ஊடக உலகை நெறிப்படுத்தும் ஆற்றல் dootha web series review
‘யாவரும் நலம்’ படம் மூலமாகத் தமிழ் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் விக்ரம் கே.குமார். அதற்கு முன் ‘அலை’ தந்து காணாமல் போனவர், அடுத்த படமான ‘யாவரும் நலம்’ வழியே வீழ்ச்சியை வெற்றி கொண்டார். இஷ்க், மனம், ஹலோ, கேங்க் லீடர், தேங்யூ என்று தொடர்ந்து தெலுங்கில் படங்களை இயக்கிய இவர், இடையே சூர்யாவை நாயகனாக வைத்து ‘24’ தந்தார். தற்போது இவரது இயக்கத்தில் நாக சைதன்யா, பிரியா பவானி சங்கர், பார்வதி திருவோத்து, பிராச்சி தேசாய், ஜெயபிரகாஷ், பசுபதி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘தூதா’ வெப்சீரிஸ் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.
அமானுஷ்யமும் த்ரில்லும் நிறைந்த இந்த வெப்சீரிஸ் பத்திரிகையுலகைப் பின்னணியாகக் கொண்டது. எப்படி இருக்கிறது ‘தூதா’ தரும் அனுபவம்?
யார் இந்த தூதுவன்?
பத்திரிகையாளராகத் திகழும் சாகர் வர்மா அவதூரி (நாக சைதன்யா), புதிதாகத் தொடங்கப்படும் ‘சமாசார்’ தினசரியின் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். அவரது மனைவி பிரியாவும் (பிரியா பவானி சங்கர்) ஒரு பத்திரிகையாளர். இந்த தம்பதியின் மகள் ஆறு வயதான அஞ்சலி. இவர்களது வாழ்க்கை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்கிறது. இந்த நிலையில், இரண்டாவது முறையாகக் கர்ப்பமுறுகிறார் பிரியா. அதனால், வேலையில் இருந்து விலகி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
சமாசார் வெளியீட்டிற்கு முன்னதாக, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சார்பில் ஒரு விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில், சாகர் குடும்பத்துடன் பங்கேற்கிறார். அவரது உதவியாளர் அம்ருதா (பிராச்சி தேசாய்), மூத்த பத்திரிகையாளர் சந்திரமூர்த்தி (ஜெயபிரகாஷ்) உட்பட அந்நிறுவனம் சம்பந்தப்பட்ட அனைவரும் அதில் கலந்துகொள்கின்றனர்.
அப்போது, ’பத்திரிகைத் துறைக்கான சித்தாந்தங்களும் கோட்பாடுகளும்’ என்ற நூலை சாகருக்குப் பரிசளிக்கிறார் சந்திரமூர்த்தி. அதனைக் கண்டு நகைக்கிறார் சாகர். காரணம், அவர் பத்திரிகை தர்மம் போன்ற விஷயங்களில் ஈடுபாடு காட்டியதே இல்லை.
இரவில் குடும்பத்துடன் சாகர் காரில் வீடு திரும்புகிறார். வழியில், ஓரிடத்தில் அவரது கார் நிற்கிறது. பெட்ரோல் காலி என்றறிந்ததும், அவர் ‘அப்செட்’ ஆகிறார். அருகில் இருக்கும் உணவகத்தில் இருந்து ஏதேனும் உணவு வாங்கிவிட்டுச் செல்லலாம் என்று காரை விட்டு இறங்குகிறார்.
அந்த உணவகத்தில், அவர் உட்கார்ந்திருக்கும் மேஜையில் ஒரு தினசரியின் கிழிந்த துண்டு இருக்கிறது. அதில் ஒரு குறுக்கெழுத்துப் புதிர் இருக்கிறது. அதனை வாசிக்கும் சாகர் திடீரென்று அதிர்ச்சி அடைகிறார்.
