‘இதயம் ஒரு கோயில்’- இந்தப் பாட்டை இளையராஜா எழுதியது ஏன் தெரியுமா?

சினிமா

இசையுலகில் பிதாமகனாய் வலம் வரும் இசைஞானி இளையராஜா முதன்முதலாக எழுதிய, ’இதயம் ஒரு கோயில்’ பாடல் இன்றைக்கும் 80 ஸ் கிட்ஸுக்கு தேசிய கீதமாக இருக்கிறது.

“திறமை என்பது கடவுள் கொடுக்கும் ஒன்று. அது பெற்ற தாய், தந்தைகூட கொடுக்க முடியாது. ஜென்மங்களைக் கடந்து கடவுள் ஆசீர்வாதம் உள்ளவர்களுக்கு மட்டும் திறமைகள் வந்து சேரும்” என்பார் தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அது, இவ்வுலகில் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நிச்சயம் இசைஞானி இளையராஜாவுக்கு நூறு சதவிகிதம் பொருந்தும். எந்தக் கலையானாலும் அதனுடன் ஒன்றிச் செல்லக்கூடியவர்களால் மட்டுமே அதில் கரை காண முடியும்.

இசையை மிகவும் நேசித்த இளையராஜா, இதில் கரையை மட்டும் அல்ல, சிகரத்தையே தொட்டிருக்கிறார். அவரால், இவ்வுலகத்துக்கு ஆயிரக்கணக்கான பாடல்கள் கிடைத்திருக்கின்றன. இன்னும் கிடைத்து வருகின்றன.

தமிழ் மொழி மட்டுமல்லாது, பிற மொழிகளிலும் இசையில் சாதித்து சகாப்தம் படைத்தவர் இளையராஜா மட்டுமே. அதனால்தான் அவர், இந்திய திரையுலக வரலாற்றில் அசைக்க முடியாத இசை பிரம்மாவாக இருக்கிறார். அவர் இசையில் உருவான பாடல்கள் கடந்த, இன்றைய தலைமுறையினர் மட்டுமல்ல, எதிர்கால தலைமுறையினரும் கேட்டு மகிழும் வகையில் சாகாவரம் பெற்றது.

இப்படி, இசையுலகில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்திய இசைஞானி, வெறும் இசைப் பணியுடன் மட்டும் நின்றுவிடவில்லை. ஒரு பாடகராய், பாடலாசிரியராகவும் வலம் வந்தவர், இளையராஜா. அவர் பாடிய பாடல்கள் இன்றும் ரசிகர்களுக்கு அதிகம் சந்தோஷத்தைத் தந்துகொண்டிருக்கின்றன.

மேலும், அவர் எழுதிய பாடல்களின் வரிகளும் மற்ற கவிஞர்களுக்கு உதாரணமாய் திகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஆனால் இவையிரண்டையும் அவர் விரும்பிச் செய்யவில்லை. பாடல் எழுதியதும், பாட்டு பாடியதும் அவருக்கு எதிர்பாராமல் அமைந்ததே. இதுகுறித்து அவர் நிறைய இடங்களில் சொல்லியிருக்கிறார். இந்த நிலையில், அவர் முதன்முதலாகப் பாடல் எழுதியது குறித்து இங்கு பார்ப்போம்…

இளையராஜாவின் முதல் பாடல்!

இயக்குநர் மணிரத்னத்தின் ‘இதயக்கோயில்’ படத்துக்கான இதயம் ஒரு கோயில் பாட்டுச் சூழல் குறித்து அப்போது இளையராஜாவிடம் விளக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ‘தன் காதலியின் திருமணத்தில் பாடகனான காதலன் பாடல் பாட வேண்டும். அதேநேரத்தில், அவர்கள் இருவருக்கும் இடையிலான காதலைப் பற்றியும் வரிகளில் சொல்ல வேண்டும். ஆனால், கேட்பவர்களுக்கு அது பொதுவான பாடலாகத் தோன்றவும் வேண்டும்’ எனப் பாட்டின் சூழல் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலுக்கேற்ற பாடல் வேண்டும் என எம்.ஜி.வல்லபனிடம் கேட்டார், இளையராஜா. அவர், ‘ஆடிவரும் தென்னங்கீற்று’ என்பதுபோல வரிகளை எழுதியிருந்தார். ஆனால், அந்த வரிகள், இளையராஜாவுக்கு பொருத்தமாகத் தெரியவில்லை.

இதையடுத்து இளையராஜாவே, அம்பாளான தேவியைப் பாடுவது போலவும் காதலியைப் பாடுவதாகவும் அமைத்துப் பாடலை எழுதினார்.
‘இதயம் ஒரு கோயில் – அதில்
உதயம் ஒரு பாடல்!
இதில் வாழும் தேவி நீ! – இசையை
மலராய் நாளும் சூட்டுவேன்!’

என்று அவர் எழுதிய பாடல்தான், இன்றும் 80இஸ் கிட்ஸ் காதலர்களின் தேசிய கீதமாக இருக்கிறது. மீராவும் கண்ணனும் சேரவில்லை. ஆனால், மீரா கண்ணனுக்கான காதலியாக என்றும் போற்றப்படுகிறாள். அதுபோன்றுதான் நீயும் நானும் சேரவில்லை. வேறுவேறு பாதையில் சென்றாலும் நீயும் நானும் மனதளவில் காதலர்கள் என்பதை இப்பாடல் மூலம் தெளிவுபடுத்தியிருப்பார்.

இளையராஜா வரிகளைப் பயன்படுத்திய கவிஞர்கள்!

எத்தனையோ பாடலாசிரியர்களை உருவாக்கிய இளையராஜாவுக்கு ஒருபோதும் பாடல் எழுத வேண்டும் என்ற ஆசை இருந்ததில்லையாம். அதேநேரத்தில், ‘மச்சானைப் பார்த்தீங்களா’ போன்று அவரிடம் தோன்றும் சில வரிகளை, பாடலாசிரியர்களிடம் பல்லவியாகச் சொல்லி அதை எழுதியவர்களும் உண்டாம். அதில் கவிஞர் கண்ணதாசன், வாலி ஆகியோர் அவருடைய வரிகளைப் பல்லவியாகப் பயன்படுத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள்.

அவர்கள் மட்டுமல்ல, இளையராஜாவுடன் பயணித்த அனைத்து நபர்களும் வெற்றிபெற்றவர்கள்தான். அதனால்தான் அனைவருடைய இதயங்களிலும் இளையராஜா கோயிலாய் வீற்றிருக்கிறார்.
ஜெ.பிரகாஷ்

பா.ரஞ்சித் படத்தின் ‘ரங்கராட்டினம்’ இன்று வெளியீடு!

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *