காதலுக்கு அப்பாற்பட்ட இன்னொன்று!
மனதை நெகிழ்ச்சியடையச் செய்கிற ‘பீல் குட்’ படங்கள் பார்ப்பது ஒருவகையான சுகானுபவம். முதன்மை பாத்திரங்கள் அனைத்துமே நேர்மறையானவை என்று சொல்லும்படியாகவே, பெரும்பாலான படங்கள் இருக்கும். மிகச்சில படங்கள் மட்டுமே எல்லா மனிதர்களும் குறை, நிறை கொண்டவர்கள் தான் என்று சொல்லும்.
அவற்றில் சில கொஞ்சம் கூட ஏற்புடையதாக இல்லாததாக, எளிதில் சீரணிக்க முடியாததாக, பொதுப்பிம்பத்தில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டதாக ஒரு வாழ்வைக் காட்டும். கதை மாந்தர்களிடையே இருந்த பிரச்சனைகள் முற்றிலும் தீர்ந்தனவா இல்லையா என்பதை நாம் அறிவதற்குள் படம் முடிவை எட்டுவதாக அமைந்திருக்கும். அதன் வழியே, நமக்குள் ஒரு புரிதலை அப்படம் உருவாக்கும்.
அந்த வகையறா படம் தான் வித்யா பாலன், பிரதீக் காந்தி, இலியானா டி க்ரூஸ், செந்தில் ராமமூர்த்தி, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்திப் படமான ‘தோ அவுர் தோ பியார்’. இதனை ஷிர்ஷா குஹா தாகுர்தா இயக்கியுள்ளார்.
2017ஆம் ஆண்டு அசாஸல் ஜேக்கப்ஸ் இயக்கத்தில் அமெரிக்காவில் வெளியான ‘தி லவ்வர்ஸ்’ படத்தைத் தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
மீண்டும் காதல்!
என் ஆர் ஐ போட்டோகிராபரான விக்ரம் சேகல் (செந்தில் ராமமூர்த்தி), டெண்டிஸ்ட் காவ்யாவை (வித்யா பாலன்) தீவிரமாகக் காதலிக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் உறவில் இருக்கின்றனர்.
வளர்ந்துவரும் மாடல், நடிகையான நோரா (இலியானா), தக்கை தயாரிப்பு ஆலையை நடத்திவரும் அனிருத் பானர்ஜி (பிரதீக் காந்தி) உடன் காதல் உறவு கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இது தொடர்கிறது.
விக்ரம் காவ்யாவையும், நோரா அனிருத்தையும் திருமண பந்தத்தில் இணையுமாறு வற்புறுத்துகின்றனர். ஆனால், அவர்கள் இருவராலும் அதனை உடனடியாகச் செயல்படுத்த முடியவில்லை.
காரணம், காவ்யா – அனிருத் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். பத்தாண்டுகளாக அந்த பந்தத்தைத் தொடர்பவர்கள். ஏதோ ஒன்று அவர்களைத் தயங்கச் செய்கிறது. இத்தனைக்கும் இருவரும் சரியாகப் பேசி பல மாதங்களாகிறது எனும் நிலைமை. இருவருமே எந்திரம் போல ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். ‘இனி இதனைத் தொடர வேண்டாம்’ என்ற எண்ணத்திற்கு வந்து சேர்ந்ததும், இருவருமே தங்களது விவாகரத்தை நோக்கி நகர்கின்றனர்.
அந்த நிலையில், காவ்யாவின் தாத்தா இறந்துபோக, அனிருத்தும் காவ்யாவும் ஒன்றாக ஊட்டிக்குப் பயணிக்கும் சூழல் உருவாகிறது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஒன்றாக அங்கு செல்கின்றனர். பிரியப் போகிறோம் எனும் மனநிலையில் இருக்கும் இருவரும், அங்கு தங்களது காதலை மீண்டும் மீட்டெடுக்கின்றனர். மும்பை வந்தபிறகும் அது தொடர்கிறது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களிடையே அன்னியோன்யம் மேலும் அதிகமாகிறது.
ஒருகட்டத்தில் காவ்யாவுக்கு விக்ரமுடன் இருக்கும் உறவு அனிருத்துக்குப் பிடிபடுகிறது. போலவே, அனிருத் – நோரா இடையிலான காதல் காவ்யாவுக்குத் தெரிய வருகிறது. அதன்பிறகு என்னவானது? இரண்டு ஜோடிகளாகப் பிரிந்து அவர்கள் தங்களது வாழ்வை அமைத்துக் கொண்டர்களா என்று சொல்கிறது ‘தோ அவுர் தோ பியார்’ படத்தின் மீதி.
