‘தி கோட்’ – மோகன் ரீ இன்னிங்ஸ் ஆக அமையுமா ?

Published On:

| By Selvam

‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்துல விஜய்யோட நண்பர்களா பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் வர்றாங்க. இன்னொரு விஜய் கேரக்டரோட அந்தப் படத்துல வைபவ், யோகிபாபு இருக்காங்க.

சினேகா, லைலாவோட ஹீரோயினா மீனாட்சி சவுத்ரி வர்றாங்க. இது போக இன்னும் பலர் நமக்கு திரையில் ஆச்சரியம் தரலாம். ஆனால், நடிகர் மோகன் இந்தப் படத்தில் வில்லனாக வருவது நிச்சயம் இந்த படத்தோட சிறப்புகளில் ஒன்றாக இருக்கும்.

எண்பதுகளில் ஒரு வெள்ளி விழா நாயகனாக திரையுலகில் உலா வந்தவர் மோகன். அதேநேரத்தில் மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்ததால் அங்கும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

1977ஆம் வருஷம் பாலு மகேந்திரா கன்னடத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த ‘கோகிலா’ படத்தை இயக்கினார். அதுல அவரோட ப்ரெண்ட் கேரக்டர்ல அறிமுகமானவர் மோகன். அதற்குப் பிறகு, ’மடாலசா’ என்கிற மலையாளப் படத்துல ஒய்.விஜய்யுடன் நடித்தார்.

அதில் , மோகன் ஒரு ஆன்டி ஹீரோ. அதற்குப் பிறகு ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தோட தெலுங்கு ரீமேக்கில் ஹீரோவா நடித்தார் மோகன். இந்த மூன்று படங்களுமே ஹிட்.

இந்த காலகட்டத்தில் சில கன்னடப் படங்களில் ஒரு பாத்திரமாக வந்து போனார் மோகன். அப்போது, தமிழில் அவரை அறிமுகப்படுத்த விரும்பினார் இயக்குனர் மகேந்திரன். அந்தப் படம், சுஹாசினி ஹீரோயினா அறிமுகமான ‘நெஞ்சத்தை கிள்ளாதே’. ஆனால் அது ரிலீஸ் ஆகும் முன்னரே, பாலு மகேந்திராவின் ‘மூடுபனி’ வெளியாகி விட்டது.

1981இல் வெளியானது இயக்குனர் துரையின் ‘கிளிஞ்சல்கள்’. அந்த படத்தோட வெற்றி, கமர்ஷியல் சினிமாவுல மோகனுக்கு தனி பாதைய உருவாக்கித் தந்தது என்றே சொல்லலாம்.

பிறகு, இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் அறிமுகமான ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் நாயகனாக நடித்தார் மோகன். அந்தப் படம் பட்டிதொட்டியெங்கும் அவரை தெரிய வைத்தது.

நாயகன் ஆன கொஞ்ச காலத்துலயே, ’தீராத விளையாட்டுப் பிள்ளை’யில் இரட்டை வேடங்கள்ல நடித்தார் மோகன்.
மணிவண்ணன் இயக்குனராக அறிமுகமான ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தில் மனைவியைப் புறக்கணிக்கும் கணவனாக வந்து போனார்.

அந்த காலகட்டத்தில் வெளியான ‘விதி’ படத்தில் கூட அப்படியொரு பாத்திரத்தில் நடித்தார் மோகன்.
‘நூறாவது நாள் ‘படத்தில் அவர் தான் வில்லன். தனக்கென ஒரு இமேஜ் இல்லாது விதவிதமான கேரக்டர்ல நடிக்கத் தயாராக இருந்தார் மோகன்.

அவர் எப்படி நடித்தாலும், ரசிக்கத் தயாராக இருந்தது அவரது ரசிகர் கூட்டம். காரணம், மோகன் படங்களில் கதை நிச்சயம் வித்தியாசமா இருக்கும் என்கிற நம்பிக்கை. அதை அறிந்த அவரும் பல படங்களில் நடித்தார். குறைவான நாட்களில் தயாரிக்கப்பட்ட ரீமேக் படங்களில் நாயகன் ஆனார். அதில் பெரும்பாலானவை சின்ன பட்ஜெட் படங்கள்.
அந்த காலகட்டத்தில் ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன், ராம.நாராயணன் இயக்கிய படங்களில் தொடர்ந்து நடித்தார் மோகன்.

மோகன் நடித்த படங்களில் பாடல்கள் எல்லாமே ஹிட் என்கிற நிலைமை எண்பதுகளில் இருந்தது. இளையராஜாவின் இசை அந்த மாயாஜாலத்தை செய்தது.

நான் பாடும் பாடல், 24 மணி நேரம், ஓ மானே மானே, உன்னை நான் சந்தித்தேன், உதயகீதம், பிள்ளை நிலா, குங்குமச் சிமிழ், இதய கோவில் என்று மோகன் படப் பாடல்கள் இன்றும் பலரால் ரசிக்கப்படுகிறது.

ஸ்ரீதர் இயக்கிய ‘தென்றலே என்னைத் தொடு’, மணிரத்னத்தின் ‘மௌனராகம்’, சுந்தர்ராஜனின் ‘மெல்லத் திறந்தது கதவு’, பாலு மகேந்திராவின் ‘ரெட்டை வால் குருவி’ போன்ற படங்கள் இன்றும் கொண்டாடப்படுது.

காமெடி, ரொமான்ஸ், த்ரில்லர், ஆக்‌ஷன் என வெவ்வேறு ஜானர் படங்கள்ல நடித்துள்ளார் மோகன். இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் எனப் பலர் அவர் மூலமாக அறிமுகமாகியுள்ளனர். ஆனாலும், தொண்ணூறுகளில் அவருடைய நடிப்பு வாழ்க்கையில் ஒரு இடைவெளி உருவானது.

1991இல் வெளியான ‘உருவம்’ படத்திற்குப் பிறகு தமிழில் அன்புள்ள காதலுக்கு, சுட்டபழம், ஹரா என மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ளார் மோகன்.

2016 – இல் தெலுங்கில் வெளியான ‘அப்பாயிதோ அம்மாயி’ படத்தில் ஹீரோவோட அப்பா கதாபாத்திரத்தில் நடித்தார்.இந்த இடைவெளியை நிரப்பும் வகையில் அவருடைய ரீ எண்ட்ரி படங்கள் பிரமாண்ட தயாரிப்புகளாக அமையவில்லை. அந்தக் குறைய நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ள ஒரு திரைப்படம் தான் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’.

மோகன் பல படங்கள்ல ஹீரோவா நடித்திருந்தாலும், அந்த கேரக்டர்கள் வழக்கமானதா இருந்ததில்லை. அதுவே, இந்தப் படத்துலயும் அவர் நடிக்கிற வில்லன் கேரக்டர் புது அனுபவத்தைத் தரும் என்கிற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

’தி கோட்’ படத்தில் மோகன் எத்தனை சீன்களில் வருகிறார் என்பது அவருடைய ரசிகர்களுக்கு முக்கியமில்லை. திரையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்த போகிறார் என்பதே அவங்களோட எதிர்பார்ப்பு.
ஆக, ‘தி கோட்’ பட ரிலீஸுக்காக மோகன் ரசிகர்களும் வெயிட்டிங்..!

– உதய் பாடகலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மக்களவை தேர்தல்… சென்னையில் நடுத்தர மக்கள் அதிகளவில் ஆதரவு: உதயநிதி பேச்சு!

சம்பளத்த காணோம் ’ஜி’ : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share