உணர்வு இருக்கும் அனைவரும் உதயநிதியுடன் நிற்க வேண்டும்: வெற்றிமாறன்

Published On:

| By christopher

vetri maran support udhayanithi

“சமத்துவத்தை மறுக்கும் எதுவாக இருந்தாலும் அதனை வீழ்த்த வேண்டும். அந்த வகையில் அதைப்பற்றி பேசியிருக்கும் உதயநிதியின் கருத்துக்கு நான் துணை நிற்கிறேன்” என இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார்.

சென்னையில் தமிழ் ஸ்டூடியோ சார்பில் நேற்று (செப்டம்பர் 6) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வெற்றிமாறன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“சமத்துவம் என்பது பிறப்புரிமை. அதில் கேள்விகள் இல்லை. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது அடிப்படை பிறப்புரிமை.

அதனை மறுக்கும் எதுவாக இருந்தாலும், அது எந்த ரூபத்தில் இருந்தாலும் அதனை எதிர்ப்பதும், வீழ்த்துவதும் சுதந்திர மனிதர்களாக, விடுதலை விரும்பும் மனிதர்களாக நம் அனைவரின் கடமை.

அதைப்பற்றி பேசியிருக்கும் உதயநிதிக்கு இந்த உணர்வு இருக்கும் அனைவரும் உடன் நிற்க வேண்டும் என்பது என் விருப்பம்.

நான் அவருக்கு ஆதரவாக நிற்கிறேன். அவர் சொன்ன கருத்துக்கு என்னுடைய ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கு இந்தியா என்கிற பெயர் போதுமானதாக உள்ளது என்றவரிடம் தேசிய விருதுகள் குறித்த சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பியபோது,

திரைப்பட துறை சார்ந்த தேசிய விருதுகள் குறித்து எனக்கு வேறு விதமான கருத்துகள் உண்டு. ஒரு படத்தை நாம் ஒருவித தேர்வுக்கு அனுப்புகிறோம் என்றாலே அந்த தேர்வு குழுவின் முடிவுக்கு நான் ஒப்புகொள்கிறேன் என்ற அடிப்படையில் தான் அனுப்புகிறேன்.

அப்படி நாம் படத்தை அனுப்பும்போதே அதன் முடிவுக்கு உடன்பட்டு தான் அனுப்புகிறோம். விருது கிடைக்கிறதோ, இல்லையோ அது அந்த தேர்வுகுழுவின் முடிவு.

ஒரு தேர்வு குழுவின் முடிவு நிச்சயமாக ஒரு படத்தின் தரத்தையோ, சமூக பங்களிப்பையோ தீர்மானிக்காது. குறிப்பாக ‘ஜெய்பீம்’ மாதிரியான ஒரு படம் வந்தபிறகு சம்பந்தபட்ட சமூகத்தினருக்கு மாற்றங்கள் நடந்துள்ளது. அந்தப்படம் என்ன செய்யவேண்டும் என அவர்கள் எடுத்தார்களோ அதை அந்தப்படம் சாதித்து விட்டது. விருது என்பது கூடுதல் அங்கீகாரம். படத்தின் தரத்தை தேர்வுக்குழு தீர்மானிக்க முடியாது” என்றார்.

இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share