பிரிய நினைக்கும் ஒரு தம்பதி இடையே மீண்டும் காதல் முகிழ்க்கிறது எனும் ஒருவரிக்கதையே இப்படத்தின் யுஎஸ்பி.
வித்யா பாலன் ‘அட்ராசிட்டி’!
‘தோ அவுர் தோ பியார்’ படத்தின் மிகப்பெரிய பலமே அதன் எழுத்தாக்கம் மற்றும் காட்சியாக்கம் தான். இது போன்றதொரு கதை, வழக்கமாக நமக்கு எரிச்சலையும் அயர்ச்சியையுமே தரும். ஆனால், இப்படம் நகைச்சுவையை ஆங்காங்கே தெளித்திருப்பதோடு மையப் பாத்திரங்களின் மனநிலையை நமக்குள் எளிதாகக் கடத்துகிறது.
அதற்காகவே எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கும் சுப்ரோதிம் சென்குப்தா, அம்ரிதா பக்சி, இஷா சோப்ராவைப் பாராட்டலாம். கூடவே, திரையில் சினிமாத்தனம் தெரியாமல் இதனை ‘பீல்குட் ட்ராமா’ ஆக்கிய இயக்குனர் ஷ்ர்ஷா குஹா தாகுர்தாவின் காட்சியாக்கத்திற்கும் ஒரு ‘ஓ’ போட வேண்டும்.
வித்யா பாலன், வழக்கம்போல ‘அட்ராசிட்டி’ செய்திருக்கிறார். திருமணமான நடிகைகள் இப்படிப்பட்ட கதைகளைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை அவர் இதிலும் சுக்குநூறாக உடைத்திருக்கிறார். அந்த வகையில், அவருக்கு நிகர் அவரே!
’ஸ்கேம் 1992 – தி ஹர்ஷத் மேத்தா ஸ்டோரி’ மூலமாக இளைய தலைமுறையைக் கதறவிட்டவர் பிரதீக் காந்தி. இதிலும் நம் மனதைக் கவர்கிற வகையில் நடித்திருக்கிறார். இறுக்கமான மனநிலைக்கு மாறிய ஒரு மனிதன் இப்படித்தான் ரொமான்ஸ், காமெடி, விரக்தி பாவனைகளை வெளிப்படுத்துவான் என்று நம்மை நம்பச் செய்திருப்பது சிறப்பு.
இலியானா இதில் இரண்டாவது நாயகி. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், தான் தோன்றிய காட்சிகளில் ‘சிக்சர்’ அடித்திருக்கிறார். இந்திய சினிமாவுக்கு கிடைத்த இன்னொரு மிலிந்த் சோமன் என்று செந்தில் ராமமூர்த்தியைத் தாராளமாகச் சொல்லலாம். கவர்ச்சிகரமான தோற்றம் மட்டுமல்லாமல், அற்புதமான நடிகராகவும் மிளிர்ந்திருக்கிறார்.
இவர்கள் தவிர்த்து தலைவாசல் விஜய் உட்படச் சில தமிழ் முகங்களும் உண்டு. சில இந்தி நடிகர், நடிகைகளின் தமிழ் உச்சரிப்பு நம்மைக் கொஞ்சம் படுத்துகிறது. அதில் விஜய்யின் மனைவியாக நடித்தவரும் ஒருவர். ஆனால், அவர்களது நடிப்பைக் கொஞ்சம் கூட நம்மால் குறை சொல்ல முடியவில்லை.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் விஜய், இப்படம் முழுக்கச் சாம்பல் கலந்த மென்னீலத்தைப் பரவச் செய்திருக்கிறார். ஆனால், அது ‘வெஸ்டர்ன்’ படம் பார்த்த உணர்வை ஏற்படுத்தவில்லை என்பதே அவருக்கான மரியாதையை அதிகப்படுத்தி இருக்கிறது.
பர்த்ரோய் பர்ரெட்டோவின் படத்தொகுப்பு, கதாபாத்திரங்கள் வசனம் பேசிய பின்னர் மீதமிருக்கும் அமைதிக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது அழகு. ஷைலஜா சர்மாவின் தயாரிப்பு வடிவமைப்பு, ‘ஒரு விளம்பரப் படம் பார்க்கிறோமோ’ எனும் உணர்வை அதிகப்படுத்துகிறது.
