டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்: விமர்சனம்!

Published On:

| By uthay Padagalingam

வசீகரிக்கிறதா இயக்குனர் கௌதம் படம்?!

’இப்ப ஒரே ஒரு புல்லட் செலவு, என் செலவு’, ’என் கண்ணு வேணும்னு கேட்டியாமே’, ’அது லவ் தானே ஜெஸ்ஸி, அதை மட்டும் சொல்லு’ என்று மிகச்சாதாரணமாக எழுதப்பட்டு அசாதாரணமாகக் கொண்டாடப்பட்ட வசனங்களை இயக்குனர் கௌதமின் படங்களில் நாம் காண முடியும். அவரது படங்களில் பல பாத்திரங்கள் ஆங்கிலத்தில் நீண்ட நெடிய வசனங்களைப் பேசும். ஆனாலும், அவரது படங்களின் தலைப்பு மட்டும் தூய தமிழில் அமைக்கப்பட்டிருக்கும்.

அந்த வரிசையில் இருந்து விலகி முதன்முறையாக ஆங்கிலத்தில் தனது படத்திற்குப் பெயர் வைத்திருக்கிறார் கௌதம். அதுவும் தமிழில் அல்ல, மலையாளத்தில். அந்தப் படத்தின் பெயர் ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’. இதன் நாயகன் மம்மூட்டி.

கோகுல் சுரேஷ், விஜி வெங்கடேஷ், சுஷ்மிதா பட், மீனாட்சி உன்னிகிருஷ்ணன், வினீத், விஜய் பாபு, சித்திக், லேனா, ஷைன் டாம் சாக்கோ, ரகுநாத் பலேரி உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர். தர்புகா சிவா இதற்கு இசையமைத்திருக்கிறார்.

சரி, ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ தரும் காட்சியனுபவம் எப்படிப்பட்டதாக உள்ளது?

ஒரு டிடெக்டிவ் பார்வையில்..!

ஐம்பது வயதைத் தொட்ட ஒரு டிடெக்டிவ். காவல் துறையில் இருந்து ஓய்வு பெற்றபிறகு, துப்பறிவதைத் தொழிலாகக் கொண்டதாகச் சொல்கிறார். நகரம் முழுக்க ’உதவியாளர்கள் தேவை’ என்று நோட்டீஸ் ஒட்டுகிறார். ஆனால், நேர்காணலுக்கு வரும் எவரையும் தேர்ந்தெடுப்பது கிடையாது. வீட்டு உரிமையாளருக்கு வாடகை பாக்கி. அதனைக் கொடுப்பதற்காக, சிலரை ரகசியமாகக் கண்காணித்துப் பணம் பறிக்கிறார். இப்படிப்பட்ட டிடெக்டிவ்விடம் உதவியாளராகச் சேர்கிறார் ஒரு இளைஞர்.

அந்த டிடெக்டிவ் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர், அவரிடம் ஒரு லேடீஸ் பர்ஸை கொடுக்கிறார். ‘இதோட உரிமையாளரைக் கண்டுபிடிச்சு கொடுத்துடு’ என்கிறார். அதனைச் செய்தால் வாடகையைக் கொடுக்க வேண்டாம் என்று சொல்ல, அதனை ஏற்கிறார் அந்த டிடெக்டிவ்.

அந்த பர்ஸுக்கு சொந்தக்காரர் யார் என்று அறிகிறார். ஆனாலும், அதனைத் திருப்பிக் கொடுக்க முடிவதில்லை. காரணம், அந்த பர்ஸ் தொலைந்த தினத்தில் இருந்து அப்பெண்ணைக் காணவில்லை.

அப்பெண்ணைத் தேடிச் செல்லும் பயணத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன அவரது காதலன் குறித்த தகவல் கிடைக்கிறது. அவரைத் தேடி அந்த டிடெக்டிவ்வும் அவரது உதவியாளரும் செல்கின்றனர்.

அதன்பிறகாவது, பர்ஸை தொலைத்த அந்தப் பெண்ணை இருவரும் கண்டுபிடித்தனரா, இல்லையா என்று சொல்கிறது ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ படத்தின் மீதி.

