பருத்திவீரன் படம் தொடர்பாக இயக்குநர் அமீர்-தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையிலான பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. ஞானவேல் ராஜாவின் குற்றச்சாட்டுகளுக்கு சமீபத்தில் இயக்குநர் அமீர் விளக்கம் அளித்திருந்தார். என்றாலும் இது தொடர்பான பிரச்சினைகள் இன்னும் நீறு பூத்த நெருப்பாகவே இருக்கின்றன.
இதற்கிடையில் நடிகரும், இயக்குநருமான சசிகுமார், சமுத்திரக்கனி மற்றும் கரு.பழனியப்பன் ஆகியோர் விளக்கம் அளித்தும், அறிக்கை வெளியிட்டும் அமீருக்கு தங்களது ஆதரவை தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா தன்னுடைய எக்ஸ் தளத்தில் இயக்குநர் அமீர் குறித்து ட்வீட் செய்துள்ளார்.
அதில், ”பிப்ரவரி 2, 2016, இயக்குனர் அமீர் அண்ணாவிடமிருந்து எனக்கு ஒரு போன் வந்தது… நான் பிரசாத் ஸ்டுடியோவிற்கு வெளியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்… எனக்கு அது நன்றாக நியாபகம் இருக்கிறது, ஏன் என்றால், இறுதி சுற்று படத்திற்காக எனக்கு முதல் முதலாக திரையுலகில் இருந்து போன் செய்து பாராட்டிய சிலரில் அவரும் ஒருவர்… நான் ஒரே ஒரு விஷயம்தான் அவரிடம் சொன்னேன்… என் படத்தில் வந்த மதியின் கதாப்பாத்திரம் முத்தழகியின் பாதிப்புதான் என்று.
ஒரு ஆணின் எழுத்துக்களில் ஒரு பெண் கதாப்பாத்திரம் இவ்வளவு முழுமையாக எழுதப்பட்டது அதுவே முதல் முறை என்றும் அவரிடம் சொன்னேன். நான் என் படத்தில் மதி மற்றும் பொம்மி கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளிடம் பருத்தி வீரன் படத்தை பார்த்துவிட்டு வருமாறு தான் சொல்லி அனுப்பினேன். அதுதான் தமிழ் சினிமாவில் தடம் பதித்த மிகச்சிறந்த ஓர் இயக்குனருக்கு நான் செய்யும் மரியாதை… இதுதான் நான் சொல்ல விரும்பும் விஷயம்.. நன்றி…,” என தெரிவித்துள்ளார்.
ராம் படத்தின் மேக்கிங் சரியில்லை என சுதா கொங்கரா கூறியதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சுதா கொங்கரா தன்னுடைய எக்ஸ் தளத்தில் அமீர் குறித்து ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றப்பட்டது!
17வது ஆண்டிலும் கேப்டன் தோனி! – சிஎஸ்கே வெளியிட்ட வீரர்களின் முழுப்பட்டியல்!