அதில், சாகரின் இறந்துபோன நாயின் பெயர் என்னவென்ற கேள்வி உள்ளது. அந்த தினசரியில் அதற்கடுத்த நாளின் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், அவரது மனைவியும் மகளும் காரினுள் இருப்பதை அறிந்து சாகர் பதற்றமடைகிறார். அவர் காரை நோக்கிச் செல்வதற்குள், ஒரு லாரி அதன் மீது மோதுகிறது. அஞ்சலியும் பிரியாவும் கீழே நிற்க, காரில் இருக்கும் நாய் மடிகிறது.
அதற்கடுத்த நாள் காலையில், அந்த நாய்க்கு ‘ஹிபோபொடமஸ்’ என்று பெயர் வைத்ததாகச் சாகரிடம் சொல்கிறார் அஞ்சலி. அந்த எழுத்துகள் அவரது கைவசமுள்ள அந்த குறுக்கெழுத்துப் புதிரோடு பொருந்துகிறது. அதுவரை, அவர்கள் அந்த நாயை ‘ஏ’ என்றுதான் அழைத்து வந்திருக்கின்றனர். அந்த நொடியில், தன்னை ஏதோ ஒரு அமானுஷ்ய ஆற்றல் பின்தொடர்வதாக அறிகிறார் சாகர்.
நண்பர் சார்லஸ், மகள் அஞ்சலி, புதிதாக அறிமுகமான யூடியூபர் கிரண் என்று தொடர்ந்தாற்போலத் தன் வாழ்க்கையோடு தொடர்புடைய ஒவ்வொருவரும் மரணிப்பது கண்டு அதிர்ச்சியடைகிறார். அவருக்கும் உதவியாளர் அம்ருதாவுக்கும் இடையிலான அந்தரங்க உறவும் அம்பலமாகிறது. அதனைத் தொடர்ந்து, மனைவி பிரியா அவரை விட்டுப் பிரிகிறார். அனைத்தும் அவருக்கு முன்பே தெரிய வருகிறது.
அதையெல்லாம் தாண்டி, மனைவி பிரியாவைக் கொலை செய்யப் போகும் நபரின் புகைப்படத்தோடு ஒரு துண்டு அவரது கையில் கிடைக்கிறது. அந்த நபரை இதுவரை சாகர் நேரில் பார்த்ததில்லை. பிரியாவும் அந்த நபரைத் தான் பார்த்ததில்லை என்கிறார். இதற்கு நடுவே, தன்னைத் தொடரும் அந்த பத்திரிகைச் செய்திகள் ‘தூதா’ என்ற தினசரியினுடையது என்று அறிகிறார் சாகர். 1960களிலேயே அந்த தினசரியின் செயல்பாடு நின்றுவிட்டது.
ஆனால், அதோடு தொடர்புடைய நபர் அல்லது ஏதோ ஒரு சக்திதான் தன்னை ஆட்டுவிக்கிறது என்பதை அறிகிறார். அதனை அறிய முற்படுகிறார்.
அதில் சாகருக்கு வெற்றி கிடைத்ததா? அவரது மனைவி பிரியாவின் உயிர் தப்பியதா என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘தூதா’வின் மீதி. யார் அந்த தூதுவன் என்று தெரியவரும்போது, நமக்கு ஒரு முழுமையான வரைபடம் காணக் கிடைக்கிறது. அதன் வழியே, எட்டாவது அத்தியாயத்தின் முடிவும் துல்லியமாகத் தெரிய வருகிறது.
வித்தியாசமான வேடம்
நடுத்தர வர்க்க இளைஞர், சாகசங்கள் புரியும் காதலர், தனது பரம்பரையின் பின்னணியை அறியும் கோடீஸ்வரர் என்று இளமை ததும்பும் பாத்திரங்களில் நடித்துவந்த நாக சைதன்யாவை முற்றிலும் வித்தியாசமாகக் காட்டுகிறது ‘தூதா’. இதில் கொஞ்சம் வில்லத்தனம் கலந்த வேடத்தை அவர் ஏற்றிருக்கிறார். தமிழ் ‘டப்பிங்’ மட்டுமே உறுத்தலாக உள்ளது என்பதைத் தாண்டி, அவரது நடிப்பில் குறை சொல்லும் அம்சங்கள் பெரிதாக இல்லை.
