கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 மற்றும் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படம் ஒன்றையும் இயக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் சங்கர்.
இந்த இரண்டு படங்களுமே 50% அளவிற்கு தான் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. முதலில் இந்தியன்-2 வை முடித்துத் தரவேண்டிய கட்டாயத்தில் ஷங்கர் இருக்கிறார்.
இவை தவிர, இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கும் இந்திப் படமொன்றை ஷங்கர் இயக்குகிறார்.
இந்தப் படம் தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அந்நியன்’ படத்தின் மொழிமாற்று படம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பென் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார்.
இந்நிலையில் மூன்றாவதாக ஒரு படத்தை இயக்குவதற்கான ஆரம்ப கட்ட வேலைகளில் ஷங்கர் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், காவல் கோட்டம் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவருமான சு.வெங்கடேசன் , விகடன் வார இதழில் தொடராக எழுதி வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற வேள்பாரி நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியை ஷங்கர் மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி அந்நாவலை இரண்டு பாகங்களாக திரைப்படமாக்குவது என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறதாம்.
அதற்கான செலவுத்தொகை சுமார் ஆயிரம் கோடி என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், அப்படத்தில் நாயகனாக யார் நடிப்பது என்பதையும் முடிவு செய்துவிட்டார்களாம்.
சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இயக்குநர் ஷங்கர், சு.வெங்கடேசன் ஆகியோரை அந்த நாயகன் சந்தித்துப் பேசியிருக்கிறாராம். அவரே கதாநாயகனாகும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.
கடந்த மாதம் மதுரையில் நடைபெற்ற விருமன் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் சு.வெங்கடேசன் கலந்துகொண்டு பேசிய போது சூர்யா, ஷங்கர் ஆகியோரை பற்றியும் குறிப்பிட்டு பேசினார்.
அப்போது திரைப்பட தயாரிப்பு என்று குறிப்பிடாமல் ஆரோக்கியமான முயற்சி ஒன்றை பேசிக் கொண்டிருக்கிறோம், விரைவில் அது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறினார்.

அதன் தொடர்ச்சியாக இந்த சந்திப்புகள் இருக்கக்கூடும் என்கின்றனர். தென்னிந்திய சினிமாவில் பிரம்மாண்டத்தை அறிமுகப்படுத்தியவர் ஷங்கர்.
அவருக்குப்பின் தெலுங்கு,மலையாளம், இந்தி, கன்னட மொழிகளில் ஷங்கர் பிரம்மாண்டத்தை மிஞ்சும் வகையிலான படங்கள் வெளிவந்துவிட்டது.
இவைகளையெல்லாம் முறியடிக்கும் வகையில் தனது அடுத்த படைப்பு இருக்க வேண்டும் என்கிறாராம் ஷங்கர்.
அதனால்தான் வேள்பாரி நாவலை இரண்டு பாகங்களில் 1000 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க வேண்டும் என தீவிரமான முயற்சியில் ஷங்கர் ஈடுபட்டிருக்கிறாராம்.
இந்தியத் திரையுலகில் இதுவரை வந்த பிரமாண்டப்படங்களின் உச்சமாக இந்தப்படம் அமையும் என்று சொல்லப்படுகிறது. பொன்னியின் செல்வன் வெளியீட்டுக்கு பின் வேள்பாரி திரைப்படம் சம்பந்தமான தகவல்கள் வரக்கூடும்.
இராமானுஜம்
பொன்னியின் செல்வன் : நிறைவேறாத ஜெயலலிதா விருப்பம், ரஜினிகாந்த் ஆசை!