சினிமாவில் வெற்றிகள் மட்டுமே அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்க அடிப்படை காரணமாகும். அப்படிப்பட்டதொரு வாய்ப்பு அமையப்பெற்றவர் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி 2013 ஆம் ஆண்டு ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லி.
2016-ல் விஜய் நடித்த தெறி, 2017 ல் மெர்சல், 2019-ல் பிகில் என மூன்று படங்களை இயக்கியவர் அட்லி. வணிக ரீதியாக இந்த மூன்று படங்களும் திரையரங்குகளில் கல்லா கட்டினாலும் அட்லியின் அதிகப்படியான செலவுகளால் தயாரிப்பு செலவு திட்டமிட்டதை காட்டிலும் அதிகமானது.
நடிகர் விஜய் அட்லிக்கு முழுமையான ஆதரவு நிலையில் இருந்ததால் தயாரிப்பாளர்கள் அட்லியை கட்டுப்படுத்த முடியாத கையறு நிலையில் தவித்தனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில் அட்லி இயக்கத்தில் தெறி படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மூலமாக அட்லி இயக்கத்தில் புதிய படங்களை தயாரிக்க வேண்டாம், தொழில்ரீதியாக ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதன் காரணமாக அட்லிக்கு தமிழ் திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போதே தெலுங்கில் படம் இயக்கும் முயற்சியை மேற்கொண்டார் அட்லி. எதுவும் கைகூடி வராத நிலையில், ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்தப் படத்தின் தயாரிப்பில், படப்பிடிப்பு என எல்லா மட்டங்களிலும் அட்லியுடன் முரண்பட்டே தயாரிப்பு தரப்பு படம் முடிந்தால் போதும் என்ற மனநிலையில் தயாரிப்பாளர்கள் இருப்பதாக கூறப்பட்டது.
படம் வெளியாகும் முன்னரே அடுத்த கட்ட நகர்வாக தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. சம்பளம் மட்டுமின்றி லாபத்தில் பங்கும் வேண்டும் என்று அட்லி தரப்பு கேட்டதால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமலும், சுமுக முடிவை எட்டாமலும் முடங்கியது.
370 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட ஜவான் திரையரங்குகள் மூலம் 1200 கோடி ரூபாய் வரை மொத்த வசூல் செய்து தொடர் தோல்வி படங்களின் மூலம் முடங்கியிருந்த இந்தி திரையுலகை நிமிர வைத்தது.
அட்லி இந்தியாவின் குறிப்பிடத்தக்க இயக்குநர் என ஊடகங்கள் முன்நிறுத்தியது. புஷ்பா பட வெற்றிக்கு பின் இந்தி திரையுலகில் பிரபாஸ் போன்று காலூன்ற முயற்சித்து வந்த அல்லு அர்ஜூன், அட்லி இயக்கத்தில் படம் நடிக்கும் பேச்சுவார்த்தை மீண்டும் தூசி தட்டப்பட்டது. இந்தநிலையில் அட்லி, அல்லு அர்ஜூன் படம் கைவிடப்பட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக தயாரிப்பு வட்டாரத்தில் நாம் பேசியபோது,
“இந்தி, தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் வெற்றிகரமான இயக்குநருக்கான சம்பளம் என்ன என்பதை தீர்மானிப்பதில் உறுதியாக இருந்ததால் அட்லி எதிர்பார்த்த 100 கோடி ரூபாய் சம்பள கனவு பொய்யாகி போனது என்பதுடன் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பையும் இழந்திருக்கிறார்.
அட்லி இயக்கத்தில்அல்லு அர்ஜூன் நடிக்கும் படம் கைவிடப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானாலும். அதனை அட்லி, அர்ஜூன் தயாரிப்பு நிறுவனம் மறுக்கவில்லை. படம் கைவிடப்பட்டதற்கான காரணம் அட்லியின் சம்பளம் மட்டுமல்ல ஆந்திர மாநில அரசியல் மாற்றம் காரணம்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் அல்லு அர்ஜூன் சந்திரபாபு நாயுடு கட்சிக்கு எதிராக, YSR காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளார். இதனால் எதிர்வரும் காலங்களில் அல்லு அர்ஜூன் படங்களுக்கான வரவேற்பு, வசூல் நிலவரங்கள் மாறக்கூடும் என்பதனால் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் படம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
புஷ்பா – 2 பட வெளியீட்டுக்கு பின் அன்றைய சூழல், படத்தின் பட்ஜெட், இயக்குநர் சம்பளம் சரியாக வரும் பட்சத்தில் இந்த கூட்டணி சார்பில் படம் தயாராக கூடும்” என்கின்றனர் அட்லி, அல்லு அர்ஜூன் தயாரிப்பு வட்டாரத்தில்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிகாலையில் ஆட்டோ ரேஸ் – பறிபோன 2 உயிர்கள்!
ராகுல் ராஜினாமா… வயநாட்டில் பிரியங்கா போட்டி!