பிரியா பவானிசங்கருக்கு இதில் அம்மா வேடம். அதையும் தாண்டி, சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருக்கும் பெண்மணி என்ற அம்சத்தையும் திறம்பட வெளிப்படுத்தியிருக்கிறார்.
பிராச்சி தேசாய்க்கும் பார்வதிக்கும் இதில் சம அளவு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அதற்கேற்ப முன்பாதியில் பிராச்சியும் பின்பாதியில் பார்வதியும் வந்து போகின்றனர்.
தணிகல பரணி, அனிஷ் குருவில்லா, தருண் பாஸ்கர், ராஜ கவுதம், ஸ்ரீகாந்த் முரளி, சைதன்யா காரிகாபதி, காமாட்சி பாஸ்கரலா, ஸ்ருதி ஜெயன் உள்ளிட்ட பலர் இதில் நம் கவனத்தை ஈர்க்கும் வகையில் தோன்றியுள்ளனர். அவர்களில் ஜெயபிரகாஷ், ரவீந்திரா விஜய், பசுபதி, ரோகிணி ஆகியோர் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள்.
வெங்கட் பதி, பூர்ணா பிரக்யா, ஸ்ரீபால் ரெட்டி, என்.ஜி.தாமஸ், வெங்கடேஷ் தொண்டபடி ஆகியோர் உடன் இணைந்து கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் இயக்குனர் விக்ரம் குமார். அவர்களது எழுத்தாக்கத்தில் ஆங்காங்கே வரும் திருப்பங்கள் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் நிற ஜெர்கின் அணிந்த நபரைக் காட்டும்போதும், கிளைமேக்ஸில் பிரியாவைக் கொல்ல வரும் நபரின் பின்னணியைச் சொல்லும்போதும், நம்மை ‘வாவ்’ சொல்ல வைக்கின்றன விக்ரம் குமார் குழுவினரின் உத்திகள்.
ஒளிப்பதிவாளர் மிகோலஜ் சைகுலா இந்தக் கதைக்கு ஏற்ப ஒவ்வொரு பிரேமையும் வடித்துள்ளார். அவற்றில் திரைப்படத்தின் உள்ளடக்கத்திற்கான செறிவு இல்லை; அதேநேரத்தில், சாதாரண காணொளியைக் காண்கிற எண்ணத்தையும் உருவாக்கவில்லை. இடைப்பட்ட வெளியில், ‘இதுதான் வெப்சீரிஸுக்கான காட்சி இலக்கணம்’ என்று சொல்லும்படியாகத் தன் உழைப்பைக் கொட்டியிருக்கிறார்.
நவீன் நூலியின் படத்தொகுப்பானது, வழக்கமான வெப்சீரிஸ் பார்முலாவுக்கு வருமாறு காட்சிகளைக் கோர்த்திருக்கிறது. டைட்டில் காட்சியில் வரும் விஎஃப்எக்ஸ், நமக்கு இதுவே கதை என்பதைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறது.
கடற்கரையோரத்தில் அமைந்த லைட் ஹவுஸ், அங்கிருக்கும் பிரிண்டிங் எந்திரம், அறை முழுவதும் குவிந்து கிடக்கும் காகிதக் குப்பை, பண்ணை வீடு பின்னணியில் நிகழும் கொலை போன்றவற்றைக் காட்சிப்படுத்த உதவியிருக்கிறது தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவனின் பங்களிப்பு. இன்னும் ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, ஒலி வடிவமைப்பு என்று பல விதங்களில் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது ‘தூதா’.