இந்தக் கதையில் டொமினிக் எனும் பாத்திரத்தில் மம்மூட்டியும், விக்னேஷ் எனும் பாத்திரத்தில் கோகுல் சுரேஷும் வீட்டு உரிமையாளர் மாதுரியாக  விஜி வெங்கடேஷும் நடித்திருக்கின்றனர்.

அரை நூற்றாண்டுக்கு முன்னர் மேடையேற்றப்பட்ட ஷெர்லக் ஹோம்ஸ் வகையறா நாடகம் பார்த்த உணர்வைத் தருகிறது இப்படத்தின் திரைக்கதை. அதேநேரத்தில், ஒரு நேர்த்தியான கௌதம் வாசுதேவ் மேனன் படம் பார்த்த திருப்தி கிடைத்தபாடில்லை.

ஒரு டிடெக்டிவ்வின் பார்வை எப்படிப்பட்டது என்று நாயக பாத்திரம் விவரிக்கிற இடம் வசீகரிக்கிறது. அதே போன்ற வசீகரிப்பைச் சில காட்சிகளில் விதைக்கத் தவறியிருப்பதால், ரசிகர்கள் கலவையான உணர்வுகளைப் பெறும் வகையில் அமைந்துள்ளது இப்படம்.

திருப்தி தருகிறதா?

’வேட்டையாடு விளையாடு’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘அச்சம் என்பது மடமையடா’ போன்ற ஆக்‌ஷன் க்ரைம் த்ரில்லர் படங்களை பார்த்த கௌதமின் ரசிகர்களுக்கு, ‘இப்படம் திருப்தி தருமா’ என்றால் ‘ப்ச்’ என்றுதான் பதிலளிக்க வேண்டும். அதேநேரத்தில், அவர் தந்த ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’, ‘ஜோஷ்வா இமைபோல் காக்க’ படங்களை விடச் சிறப்பான அனுபவத்தைத் தருகிறது இப்படம்.

மம்மூட்டியின் நடிப்பைப் பற்றித் தனியே சொல்லத் தேவையில்லை. ‘லைவ் சவுண்ட்’டில் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது இப்படைப்பு. அந்த ஒரு விஷயமே, இப்படத்தின் தரம் எப்படிப்பட்டது என்ற எண்ணத்தை மீளாய்வு செய்யத் தூண்டுகிறது.

கோகுல் சுரேஷுக்கு இதில் பெரிய பாத்திரமில்லை. அதேநேரத்தில், தொண்ணூறுகளில் வந்த பல மலையாளப் படங்களில் முகேஷ், சுரேஷ் கோபி, ஜெயராம் வந்தது போன்று இதில் இடம்பெற்றிருக்கிறார். அவ்வளவுதான்.

விஜி வெங்கடேஷ், சுஷ்மிதா பட் நடிப்பு எளிதில் வசீகரிக்கிறது. இது போக வினீத், விஜய்பாபு, லேனா, ஷைன் டாம் சாக்கோ என்று சில தெரிந்த முகங்கள் ஓரிரு காட்சிகளில் தோன்றி மறைகின்றன.

ஒளிப்பதிவாளர் விஷ்ணு தேவ் தனது ‘ஹேண்டி மூவ்மெண்ட்கள்’ மூலமாக, இரண்டாம் பாதியில் திரையில் விறுவிறுப்பை உணர வைக்கிறார். முதல் பாதியிலோ அந்நுட்பம் அதற்கு எதிர்மாறான உணர்வை ஏற்படுத்துகிறது.

படத்தொகுப்பாளர் ஆண்டனி திரையில் கதையின் அடுத்த கட்ட நகர்வுகளை முன்வைத்து மொத்தப் படத்தையும் தொகுத்திருக்கிறார். அதனால், கதை விரிவதில் எந்த இடர்ப்பாடுகளும் இல்லை.
தயாரிப்பு வடிவமைப்பாளர் ஷாஜி நடுவில் இக்கதைக்குத் தேவையான களங்களைத் திரையில் காட்டியிருக்கிறார்.

இசையமைப்பாளர் தர்புகா சிவாவின் பாடல் ஒன்றுக்கு மம்மூட்டி நடனமாடியிருக்கிறார். இதுபோல, வழக்கத்திற்கு மாறான சில விஷயங்கள் இப்படத்தில் உண்டு. பின்னணி இசையிலும் சிவா சிறப்பானதொரு பங்களிப்பைத் தந்திருக்கிறார்.

’டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ படத்தின் மூலக்கதை, டாக்டர் நீரஜ் ராஜன் எழுதிய நாவலைத் தழுவியது. அதனால் நீரஜ் மற்றும் சூரஜ் ராஜன் உடன் இணைந்து இயக்குனர் கௌதம் இதன் திரைக்கதையை எழுதியிருக்கிறார்.

‘தி கமிஷனர் படத்தை நீ பார்த்திருக்கியா’ என்பது போன்ற வசனங்களை சுரேஷ்கோபியின் மகனான கோகுலிடம் கேட்பது முதல், ‘டேய் அது டம்மி துப்பாக்கி’ என்று மம்மூட்டி அலறுவது வரை பல இடங்களில் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. அதேநேரத்தில், அவை மிக எளிமையானதாகவும் இருக்கின்றன. அதனால், அவ்வசனங்கள் சில காலம் கழித்து சமூகவலைதளங்களில் கொண்டாடப்படலாம்.

‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ படத்தை முழுக்க நன்றாக இல்லை என்றோ அல்லது அருமையான படம் என்றோ விமர்சிக்க முடியாது. இவ்விரண்டுக்கும் இடையேயான பரப்பில் ஒரு புள்ளியில் தொக்கி நிற்கிறது இப்படம்.

கொஞ்சம் வித்தியாசமான கதைக்கருவைத் தேர்ந்தெடுத்த கௌதம், அதற்கேற்ற வகையில் திருப்பங்களுடன் கூடிய காட்சிகளைத் தொகுத்திருக்கலாம். அது நிகழாத காரணத்தால், மலைப்பாதையில் பயணிப்பது போன்று ஒவ்வொரு திருப்பத்திற்குப் பின்னும் எந்த மாற்றமும் இல்லாமல் நேராகச் சில காட்சிகளைக் கடக்க வேண்டியிருக்கிறது.

ஒரு த்ரில்லர் படத்தில் வில்லன் பாத்திரம் வலுவாக எழுதப்பட்டிருக்க, காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த படத்தில் அதற்கான வாய்ப்புகளை வீணடித்திருக்கிறார் இயக்குனர் கௌதம். அதேநேரத்தில், இதன் கிளைமேக்ஸ் தமிழில் வெளியாகித் தோல்வியுற்ற நட்சத்திர இயக்குனர் ஒருவரின் படத்தை வேறுமாதிரியாகப் பிரதிபலிப்பதாக உள்ளது. அவ்வாறில்லாமல், இதன் திரைக்கதையில் இன்னும் செறிவு கூட்டியிருக்க முடியும்.

இப்படத்தின் பட்ஜெட், உள்ளடக்கம், அது உருவாக்கும் தாக்கம் எல்லாமே மிகச்சிறிய பரப்பாகத் தெரிகிறது. கௌதமின் முந்தைய படங்களைப் பார்த்த ரசிகர்களுக்கு, அக்காரணிகளே இப்படத்தை ரசிக்கத் தடையாக இருக்கும்.

அதையும் மீறி ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ படம் வசீகரிப்பதற்கு ஒரே காரணமாக இருப்பது மம்மூட்டியின் நடிப்பு மட்டுமே. அவரது சமீபகாலப் படங்கள் போன்று முழுமையாக வேறுபட்ட அனுபவத்தைத் தராதபோதும், வழக்கமான கமர்ஷியல் படங்களில் இருந்து கொஞ்சம் விலகியே நிற்கிறது.

’மம்மூட்டிக்காக’ அல்லது ‘கௌதமுக்காக இப்படத்தைப் பார்ப்பேன்’ என்று சில ரசிகர்கள் சொல்லக்கூடும். அவர்களைப் போன்றவர்களைத் திருப்திப்படுத்துகிற விஷயங்கள் இதில் குறைவு. ஆனாலும், ‘ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை’ என்பது போன்று அவர்கள் விசிலடிக்கச் சில தருணங்களைத் தந்திருக்கிறது இப்படம். அவற்றை ரசிக்கத் தயாராக இருப்பவர்கள் இதனைக் கண்டு ரசிக்கலாம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share