“நான் சினிமா இயக்கப்போகிறேன் என்று எனது தந்தையிடம் கூறியவுடன், சினிமா என்பது முதலில் அறிவியல் பின்னர் தான் அது கலை என்று தந்தை என்னிடம் கூறினார்” என இயக்குனர் வெற்றிமாறன் கூறுவார்.
வெற்றி மாறன் தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத கலைஞன். தனது ஒவ்வொரு படத்தின் மூலமாகவும் தனித்துவமான முத்திரையை பதித்துள்ளார் வெற்றி மாறன். அவர் இன்று (செப்டம்பர் 4) தனது 47-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

சென்னை லயோலா கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்த வெற்றிமாறன், வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஆங்கில இலக்கியத்தை தேர்ந்தெடுத்தார்.
அவர் இரண்டாம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது, குறும்படப் போட்டி நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் பாலு மகேந்திரா கலந்து கொள்கிறார்.
பின்னர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிய வேண்டும் என்று வெற்றிமாறனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஃபாதர் ராஜநாயகம் மூலமாக பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக வெற்றி மாறன் சேர்ந்தார்.
பாலுமகேந்திராவிடம் முதன் முறையாக, அது ஒரு கனாக்காலம் படத்தில் பணியாற்றினார் வெற்றிமாறன். அந்தப் படத்திலிருந்து தான் வெற்றி மாறனுக்கும் தனுஷுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
வெற்றி மாறன் தனது குருநாதர் பாலுமகேந்திராவிடமிருந்து கற்றுக்கொண்டது ஏராளம். இன்றைக்குக் கூட தனது ஒவ்வொரு படத்தின் வெற்றிக்கும் பாலு மகேந்திரா சார் தான் காரணம் என்று வெற்றி மாறன் கூறுவார்.
அந்த அளவுக்கு பாலு மகேந்திராவுக்கும் அவருக்கும் பிணைப்பு அதிகம். ஒரு படத்தினுடைய கமர்ஷியல் சக்சஸ் என்பதை நாம் தீர்மானிக்கமுடியாது.
சூழல் தான் அதனை தீர்மானிக்கும் என்று தன்னுடைய குரு பாலுமகேந்திரா சார் சொன்னதாக வெற்றிமாறன் சொல்வார்.

2007-ஆம் ஆண்டு வெளியான பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார் வெற்றிமாறன்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் தனது அதிகபட்ச கனவாக, ஒரு பைக் வாங்க எண்ணுகிறான். பைக் வாங்கியதால் அவன் வாழ்கையில் ஏற்பட்ட மாற்றத்தையும், அதனால் அவன் எதிர்கொண்ட பிரச்சனைகளையும் சுவாரசியமாக சொல்லியிருப்பார் வெற்றி.
இந்த திரைப்படம் வெளியானதும், பல்சர் பைக் இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் நிறைய இளைஞர்கள் பல்சர் பைக் வாங்கினார்கள். இப்படம் கமர்ஷியலாக வெற்றி பெற்றது.
2011-ல் வெளியான ஆடுகளம் திரைப்படம் சேவல் சண்டையை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. மதுரை வட்டாரத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தில், மனிதர்களின் உணர்வுகளை அவ்வளவு அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பார் வெற்றிமாறன்.
இந்தப் படத்திற்கு வெற்றி மாறனுக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும், ஆறு தேசிய விருதுகளை இப்படம் அள்ளிக்குவித்தது.
2015ஆம் ஆண்டு சந்திர குமார் எழுதிய “லாக்கப்” நாவலை அடிப்படையாக வைத்து விசாரணை திரைப்படத்தை எடுத்தார் வெற்றிமாறன்.
எளிய மனிதர்கள் மீது காவல்துறை நடத்தும் அதிகார கோர முகத்தை தோலுரித்து காட்டியது இத்திரைப்படம். இப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன.

