திரைப்பட வெளியீட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் படங்களின் வசூல் அதிகமாவது திரைத்துறைக்கு முக்கியமானது. மாறிவரும் சினிமா வியாபாரத்தில் சாதாரண நாட்களில் வெளியாகும் படங்கள்கூட தீபாவளி காலங்களில் ஆகும் வசூலைக் காட்டிலும் அதிகமான தொகையை வசூலிக்கின்றன.
இருந்தபோதிலும் பண்டிகை கொண்டாட்ட மனோநிலையுடன் சொந்தபந்தங்களுடன் திரையரங்குகளில் புதிய படங்களை பார்க்கும் வழக்கம் இப்போதும் மக்களிடம் தொடர்கிறது. தீபாவளி, பொங்கல், தமிழ் வருடப்பிறப்பு பண்டிகைகளுக்கு சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ள படங்கள் தான் வெளியிடப்படுவது வழக்கம். தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை பெற்றுள்ள விஜய், அஜித்குமார், ரஜினிகாந்த் ஆகியோர் நடித்து வரும் படங்கள் தீபாவளிக்கு வெளியாகவில்லை.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு 70 கோடி ரூபாய் செலவில் கார்த்தி நடித்துள்ள ’சர்தார்’ படமும், சுமார் 125 கோடி ரூபாய் செலவில் தெலுங்கு – தமிழில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’பிரின்ஸ்’ படமும் மட்டுமே வெளியாகின்றது.
தமிழ் சினிமா விநியோகம், திரையிடல் ஆகியவற்றை தீர்மானிக்கும் கோபுரம் பிலிம்ஸ் மதுரை அன்புசெழியன் ’பிரின்ஸ்’ படத்தையும், ரெட் ஜெயண்ட் மூவீஸ் ’சர்தார்’ படத்தையும் தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளனர்.
கார்த்தி நடித்து இதற்கு முன்பு தீபாவளிக்கு 2013ல் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ , 2016ல் ‘காஷ்மோரா’, 2019ல் ‘கைதி’ ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. முதலிரண்டு படங்கள் தோல்வியைத் தழுவினாலும், 2019ல் வெளிவந்த ‘கைதி’ படம், அப்போது வெளிவந்த விஜய் நடித்த ‘பிகில்’ படத்துடன் போட்டி போட்டு வெற்றிகரமாக ஓடியது. மூன்று வருடங்களுக்குப் பிறகு இந்த தீபாவளியை முன்னிட்டு ‘சர்தார்’ படம் வெளியாக உள்ளது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைப்பில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் நடித்து இதுவரையில் தீபாவளிக்கு எந்தப் படமும் வெளியானதில்லை. தீபாவளிக்கு சில வாரங்கள் முன்னதாகத்தான் ‘ரெமோ, டாக்டர்’ ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன.
இந்த வருடம்தான் தீபாவளியை முன்னிட்டு அவர் நடித்த ஒரு படம் வெளியாக உள்ளது.
‘பிரின்ஸ்’ படத்தை தெலுங்கு இயக்குனரான அனுதீப் இயக்கியுள்ளார். இவர் தெலுங்கில் இயக்கி கடந்த வருடம் வெளிவந்த ‘ஜதிரத்னலு’ படம் மூலம் அதிகம் பேசப்பட்டவர். இப்படத்தில் மரியா ரியாபோஷப்கா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த வருட தீபாவளியில் கார்த்தியும், சிவகார்த்திகேயனும் மட்டுமே போட்டிக் களத்தில் உள்ளனர். கார்த்தி நடித்து இதற்கு முன்பு வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்’, ’விருமன்’ படங்களும், சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த ‘டான்’, ’டாக்டர்’ படங்களும் வியாபார ரீதியாக வெற்றி பெற்றுள்ளன.
இருவருமே தங்களது தீபாவளி வெளியீடுகள் மூலம் தொடர் வெற்றிக்கு முயற்சிக்கின்றனர். அதன் காரணமாக இந்த இரண்டு திரைப்படங்களையும் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியிட முயற்சிகள் நடைபெறுகின்றன.
இருவாரங்கள் மட்டுமே அதிகமான திரைகளில் இந்த படங்களை திரையிட முடியும். நவம்பர் 4 அன்று பன்மொழி படங்கள் ரீலீஸ் ஆக உள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தமிழகத்தில் சுமார் 600 திரைகளில் வெளியானது. படத்திற்கான டிக்கெட் தேவை அதிகரித்தபோது திரைகளும், காட்சிகளும் அதிகரிக்கப்பட்டது.
தமிழ் சினிமா வரலாற்றில் வணிகம், வசூல் ஆகியவற்றில் புதிய சாதனைகளை நிகழ்த்திய ‘பொன்னியின் செல்வன்’ படம் வழக்கம் போன்றே அட்வான்ஸ் அடிப்படையில் திரையரங்குகளுடன் ஒப்பந்தம் செய்து படத்தை திரையிட அனுமதி வழங்கியது லைக்கா நிறுவனம்.
முதல் இரண்டு வாரங்களில் ’பொன்னியின் செல்வன்’ படம் முடிவுக்கு வந்துவிடும் என்கிற கணிப்பில் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் வேலையை செய்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் முதல் இருவாரங்களுக்கு வசூலில் தயாரிப்பாளருக்கு 70% திரையரங்குகளுக்கு 30% என்கிற அடிப்படையிலும், சில பகுதிகளில் 80% – 20% என்கிற அடிப்படையிலும் ஒப்பந்தங்களை செய்தனர்.
நான்காவது வாரத்தில் இருந்து நிகர வசூலில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு 50% விநியோகஸ்தருக்கு 50% என்ற அடிப்படையில் கிடைக்கும்.
அந்த வகையில் தீபாவளி சமயம்தான் பொன்னியின் செல்வனின் நான்காவது வாரம். எனவே, தற்போது பொன்னியின் செல்வன் ஓடிக்கொண்டிருக்கும் சுமார் 100 திரையரங்குகள் பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து திரையிட விருப்பம் தெரிவித்தனர். ஏனென்றால், அந்த வாரத்தில்தான் திரையரங்கு உரிமையாளர்களுக்கு அதிக பங்கு கிடைக்கும். இது லாபகரமாக இருக்கும் என எண்ணினர்.
ஆனால் தீபாவளிக்கு வெளியாகும் படங்களைதான் திரையிட வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது என்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள். இந்த சூழ்நிலையில் ரெட் ஜெயண்ட் வெளியீடான சர்தார் படத்திற்கு அதிகமான திரைகளும், மதுரை அன்புசெழியன் வெளியிடும் பிரின்ஸ் படத்திற்கு குறைவான திரைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
படங்களை பற்றிய செய்திகள், தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமெடுத்திருக்கிறது. ஆனால் இரண்டு படத்திற்கான முன்பதிவு எதிர்பார்த்த அளவு இல்லை என்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள்.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 24, அதனையொட்டி கடைகளுக்கு செல்வது, வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்படும் வேலைகளில் இருக்கும் அக்டோபர் 21 அன்று படங்களை வெளியிடுவது படத்தின் வசூலை பாதிக்கும். தீபாவளி வெளியீடு என்பது தீபாவளி அன்று இருந்தால்தான் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரிக்கும்.
அதனால் வசூல் அதிகரிக்கும். தீபாவளிக்கு மூன்று நாட்களுக்கு முன் வெளியாகும் பிரின்ஸ், சர்தார் இரண்டு படங்களையும் அவர்களது ரசிகர்கள் மட்டுமே பார்ப்பார்கள். அதனால்தான் முன்பதிவு மந்தமாக இருக்கிறது என்கின்றனர் நகர்ப்புறத்தில் இருக்கும் திரையரங்க உரிமையாளர்கள்.
இராமானுஜம்