கேரள மாநிலம் கொச்சி கலூரில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடிகை திவ்யா உண்ணி தலைமையில் 12,000 நடன கலைஞர்கள் கலந்துகொண்ட பரதநாட்டியம் நிகழ்ச்சி இரு நாட்களுக்கு முன்பு நடந்தது.
இதன் தொடக்க நிகழ்ச்சியில் கேரள கலாச்சார துறை அமைச்சர் சஜி செறியான் மற்றும் திருக்காக்கரை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ உமா தாமஸ் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
அப்போது, 18 அடி உயரமுள்ள கேலரியில் இருந்து மேடைக்குச் செல்லும்போது திடீரென உமா தாமஸ் எம்.எல்.ஏ தவறி கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த கலை நிகழ்ச்சி ஏற்பாட்டில் பாதுகாப்பு குறைபாடுகள் எதாவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளளனர். இதற்கிடையே, போட்டி அமைப்பாளர்கள் மீது கல்யாண் சில்க்ஸ் நிறுவனம் புதிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
அதாவது, தங்களது நிறுவனத்தில் 390 ரூபாய்க்கு 12,500 புடவைகள் வாங்கினர். அவற்றை, போட்டியில் பங்கேற்ற நடனக்கலைஞர்களுக்கு தலா 1,600 ரூபாய்க்கு விற்றுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கல்யாண் சில்க்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
‘கொச்சியில் மிருதங்க நாதம் என்ற நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் எங்களுக்கு குறைந்த காலத்தில் 12,500 சேலைகள் வேண்டுமென்று கேட்டனர். எங்கள் நிறுவனம் எப்போதும் நமது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை ஊக்கப்படுத்தும் கொள்கை கொண்டது. அந்த வகையில் பூஜ்ய லாபத்தில் ஒரு சேலையை ரூ.390 க்குவிற்பனை செய்தோம். அந்த சேலைகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 1,600 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது எங்களுக்கு தெரிய வந்துள்ளது. எங்கள் நிறுவனம் தொடர்புடைய விஷயத்தில் இப்படி மோசடி நடந்திருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த மோசடியில் எங்களுக்கு பங்கு இல்லை என்பதை வாடிக்கையாளகள் புரிந்து கொள்ள வேண்டும் ‘என்று கூறியுள்ளது.

மேலும் , இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு நடனக்கலைஞரிடத்தில் 3,500 கட்டணம் வசூலித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொச்சியை சேர்ந்த ஆஸ்கர் ஈவென்ட் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனம் சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் தலைமறைவாக உள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நடிகை திவ்யா உண்ணியிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்