டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடியில் திரையிட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ ஃப்லிண்டாஃபின் கிரிக்கெட் வாழ்க்கை, 2022இல் அவருக்கு நேர்ந்த விபத்தில் இருந்து அவர் மீண்டு வந்தது எப்படி போன்ற விஷயங்களைத் தொகுத்த ஆவணப் படம் ஒன்று தயாராகி வருகிறது.
இந்த 90 நிமிடங்கள் கொண்ட ஆவணப் படத்தில் ஃப்லிண்டாஃபின் வாழ்க்கை, கிரிக்கெட் பயணம், கிரிக்கெட் வர்னணையாளராக அவர் மாறியது எப்படி?, அதற்கு பின்பு இங்கிலாந்து லையன்ஸின் பயிற்சியாளராக அவர் மாறிய கதை போன்றவைகள் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆவணப் படத்திற்கான பணிகளை இயக்குநர் ஜான் டோவர் சென்ற ஆண்டே தொடங்கிவிட்டார். இந்த ஆவணப் படத்தின் சாராம்சம் குறித்து வந்த அதிகாரப்பூர்வ வெளியீட்டில், ‘ ஃப்லின்டாஃபின் அசாதாரணமான கிரிக்கெட் வாழ்க்கை, அவர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற இரண்டு ஆஷஸ் சீரிஸ், இங்கிலாந்து நாட்டின் கிரிக்கெட் அடையாளமாக அவர் உருவானது, 2022யில் அவருக்கு நிகழ்ந்த கார் விபத்து, அதிலிருந்து அவர் மீண்டு வந்ததே இந்த ஆவணப் படத்தின் சுருக்கம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்ட்ரூ ஃப்லிண்டாஃப் ‘டாப் கியர்’ என்கிற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக 2019 – 2022யில் பணியாற்றினார். இந்த சமயத்தில் டிசம்பர் 2022யில் நடந்த கார் விபத்தில் ஃப்லிண்டாஃபின் முகம், விலா எலும்பு ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதற்குப் பிறகு அந்த நிகழ்ச்சியை பிபிசி நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
– ஷா