இசைஞானி இளையராஜா இசையில் உருவான ஆன்மீக திவ்ய பாசுரங்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (ஜூன் 24) நடைபெற்றது.
திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி ஆன்மிக பாடல்கள், சிம்பொனி இசை, திருவாசகம் உள்ளிட்ட ஏராளமான சாதனைகளை இளையராஜா படைத்துள்ளார். இந்நிலையில் தற்போது நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள பாடல்களுக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.
இதன் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் நேற்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு இளையராஜா பாசுரங்களை வெளியிட்டார்.
“பல்லாண்டு பல்லாண்டு” என்ற பாடல் அரங்கத்தில் ஒலித்தபோது இந்த ஆன்மீக திவ்ய பாசுரத்தின் முதல் சிறப்பு பதிப்பை த்ருதண்டி ஸ்ரீமன் நாராயண ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளிடம் இளையராஜா வழங்கினார்.
பின்னர், வெளியீட்டு விழாவில் பேசிய இளையராஜா, “இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு அன்பான உள்ளங்களை சந்திப்பது பல்லாண்டு பல்லாண்டு நீண்டு கொண்டே போக வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
திருவாசகத்திற்கு இசையமைத்த பிறகு திவ்ய பிரபந்தத்திற்கும் இசையமைக்க வேண்டும் என பலர் கேட்டு கொண்டனர். அது நடக்க வேண்டிய காலத்தில் தற்போது நடந்துள்ளது.
இவ்விழாவில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வளவளவென்று மற்ற சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் இசை வெளியீட்டு விழாக்களை போல் இல்லாமல், இது வேறு மாதிரியாக இருந்தது.
இந்த விழா சிறப்பாக நடைபெற்றதற்கு எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவித்து அவருக்கே சரணடைகிறேன்” என இளையராஜா கூறினார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பா.ரஞ்சித் தயாரிப்பில் ‘பாட்டல் ராதா’ : முதல் தோற்றம் எப்படி?
செவிலியர்களுக்கு இலவச வெளிநாட்டு மொழி பயிற்சி : தமிழக அரசு அழைப்பு!