’சிறந்த நடிப்பு என்பது என்ன தெரியுமா?’ : தேசிய விருது வென்ற நித்யா மேனன் நச் விளக்கம்!
தமிழ் சினிமாவில் படத்திற்காக சிக்ஸ்பேக், எடைகுறைப்பு, எடை அதிகரித்தல் என்பதை பெருமையாக பேசி வருகின்றனர்.
ஆகஸ்ட் 15 அன்று வெளியான தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “படத்திற்காக எடை குறைத்து நான் எதிர்பார்த்த தங்கலானாக விக்ரம் வந்து நின்றார்” எனபெருமையுடன் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் “சிறந்த நடிப்பு என்பது எடை குறைப்போ , அதிகரிப்போ, செயற்கையாக உடலை மாற்றிக்கொள்வதிலோ கிடையாது. அது நடிப்பின் ஒரு பகுதிதானே தவிர அதுவே நடிப்பு கிடையாது” எனக் குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நித்யாமேனன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது பலரையும் கவனிக்க வைத்துள்ளது.
மித்ரன் ஆர். ஜவகர் இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தில் தனுஷுடன் இணைந்து பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கன்னா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ஹிட் அடித்தது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நடிகை நித்திய மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், இப்படத்தில் வரும் மேகம் கருக்காத பாடலுக்கு சிறந்த நடன இயக்குனர் என்கிற தேசிய விருது நடன இயக்குநர் ஜானி மற்றும் சதீஷ் கிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், திருச்சிற்றம்பலம் படம் வெளிவந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதேபோன்று நடிகை நித்யா மேனன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தில் எடுக்கப்பட்ட பிடிஎஸ் காட்சிகளை பகிர்ந்து அப்படத்தில் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.
அதில் ” திருச்சிற்றம்பலம் படத்திற்காக எனது முதல் தேசிய விருது பெற்றதில் மகிழ்ச்சி. பார்ப்பதற்கு எளிமையாக தெரியும் நடிப்பிற்கு பின்னால் இருக்கும் உழைப்பு எளிமையானதல்ல என புரிந்துகொண்ட தேசிய விருது தேர்வுக்குழுவிற்கு நன்றி.
சிறந்த நடிப்பு என்பது எடை குறைப்போ , அதிகரிப்போ, செயற்கையாக உடலை மாற்றிக்கொள்வதோ கிடையாது. அது நடிப்பின் ஒரு பகுதிதானே தவிர அதுவே நடிப்பு கிடையாது. இதை நிரூபிக்கவே முயற்சித்து வருகிறேன்.
இந்த விருது பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், தனுஷ், என எங்கள் 4 பேருக்கான விருது. ஏனென்றால்
ஒரு படத்தில் நடிகருக்கு இணையாக நடிகைக்கும் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நான் இதுவரை நடித்ததில்லை. உண்மையை விட வதந்திகள் அதிகம் பேசப்படும் ஒரு இடத்தில் முன்னேறுவது என்பது மிகவும் கடினம்.” என நித்யா மேனன் பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
“என்ன ஆச்சு எடப்பாடி பழனிசாமிக்கு?” : திமுகவை விமர்சித்த எடப்பாடி… ஆ.ராசா ஆவேச பதிலடி!
ரீல்ஸ்: வீலிங் செய்த பைக்கை பாலத்தில் இருந்து கீழே வீசிய மக்கள்!