அன்றும் இன்றும்… நினைவில் நிற்கப்போவது படத்தின் வசூலா? படத்தின் தரமா?

சினிமா சிறப்புக் கட்டுரை

திரையரங்குகளுக்கு தீபாவளி பண்டிகையும், அதனையொட்டி வெளியாகும் புதிய திரைப்படங்களும் கற்பக விருட்சம் போன்றது.

இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் நன்றாக இருக்கிறதா, இல்லையா என்பதை விட்டுவிட்டு, அது எத்தனை கோடி வசூல் ஈட்டும் என்ற கணக்கீடு பொங்கி வழிகிறது.

இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியானால் வசூல் பாதிக்கப்படும் என புலம்பும் தமிழ் சினிமாவில், ஒரு பண்டிகை நாளில்  ஐந்து படங்கள் அதுவும் உச்சத்தில் இருந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, ஆகியோர் நடித்த படங்களை முன்னணி இயக்குநர்கள் இயக்கத்தில், முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்து வெளியிட்டு அந்தப் படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதென்பது இன்றைய தலைமுறை நம்ப முடியாத ஒரு அதிசயம்!

ரிலீஸ் சென்டர்களில் புதிய படங்களும் அதற்கடுத்த நிலைகளில் உள்ள சென்டர்களில் ஏற்கனவே ரிலீசாகி வெற்றி பெற்ற படங்களை ஷிப்டிங் முறையில் திரையிட தீபாவளிக்கு முதல் நாள் சினிமா விநியோகஸ்தர்கள் அலுவலகங்கள், திரையரங்க உரிமையாளர்கள் கூட்டத்தால் நிரம்பிவழியும்.

பழைய போஸ்டர்களை விற்பனை செய்பவர்களின் குடோன் விடியும்வரை திறந்திருக்கும். மிகப்பெரிய பண வரவுகள் தீபாவளிக்கு முதல் நாள் நடக்கும்.

புதிய படங்களின் பிலிம் பாக்ஸ்கள் லேபரெட்டரிகளில் சம்பிரதாயமான பூஜைகளை நடத்தி படங்களை வாங்கிய விநியோகஸ்தர்களிடம் தயாரிப்பாளர்கள் பயபக்தியுடன் வழங்குவார்கள். அதிலும் பல படங்கள் வெளியாகும்போது கூட்டம் நிரம்பி வழியும்.

1987 தீபாவளி ரிலீஸ்!

1987ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதியன்று தீபாவளி வெளியீடுகளாக மனிதன், நாயகன், உழவன் மகன், சட்டம் ஒரு விளையாட்டு, இவர்கள் வருங்காலத் தூண்கள், மனதில் உறுதி வேண்டும் ஆகிய படங்கள் வெளியாகின. அதிலும் விஜயகாந்த் நாயகனாக நடித்த படங்கள் இரண்டு. இவை ஒவ்வொன்றுமே ஒவ்வொரு வகையில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தவை.

Diwali release movies present and past behaviours

#மனதில் உறுதி வேண்டும்

கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான ‘மனதில் உறுதி வேண்டும்’ நாயகியை முன்னிலைப்படுத்திய கதையைக் கொண்டது. இந்தப் படத்தில் சுஹாசினியுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ரமேஷ் அரவிந்த் இருவரும் நடித்திருந்தனர்.

இவர்கள் இருவரும் அறிமுகமான முதல் படம் மனதில் உறுதி வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜா இசை அமைத்திருந்த இந்தப் படத்தில் ‘சங்கத்தமிழ் கவியே’,  ‘மனதில் உறுதி வேண்டும்’, ‘கண்ணின் மணியே’,  ‘கண்ணா வருவாயா’ பாடல்கள் ஹிட் ஆனது. இதே படத்தில் ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் கவுரவ வேடத்தில் தோன்றிய ‘வங்காளக் கடலே’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

#இவர்கள் வருங்காலத் தூண்கள்

பிரபு நடித்த 50ஆவது படம்  ‘இவர்கள் வருங்காலத் தூண்கள்’. அறிமுக இயக்குநர் வெங்கட் இயக்கிய முதல் திரைப்படம். இதில் பிரபு, அம்பிகா, ஜெய்சங்கர், காந்திமதி, ஆனந்தராஜ், நாகேஷ், ரகுவரன், ரவிச்சந்திரன், சாமிக்கண்ணு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படத்துக்கு இசையமைத்தவர் டி.ராஜேந்தர்

Diwali release movies present and past behaviours

#சட்டம் ஒரு விளையாட்டு

விஜயகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியிருந்த உழவன் மகன் வெளியாகிறது என அறிவித்திருந்த நிலையில், அவர் கதாநாயகனாக நடித்த மற்றொரு படமும் வெளியானது.  ஷோபா சந்திரசேகர் தயாரிப்பில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படம். இந்தப் படத்தில் விஜயகாந்த் மற்றும் ராதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

எஸ்.ஏ.சந்திரசேகர் – விஜயகாந்த் காம்பினேஷனில் ‘சட்டம்’ சார்ந்து வெளியான படங்களில் ‘சட்டம் ஒரு விளையாட்டு’ம் ஒன்று. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்தப் படமும் எஸ்.ஏ.சி-யின் வழக்கமான ‘பழிக்குப் பழி’ பார்முலாவை தழுவியிருந்தது.

Diwali release movies present and past behaviours

#உழவன் மகன்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களுக்கு நடுவே விஜயகாந்த் படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெறுவது அக்காலகட்டத்தில் சர்வ சாதாரண விஷயம். கதை மற்றும் இதர தொழில்நுட்ப அம்சங்களைப் பொறுத்து ரசிகர்கள் வழங்கும் வெற்றியின் அளவும் அமையும். அதை நன்குணர்ந்து தயாரிக்கப்பட்டது ‘உழவன் மகன்’.

சென்னை திரைப்படக் கல்லூரி மாணவர்கள் என்றாலே விருது பெறும் நோக்கில் நின்று நிதானித்துப் படமெடுப்பவர்கள் என்ற எண்ணம் திரையுலகில் இருந்த காலத்தில், ‘ஊமை விழிகள்’ தந்து அசத்தியது ஆபாவாணன் – அரவிந்தராஜ் கூட்டணி. அதன் தொடர்ச்சியாக, ஒரு சாதாரண கதையில் பிரமாண்டத்தைக் கலந்து தந்த படம் ‘உழவன் மகன்’.

விஜயகாந்த், ராதிகா, ராதா, ராதாரவி, ஆகியோர் நடித்திருந்தனர். ஆபாவாணன் கதையை அரவிந்தராஜ் இயக்க, மனோஜ் கியான் இசையமைத்த இந்தப் படத்தில் இடம்பெற்ற .‘சொல்லித்தரவா’, ‘செம்மறி ஆடே’ பாடல்கள் திரையரங்குகளில் ரசிகர்களை ஆட்டம் போட வைக்க, ‘உன்னைத் தினம் தேடும் தலைவன்’ அவர்களது உத்வேகத்தைக் கூட்டியது. ரேக்ளா ரேஸ் பிரமாண்டமாக இடம்பெற்ற படம் ‘உழவன் மகன்’ என்பது குறிப்பிடத்தக்கது

Diwali release movies present and past behaviours

#மனிதன்

ஏவி.எம் தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரூபிணி, ரகுவரன் நடிப்பில் வெளியான ‘மனிதன்’, இந்தப் பட்டியலில் வசூலில் முதலிடம் பிடித்தது.

‘காளை காளை’, ‘மனிதன் மனிதன்’, ’வானத்தைப் பார்த்தேன்’, ‘ஏதோ நடக்கிறது’என்று சந்திரபோஸின் இசையில் பாடல்கள் ரசிகர்களை மயக்கின. ஒரு பண்டிகை கால கொண்டாட்டத்துக்கு ஏற்ற படமாக அமைந்து, ரஜினியின் வெற்றிப் படங்களில் ஒன்றாகச் சேர்ந்தது.

