயே ஒரு கால் டாக்சியை காட்டுவதன் வழியாக, கதையை காரில் ஏற்றி அனுப்புகிறோம் என்று குறிப்பால் உணர்த்திவிட்டார் இயக்குனர் கின்ஸ்லின்.

அதனால், வழக்கமான கமர்ஷியல் படங்களில் தென்படும் பாட்டு, பைட், காமெடி வகையறாக்கள் இதில் அறவே இல்லை. அதேநேரத்தில் சினிமாத்தனம் இல்லாத யதார்த்தமான படம் என்றும் இதனைச் சொல்லிவிட முடியாது.

Driver Jamuna Movie Review

ட்விஸ்ட்களே கதி!

ஜமுனாவாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷை சுற்றியே மொத்த திரைக்கதையும் நகர்கிறது. அதில் தவறேதும் இல்லை. அவரது பாத்திரத்திற்குத் தந்த முக்கியத்துவத்தை கூலிப்படையினராக வருபவர்களுக்குத் தரவில்லை.

மிக முக்கியமாக யாரை, எதற்காக கொல்கிறோம் என்பதே தெரியாமல் சொன்ன வேலையைச் செய்யும் ரோபோ போலவே அவர்களது வாழ்க்கை அமைந்திருக்கும் என்பதைத் தெளிவுறச் சொல்லவில்லை. அதுவே கடைசி நேர ‘ட்விஸ்ட்’ முன்பாதி திரைக்கதையுடன் பொருந்த முடியாமல் திணறக் காரணமாகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகளுக்குத் தக்கவாறு உணர்வுகளைப் பிரதிபலித்தாலும், முழுமையானதொரு பெண் கார் ஓட்டுநராக அவர் திரையில் தென்படவில்லை. ஒரு கல்லூரிப் பெண் அல்லது ‘ஒயிட் காலர்’ வேலையில் இருப்பவர் என்பது போலவே தோற்றமளிக்கிறார். அது, அவர் ஏற்ற கதாபாத்திரத்தின் தன்மைக்கும் துணை நிற்கிறது.

ஆடுகளம் நரேன் பாத்திரத்தின் அடிப்படைத்தன்மைதான் இத்திரைக்கதையின் மிகப்பெரிய பலம். ஒரு முன்னாள் எம்.எல்.ஏ.வாக வரும் அவர், தான் கூலிப்படையினரால் குறி வைக்கப்படுவதை எதிர்கொள்ளும் காட்சிகள் எல்லாம் ‘ஆஹா’ ரகம். அவரது மகனாக வரும் மணிகண்டன் கூட, நல்லதொரு குணசித்திர நடிகர் வாய்த்துவிட்டார் எனும் நம்பிக்கையைத் தருகிறார்.

இளையபாண்டி, கவிதா பாரதி சம்பந்தப்பட்ட காட்சிகள் நகைக்க வைக்கின்றன. இசையமைப்பாளர் சான்ஸ் தேடும் அபிஷேக்கும் தன் பங்குக்கு கொஞ்சமாக சிரிக்க வைக்கிறார். ஸ்ரீரஞ்சனியின் நடிப்பு ‘அம்மா சென்டிமெண்ட்’டை அளவுடன் காட்ட உதவியிருக்கிறது. கூலிப்படையினராக வருபவர்கள் ஒவ்வொருவரது பாத்திரத்தையும் வெவ்வேறு விதமாக வடிவமைத்திருப்பது அருமை.

டான் பாலாவின் கலை இயக்கம் காட்சியமைப்புடன் கலந்து நிற்கிறது. கோகுல் பினோயின் ஒளிப்பதிவு ஒரு சாதாரண கால் டாக்சி பயணத்தைக் கண்ணில் காட்டியிருக்கிறது. ஆனாலும், திரைக்கதையில் நிரம்பியிருக்கும் சினிமாத்தனத்தை மீறி திரையுடன் நம்மை ஒன்ற வைக்க முயற்சித்திருக்கிறது ராமரின் படத்தொகுப்பு. இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசை, முன்பாதியில் மவுனத்திற்கு கொஞ்சமாக இடம் விட்டிருக்கிறது. பின்பாதியில் அவ்வாறு நிகழவே இல்லை.

Driver Jamuna Movie Review

இறுதியாக வரும் பத்து நிமிட பகுதிகளுக்காக, மொத்த திரைக்கதையையும் செதுக்கியிருக்கிறார் இயக்குனர் கின்ஸ்லின். ட்விஸ்ட்களே கதி என்று அனைத்தையும் மொத்தமாக ஒரே இடத்தில் கொட்டியிருப்பதுதான் ’கொஞ்சம் தவிர்த்திருக்கலாமோ’ என்று சொல்ல வைக்கிறது.

அதேபோல, மொத்த கதையும் ஐஸ்வர்யாவின் தந்தை பாத்திரத்தைச் சுற்றியே எழுதப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க, ’கடைசி நேர ஆச்சர்யத்திற்காக’ வெறும் வசனங்களால் அப்பாத்திரத்தின் தன்மையை விளக்காமல் இன்னும் கொஞ்சம் காட்சிகளை சேர்த்து வலு கூட்டியிருக்கலாம். குறைந்தபட்சமாக, இடைவேளைக்குப் பிறகாவது அந்த திசை நோக்கி திரைக்கதையை நகர்த்தியிருக்கலாம்.

பெரும்பகுதி காரிலேயே நிகழ்வதால், இதனை ‘லோ பட்ஜெட்’ படம் என்று கருதிவிடவும் வாய்ப்பு அதிகம். படக்குழு அதனைத் தவிர்க்க விரும்பாமலிருந்தது ஆச்சர்யம்.

ட்ரிப் ஓகேயா..?

’ரோடு மூவி’ என்றழைக்கப்படும் பயணத்தை மையமாக கொண்ட படங்கள், முடிவில் சில கதாபாத்திரங்களின் மன மாற்றங்களையாவது குறைந்தபட்சம் கோடிட்டுக் காட்டும். இதில் அம்மாற்றங்கள் அடிக்கோடிட்டுச் சொல்லப்படவில்லை. அதேநேரத்தில், படத்தின் முடிவுக்குத் தகுந்தவாறு முன்பாதியில் கதையில் சில விஷயங்கள் பொதியப்பட்டிருப்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

முழுக்க கமர்ஷியலாகவும் இல்லாமல், கலையம்சமிக்க படம் என்ற வகையிலும் சேர்த்தி இல்லாமல், இரண்டுக்கும் நடுவே பயணிக்கிறது ‘டிரைவர் ஜமுனா’ திரைக்கதை.

’என்னடா ஒவ்வொரு கேரக்டரை புடம் போட்டு விளக்குறாங்களே’ என்று அயர்ச்சியுறுபவர்கள், ’ட்ரிப் கேன்சல்’ என்று பாதியிலேயே வெளியேறுவதற்கு வாய்ப்பு அதிகம். அதனால், வெறுமனே ஒரு ‘த்ரில்லர்’ பார்த்தால் போதும் என்றிருப்பவர்களுக்கு இப்படம் பிடிக்கும்.

உதய் பாடகலிங்கம்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கும்பகர்ண மும்பை !?

மின் இணைப்புடன் ஆதார்: கடைசி தேதி எப்போது?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0