திரைக்கதையைப் பொறுத்தமட்டில், ஒவ்வொரு எபிசோடையும் பரபரபரக்க வைக்கும் வேகம் இதில் இல்லை. ஆனால், ரொம்பவே நிதானமாகக் கதை நகர்ந்தால் போதும் என்றிருக்கிறது இயக்குனர் விக்ரம் குமாரின் காட்சியாக்கம்.
நினைவுக்கு வரும் ஹீரோயிசம்
ஷங்கரின் ‘அந்நியன்’, ‘ஜென்டில்மேன்’ பாணி படங்கள் லஞ்சம் ஊழலுக்கு எதிரான நாயகனை முன்னிறுத்தின. மகராஜனின் ‘அரசாட்சி’ படத்தில் முறைகேடான வழக்கறிஞர்கள் தொடர்ந்து தண்டிக்கப்படுவதாகத் திரைக்கதை நகரும். ‘ரமணா’வில் விதவிதமான அரசு அதிகாரிகளின் லஞ்ச உலகைக் காட்டியிருப்பார் ஏ.ஆர்.முருகதாஸ். நிர்மல் குமாரின் ‘சலீம்’ படத்தில் கூட மருத்துவமனையில் நிகழும் அவலங்கள் சொல்லப்பட்டிருக்கும்.
அதே பாணியில் ஒவ்வொரு துறையிலும் முறைகேடுகளைத் தனித்தனியாகச் சொல்லும் அளவுக்குச் சில படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவை தனிப்பட்ட மனிதர்களின் வெறுப்புகளாகவோ அல்லது இந்த சமூகத்தை நெறிப்படுத்த முனையும் ஒரு மனிதனின் கோபமாகவோ திரையில் வெளிப்பட்டுள்ளது.
அந்த வரிசையில் ஒழுங்கு பிறழ்ந்த பத்திரிகையாளர்களை ஒரு கோட்டில் நிற்க வைத்திருக்கிறது ‘தூதா’வின் கதை. ஹீரோயிசம் மிக்க கதைகள் நம் நினைவுக்கு வரும் வகையில் இதனைப் படைத்திருக்கிறார் விக்ரம் குமார். ஆனால், அதனை ஒரு அமானுஷ்ய ஆற்றலின் துணையோடு சொல்ல முயன்றிருப்பதுதான் இதனை வேறுபடுத்திக் காட்டுகிறது. அவர் இயக்கிய ‘யாவரும் நலம்’ கூட இதே பாணியிலான திரைக்கதையையே கொண்டிருக்கும். கூடவே, ‘மனம்’ படம் கூட நம் நினைவுக்கு வருகிறது.
திரைக்கதையில் ஆங்காங்கே சில முடிச்சுகளை இட்டு, அதனை விடுவிக்கும் தீர்வுகளையும் சுவாரஸ்யமாகத் தருகிறார் விக்ரம் குமார். ஆனால், அதற்கு இடைப்பட்ட கால இடைவெளியே இக்கதையில் ‘அடுத்தது என்ன’ என்ற கேள்வியைப் புதைத்து வைக்கிறது.
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் இதர நுட்பங்களின் வழியே காட்சியாக்கத்தில் வேகத்தை ஊட்டும் வித்தை இதில் கிடையாது. அது சிலருக்குக் குறையாகத் தோன்றலாம். அதையும் மீறி, கிடைத்த பட்ஜெட்டில் வழக்கத்திற்கு மாறானதொரு கதையைச் சொன்ன வகையில் தனித்து நிற்கிறது ‘தூதா’. சிலருக்கு இதுவே ‘கிளிஷே’வாக தோன்றலாம். அப்படிப்பட்டவர்களும் கூட, இந்த சீரிஸில் சில எபிசோடுகளை ரசிப்பது நிச்சயம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதய் பாடகலிங்கம்
மோகன் லாலின் புது அவதாரம்: ‘மலைக்கோட்டை வாலிபன்’ டீசர் இதோ!
மழை வெள்ளம்: ஓஎம்ஆரில் மக்கள் சாலை மறியல்!
dootha web series review