Diwali release movies present and past behaviours

#நாயகன்

மணிரத்னம் இயக்கத்தில்  முக்தா சீனிவாசன் மற்றும் ஜி.வெங்கடேஸ்வரன் தயாரிப்பில் வெளியான ‘நாயகன்’, இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக விளங்குகிறது. திரையரங்குகளில் வெளியாகி 175 நாட்கள் ஓடி 2.5 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றது ‘நாயகன்’. இதைக் காட்டிலும் அதிகமாக அன்றைய வணிகத்தில் 3 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றது ‘மனிதன்’.

‘தென்பாண்டி சீமையிலே’ பாடல் அதனுள் அடங்கிய சோகத்தையும் மீறி நம் மனதில் என்றென்றைக்குமாக ஒட்டிக்கொண்டிருக்கிறது. ‘நாயகன்’ தயாரான காலத்தில், அந்தப் படமே பெரும் வெற்றியைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகமிருந்தது. அதனால் ‘மனிதன்’ பின்வாங்க வேண்டியிருக்குமோ என்று ரஜினி தரப்பில் யோசனை எழுந்தது. அந்த நேரத்தில் பிரத்யேகமாக ‘நாயகன்’ படம் பார்க்கும் வாய்ப்பும் ரஜினிகாந்த்துக்கு அமைந்தது.

படம் பார்த்து முடித்ததும், ஏவி.எம் சரவணனிடம் ‘நாயகன் கிளாஸ், மனிதன் மாஸ். ஜெயிப்பது மனிதன் தான்’ என்றாராம் ரஜினி. ஒரு படத்தின் கமர்ஷியல் வெற்றி எவ்வாறிருக்கும் என்ற அவரது தீர்க்கமான கணிப்பையே அந்த நிகழ்வு வெளிக்காட்டுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த பட விழாவில் இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் பேசியிருந்தார் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்.

மேற்சொன்ன படங்களை வாங்கி கேரளாவில் வெளியிட்ட விநியோகஸ்தர் என்ற முறையில் நாயகனை விட மனிதன் படமே விநியோகஸ்தர்களுக்கு லாபம் தந்ததாகக் கூறினார்.

ஆனால், ஒரு படம் காலம் கடந்து நம்மை வசியப்படுத்த வெறும் வர்த்தக வெற்றி மட்டுமே போதாது. அதனாலேயே வெற்றி, வசூல் தாண்டி இன்றும் ‘நாயகன்’ மட்டுமே ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அதற்காக நாயகனோடு வெளியான மற்ற படங்களையும் நாம் சாதாரணமாகக் கருதிவிட முடியாது.

ஏனென்றால், 1987 தீபாவளி தினத்தன்று அடித்துப் பிடித்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, பாலசந்தர் இயக்கத்தில் வெளியான மனதில் உறுதி வேண்டும், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான படங்களைத் திரையரங்குகளில் பார்த்த ரசிகர்களுக்கு இன்றும் அந்த நினைவுகள் பசுமையாக நெஞ்சில் நிற்கும். அந்த நினைவுகள் மட்டுமே அப்படங்களோடு தொடர்புடைய அனைத்து கலைஞர்களுக்குமான உண்மையான மரியாதை.

ஒரு பண்டிகைக் காலத்தில் திரையரங்குகளுக்கு மக்கள் படையெடுப்பதும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியே என்று ரசிகர்கள் திறம்பட நம்பிய காலமது. ஒரு பண்டிகைக்கு நட்சத்திர நடிகர்களில் எவரேனும் ஒருவரின் படம் வந்தாலே போதும் என்ற நிலைப்பாட்டுக்கு இன்று தமிழ் திரையுலகம் வந்திருக்கிறது.

நிச்சயம் அது தரும் தோற்றம் போலியானது தான் என்பதற்கு உதாரணம்தான் ஒரே நேரத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன்,விஜயகாந்த், பிரபு தங்களது ரசிகர்களுக்குத் தந்த இந்த தீபாவளி பரிசுகள்.

தமிழக சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது ஆந்திராவில் தாக்குதல்: வைகோ கண்டனம்

தண்ணீர் கலந்த பெட்ரோல்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

+1
0
+1
3
+1
0
+1
3
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *