‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்கக்கூடாது எனத் தமிழக அரசுக்கு உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘லவ் ஜிகாத்’ கருத்தை மையப்படுத்தி இயக்குநர் சுதிப்தொ சென் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை இயக்கியுள்ளார். தி கேரளா ஸ்டோரி என்ற படத்தில் அதா சர்மா, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி, சித்தி இத்லானி , சோனியா பாலானி நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் 5 ஆம் தேதி மலையாளம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியானது.
டிரெய்லரில் சர்ச்சை
டிரெய்லரில் இந்து, கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றப்பட்டது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
மேலும் மதம் மாற்றப்பட்ட பெண்களை மேற்காசிய நாடான சிரியா மற்றும் தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானுக்கு அழைத்து செல்லப்பட்டு தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அடிமைகளாக்குவதும், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்வது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.
இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் எதிர்கட்சியான காங்கிரஸ் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
உளவுத் துறை எச்சரிக்கை
இந்நிலையில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தினை தமிழகத்தில் வெளியிடுவது குறித்து மாநில உளவுத் துறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தப் படத்திற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு இருக்கும் நிலையில், தமிழகத்தில் வெளியிட்டால் எதிர்ப்புகள் உருவாகும்.
எனவே, தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை அனுமதிக்க வேண்டாம் என மாநில உளவுத் துறை பரிந்துரைத்துள்ளது.
தடை கோரிய மனு தள்ளுபடி
முன்னதாக கேரளா ஸ்டோரி படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், வழக்கறிஞர் நிஜாம் பாஷா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் கே.எம். ஜோசப் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (மே 3) விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் தரப்பில், “இந்த படத்தின் கதை வெறுப்பு பேச்சை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. பிரச்சார நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிடப்பட்டது.
வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இந்த படத்திற்குத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டுமானால் நீங்கள் தணிக்கை வாரியம் போன்ற சம்பந்தப்பட்ட துறைக்கு தான் செல்ல வேண்டும்.
இதற்காக உயர்நீதிமன்றத்திற்கு செல்லாமல் நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகியது தவறு. எனவே இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மோனிஷா
ஐபிஎல் டிக்கெட் விற்பனை: நள்ளிரவில் போலீஸ் நடத்திய பேட்டிங்!
பக்தர்கள் வெள்ளத்தில் மீனாட்சி அம்மன் தேரோட்டம்!