2018-ஆம் ஆண்டு வெளியான வட சென்னை திரைப்படத்தின் மூலம் சென்னையின் பூர்வக்குடி மக்களின் வாழ்வியலையும்,
அந்த மக்களை எப்படி அரசியல் லாபத்திற்காக அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொண்டார்கள் என்றும் காட்சிப்படுத்தியிருப்பார். ஆங்கில நாவலாசிரியர் ஷேக்ஸ்பியர் நாவல் போன்று இப்படத்தின் திரைக்கதை அமைந்திருக்கும்.
2019-இல் பூமணி எழுதிய “வெக்கை” நாவலை அடிப்படையாக வைத்து அசுரன் திரைப்படத்தை இயக்கினார்.
இத்திரைப்படத்தில், திருநெல்வேலி நிலப்பரப்பில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதிக்கசாதியினரால் ஏற்பட்ட பிரச்சனைகளை, மிகத்துணிச்சலாக பேசியிருப்பார். அசுரன் படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது.
2020-ஆம் ஆண்டு வெளியான ‘பாவக்கதை’ ஆந்தலாஜியில் ஓர் இரவு எபிசோடில் சாதி ஆணவக்கொலைகள் குறித்து வெற்றிமாறன் பேசியிருப்பார்.
இப்படி, தனது ஒவ்வொரு படங்களிலும், எளிய மனிதர்களுடைய வாழ்வியலையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் திரையில், ரத்தமும் சதையுமாக வெற்றிமாறன் காட்சிப்படுத்தியிருப்பார்.
தன்னுடைய ஒவ்வொரு திரைப்படங்களும் அதுவே தன்னை உருவாக்கிக்கொள்கிறது என்பார் வெற்றிமாறன். சினிமாவால் சமூக மாற்றத்தை உருவாக்க முடியாது. ஆனால், சினிமா சமூகத்தில் ஒரு விவாதத்தை தொடங்கி வைக்கும் என்பார்.
வெற்றி மாறன் திரைப்படங்களில் வன்முறை அதிகப்படியாக இருக்கிறது. கெட்ட வார்த்தை நிறைய பேசுகிறார்கள் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதுண்டு.
சமூகத்தில் நடக்கின்ற ஆணவக் கொலைகளையும், சாதியப் பிரச்சனைகளையும் தான் சினிமாவில் காட்டுகிறோம் என்று வெற்றிமாறன் கூறுவார்.

வெற்றிமாறன் தனது அரசியல் குறித்து குறிப்பிடும்போது, “என்னுடைய அரசியல் என்பது என்னுடைய சினிமா தான்…மைக் பிடித்து ஒரு விஷயத்த சொல்றதுக்கு பதிலா…ஒரு சிங்கிள் ஷாட்ல என்னுடைய அரசியலை பேசிருவேன்” என்பார்.
இவருக்கு புறாக்கள் வளர்ப்பது மிகவும் பிடித்தமான ஒன்று. சினிமா ஷூட் இல்லாத சமயங்களில், புறா பந்தயங்களில் கலந்து கொள்வார். மேலும், சென்னையின் புறநகர் பகுதியில் சிறிய இடம் ஒன்றை வாங்கி வெற்றிமாறன் விவசாயம் செய்து வருகிறார்.
வெற்றிமாறன் புத்தகங்களை மிகவும் நேசிக்கக்கூடியவர். கல்லூரி காலங்களில் தீவிரமாக புத்தகங்கள் படிப்பார். அலெக்ஸ் ஹேலி எழுதிய “ரூட்ஸ்” புத்தகம், தன்னுடைய வாழ்க்கைப் பற்றிய புரிதலை மாற்றிய புத்தகம் என்று அவர் குறிப்பிடுவார்.
2011-ஆம் ஆண்டு டெல்லி விமான நிலையத்தில் இந்தி தெரியாததால் அவமானப்படுத்தப்பட்ட வெற்றிமாறன், இந்தி திணிப்பிற்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை எடுத்தார்.
இவர், முதல் தலைமுறை பட்டதாரிகள் சினிமா கற்றுக்கொள்வதற்கென சினிமா பயிற்சி பட்டறையை ஒன்றை நடத்தி வருகிறார்.

ஆடுகளம் திரைப்படம் எடுத்த சமயத்தில் வெற்றி மாறன் ஒரு நாளைக்கு 150 முதல் 180 சிகரெட் வரை குடிப்பார். இயக்குனர்களுக்கு ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம் என சத்யஜித்ரே குறிப்பிட்டதைத் தொடர்ந்து, வெற்றிமாறன் சிகரெட் பழக்கத்தை கைவிட்டார்.
“எப்பொழுதும் நடுநிலை என்ற ஒன்று இல்லை. நீங்கள் நடுநிலை என்று உங்களை சொல்லிக்கொள்கிறீர்கள் என்றால், ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக செயல்படுகிறீர்கள்.” என்பார் வெற்றிமாறன்.
தனது அரசியல் நிலைப்பாட்டிலும், சினிமாவிலும் சமூக பொறுப்புடன் செயல்பட்டு வரும் வெற்றி மாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
செல்வம்
சூர்யா பிறந்தநாளுக்கு வெற்றிமாறன் தரும் சர்ப்ரைஸ்!