டாம் க்ரூஸ்
தமிழ் சினிமாவில் தவிர்க்க இயலாத இயக்குனராக விளங்குபவர் எஸ்.பி.முத்துராமன். ஆனால், அவர் தந்த படங்களில் பெரும்பாலானவை பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டவை என்பதால் திரையுலகைச் சேர்ந்த மிகச்சிலர் மட்டுமே அவரது பெயரை மேற்கோள் காட்டுகின்றனர்.
அதையும் மீறி, அவரால் தங்களது திரை வாழ்வை உருவாக்கிக் கொண்ட பலர் இன்றும் அவரை பெருமையுடன் நினைவுகூர்ந்து வருகின்றனர். அப்படிப்பட்ட எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியானதும் திரை வரலாற்றில் நிகழ்ந்திருக்கிறது.
ரஜினி நடிப்பில் ‘எங்கேயோ கேட்ட குரல்’, கமல் நடிப்பில் ‘சகலகலா வல்லவன்’ இரண்டும் 1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று வெளியாகின. ’சகலகலா வல்லவன்’ பட்டிதொட்டியெங்கும் ‘ஹிட்’ ஆக, ‘ஓகே’ ரக வெற்றியைப் பெற்றது ‘எங்கேயோ கேட்ட குரல்’.
எஸ்.பி.எம்.மின் திரைப்பார்வை!
’என் உடன்பிறவாத அண்ணன்’ என்று நடிகர் ரஜினிகாந்தால் பாராட்டப்படும் எஸ்.பி.முத்துராமன், தனது வாழ்வை அலுவலக உதவியாளராகத் தொடங்கியவர்.
கண்ணதாசனின் ‘தென்றல்’ பத்திரிகை அலுவலகத்தில் ஆரம்பத்தில் வேலை பார்த்தவர், பிறகு திரைப்படங்களின் மீதான காதலால் ஏவிஎம் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கும் கதை இலாகாவில் சேர்ந்து பணியாற்றி, நல்லதொரு திரைக்கதை ஆசிரியராக வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்திருக்கிறது. ஆனால், எஸ்.பி.எம்மை எடிட்டிங் துறையில் சேரச் சொல்லியிருக்கிறார் மெய்யப்பச் செட்டியார்.
அந்த மாற்றம் தற்செயலானதா, திட்டமிட்டதா என்று தெரியாது. ஆனால், அதுவே எஸ்.பி.முத்துராமனை ஒரு இயக்குனராக மாற்றியது என்று நிச்சயமாகச் சொல்லலாம்.
ஏவிஎம் நிறுவனத்தில் உதவி படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர், பின்னர் கிருஷ்ணன் பஞ்சுவிடம் உதவி இயக்குனராகச் சேர்ந்தார். பீம்சிங், டி.யோகானந்த், புட்டண்ண கனகல், கிருஷ்ணன் நாயர், ஏ.சி.திருலோகச்சந்தர் என்று அறுபதுகளில் மிகச்சிறப்பாகச் செயல்பட்ட இயக்குனர்களோடு பணியாற்றிய அனுபவம் இவருக்குண்டு. அந்த அனுபவங்களே பின்னர் அடுத்தடுத்துப் பல படங்களை இயக்கத் துணை நின்றிருக்கிறது.
1972ஆம் ஆண்டு ‘கனிமுத்துப் பாப்பா’வில் தொடங்கிய எஸ்.பி.எம்.மின் இயக்குனர் அவதாரம், 1995இல் வெளியான ‘தொட்டில் குழந்தை’யுடன் நிறைவுற்றது. ஆனால், அதன்பின்னர் ஏ.வி.எம். தயாரித்த திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களுக்கான உள்ளடக்க வடிவமைப்பைத் தீர்மானிப்பவர்களில் ஒருவராகத் திகழ்ந்திருக்கிறார்.
