விரைவில் உங்களை சந்திக்கிறேன்: வதந்தியில் சிக்கிய திவ்யா ஸ்பந்தனா விளக்கம்!
நடிகை திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் இறந்ததாக பரவி வரும் செய்தி உண்மையில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா. தமிழில் குத்து, வாரணம் ஆயிரம், பொல்லாதவன், கிரி போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
சமீபத்தில் ஷாருக்கான் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான பதான் படத்தின் காவி நிற ஆடை சர்ச்சைக்கும் தனது கண்டனங்களைப் பதிவு செய்திருந்தார் திவ்யா ஸ்பந்தனா.
அவர், “சமந்தா தனது விவாகரத்துக்காகவும், சாய்பல்லவி தனது கருத்தை கூறியதற்காகவும் ராஷ்மிகாவின் தனித்துவத்திற்காகவும் தீபிகா தனது ஆடைக்காகவும் மற்றும் சில பெண்கள் இப்படியாக பல காரணங்களுக்காக கேலி கிண்டலுக்கு உள்ளாகுகிறார்கள்.
எதைப் பேச வேண்டும், எதை செய்ய வேண்டும் என தீர்மானிப்பது எங்களது அடிப்படை சுதந்திரம்.
பெண்கள் கடவுள் துர்கா தேவியின் உருவங்கள். பெண் வெறுப்பு எனும் தீமைக்கு எதிராக போராட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகை திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக இன்று காலை தகவல் பரவியது. இது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த செய்தி உண்மையல்ல, வதந்தி என்று அவருடைய தோழி தான்யா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
Just spoke to @divyaspandana. She is in Geneva, was sleeping peacefully till calls came in. Whoever the irresponsible person was who tweeted this and the news organisations that put it out as news flash, shame on you. #DivyaSpandana
— Dhanya Rajendran (@dhanyarajendran) September 6, 2023
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நான் திவ்யா ஸ்பந்தனாவிடம் பேசினேன். ஜெனிவாவில் நலமாக இருக்கிறார். வதந்தி குறித்து என்னுடைய அழைப்பு வரும் வரை நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.
இந்த செய்தியினை ட்வீட் செய்த பொறுப்பற்ற நபர் யாராக இருந்தாலும், செய்தியை பிளாஷ் என்று வெளியிட்ட செய்தி நிறுவனங்களும் வெட்கப்பட வேண்டியவை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் திவ்யா ஸ்பந்தனா நாளை பெங்களூரு திரும்ப உள்ளதாகவும் அவரது தோழியான சித்ரா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
I just spoke to @divyaspandana She’s well. En route to Prague tomorrow and the to Bangalore.
— Chitra Subramaniam (@chitraSD) September 6, 2023
இந்நிலையில், “நலமாக இருக்கிறேன்…விரைவில் உங்களை எல்லாம் நம்ம ஊரில் சந்திக்கிறேன்” என நடிகை திவ்யா ஸ்பந்தனாவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த வதந்தியால் இந்திய அளவில் திவ்யா ஸ்பந்தனா டிரண்டாகி உள்ளார்.
மோனிஷா
சனாதனத்தை ஒழிக்க திமுக என்ன செய்தது?: சீமான்
திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் எப்போது?