மீதமுள்ள தொழில்நுட்பப் பணிகள் சிறப்புற அமைந்து, செறிவுமிக்க படம் பார்த்த திருப்தியை உருவாக்கியிருக்கின்றன. வீரா கபூரின் ஆடை வடிவமைப்பும் அதிலொன்று. போலவே, பிரதீக் காந்தியின் ‘ஸ்டைலிங்’கை கவனித்தவரையும் தனியாகப் பாராட்ட வேண்டும்.
யார்றா இவங்க..?!
’கல்யாணம்கறது ஆயிரம் காலத்து பயிர்’ எனும் மனநிலை கொண்டவர்கள் ‘தோ அவுர் தோ பியார்’ ஓடும் தியேட்டர் பக்கம் மழைக்குக் கூட ஒதுங்கக் கூடாது. இந்தப் படத்தின் சிறப்பே, ஒவ்வொரு மனிதரின் விருப்பங்களும் சக மனிதர்கள் மதிப்பு தர வேண்டும் என்பதுதான். அதனால், இந்த படத்தின் முடிவைப் பார்வையாளர்களிடமே விட்டுவிடுகிறது இப்படம்.
’கல்யாணமானவங்க செக்ஸ் வச்சுக்க மாட்டாங்க’ என்பது போன்ற வசனங்களோ, புதிதாக வாங்கிய டூத் பேஸ்ட்டை கீழிருந்து பிசுக்குவது போன்று காதலைப் பொழிய வேண்டும் என்பது போன்ற உதாரணங்களோ, இந்த திரைப்படம் எதனைப் பேசப் போகிறது என்பதை நமக்குத் தொடக்கத்திலேயே சொல்லிவிடுகிறது.
அது போன்ற ‘குட்டி’யான தருணங்களும், மிகவும் குறுகிய பாவனைகளுமே இப்படத்தை ‘வழக்கமான ரொமான்ஸ் டிராமா’ என்ற வகைமையில் இருந்து அப்புறப்படுத்துகிறது. இதில் விக்ரமுக்கும் காவ்யாவுக்குமான காதலோ, அனிருத் – நோரா உறவோ எப்படி உண்டானது என்று எந்த விளக்கமும் சொல்லப்படவில்லை.
காவ்யா – அனிருத் இடையே காதல் குறைந்ததற்கு அவர்களுக்குக் குழந்தை இல்லை என்பதுதான் காரணமா என்ற நமது கேள்விக்குப் பட்டும் படாமலும் காட்சியமைப்பில், வசனங்களில் பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். அது நம் உளவியலோடு உரையாடுகிறது. வழக்கத்திற்கு மாறாக, இடைவேளைப் பகுதி ஒரு ‘ஹேப்பி மொமண்ட்’ ஆக அமைந்திருப்பது இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு.
இப்படத்தில் லாஜிக் ரீதியிலான குறைகளைத் தேடத் தொடங்கினால், மொத்தப் படமும் ‘பணால் ‘ஆகிவிடும். ஏற்கனவே சொன்னது போல, இக்கதையின் அடிப்படையை அனைத்து ரசிகர்களும் ஏற்பார்கள் என்று கருத முடியாதது இதன் மிகப்பெரிய பலவீனம்.
’ஏண்டா கள்ளக்காதல் விவகாரம்னு நியூஸ்ல வர்றதை வச்சு ஒரு படமா’ என்று சிலர் இதனை அர்ச்சிக்கலாம். ‘இது மாதிரி மேட்டர் படமெல்லாம் ரெண்டு ஜோடியும் செத்து போறதாத்தாங்க முடியும்’ என்று சிலர் ‘ஹேஷ்யம்’ சொல்லலாம். ’பல ஜோடிகளோட இன்னொரு பக்கத்தைக் காட்டுற மாதிரி படம் பண்ணியிருக்காங்க, யார்றா இவங்க’ என்று கிண்டலடிக்கலாம்.
அந்த விமர்சனங்களைப் புறந்தள்ளிவிட்டு, அவற்றுக்கு அப்பாற்பட்ட ஒரு வாழ்வைக் காணச் செய்கிறது ’தோ அவுர் தோ பியார்’. இந்திப் படங்கள், சீரியல்களின் பாதிப்பில் நம்மூர் சீரியல்களே ’கலாசாரம் என்ன விலை’ என்று கேட்கும் இக்காலத்தில், இந்தப் படம் தருவது அற்புதமானதொரு அனுபவம். நிச்சயமாக, அது காதலுக்கு அப்பாற்பட்ட இன்னொன்று.
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு: மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பணி!
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி: சாதனை படைத்த குகேஷ்