2000வது ஆண்டுக்குப் பின்னர், காலையில் எழுந்து அன்றாடக் கடன்களை முடித்ததும் அலுவலகம் செல்வது போல ஏ.வி.எம். சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் எஸ்.பி.எம். அந்தச் செயல்பாடே ஒரு திரைப்படத்தை உருவாக்குகையில் அவர் எத்தனை துரிதமாகவும் நேர்த்தியாகவும் செயல்பட்டார் என்பதைச் சொல்லிவிடும்.
இரண்டு வெற்றிகள்!
முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார், ஸ்ரீகாந்த், விஜயகுமார், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்று பல நட்சத்திர நாயகர்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். ரஜினிகாந்தை நாயகனாகக் கொண்டு 25 படங்கள் இயக்கிய இவர், கமல்ஹாசனோடு 10 படங்களில் பணியாற்றியிருக்கிறார்.
எண்பதுகளில் அடுத்தடுத்து ரஜினி, கமலை நாயகர்களாகக் கொண்டு படங்கள் இயக்கியிருக்கிறார். அவற்றில் பெரும்பாலானவை வெற்றிப் படங்கள்.
1984ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதியன்று இவர் இயக்கத்தில் ‘நல்லவனுக்கு நல்லவன்’ வெளியானது. அதற்கடுத்த நாள் ‘எனக்குள் ஒருவன்’ வெளிவந்தது. இரண்டுமே வெற்றிப்பட வரிசையில் இணைந்தன.
அந்த வகையில், ஒரேநாளில் வெளியான ‘சகலகலா வல்லவன்’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ இரண்டும் ஒரு இயக்குனராக எஸ்.பி.எம். எப்படிப்பட்ட உழைப்பாளி என்பதை நிரூபித்தன.
கமல்ஹாசனை நடனத்திலும் சண்டைக்காட்சிகளிலும் வேறுவிதமாகக் காண்பிப்பது என்ற ஒரே நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘சகலகலா வல்லவன்’. அப்படத்தின் கதையை ஒரு பயணச்சீட்டின் பின்பக்கத்தில் எழுதிவிடலாம் என்று அக்காலத்தில் சொல்லப்படுவதுண்டு.
‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்தின் கதை, கணவரை விட்டுப் பிரிந்து வேறொருவருடன் சென்ற பெண் மனம் மாறி மீண்டும் சொந்த ஊருக்கு வந்து தனியாக வாழ்வதைச் சொன்னது. வில்லனாகவும் நாயகனாகவும் ரசிகர்களின் மனதில் உச்சத்தைத் தொட்ட ரஜினிகாந்தை அதுநாள்வரை இளந்தாரிகளே கொண்டாடினார்கள். அந்த எல்லையைக் கடந்து, அவரைப் பெண்களும் பெரியவர்களும் ரசிக்கும்படியாகச் செய்தது இப்படம்.
உள்ளடக்கத்தில் இரண்டு படங்களுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. இரண்டிலும் திரைக்கதை ட்ரீட்மெண்ட் வெவ்வேறு வகையில் அமைந்தவை. ஆனால், எடுத்துக்கொண்ட கதைக்குத் தகுந்தபடி பாத்திரங்களையும் காட்சியமைப்பையும் வார்த்த வகையில் நம்மை அப்படங்களுடன் ஒன்றச் செய்தவர் எஸ்.பி.முத்துராமன்.
இப்படங்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் உருவாக்கி, தயாரிப்பு நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கச் செய்தவராகவும் இருந்தவர் எஸ்.பி.முத்துராமன்.
அனுபவங்களைப் பாடமாக்கலாம்!
சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பேட்டியொன்றில், தான் படம் இயக்குகையில் முன் தயாரிப்பு பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்ததாகக் குறிப்பிட்டிருந்தார் எஸ்.பி.எம். முழு திரைக்கதையையும் தயார் செய்தபிறகே நடிகர் நடிகைகளின் கால்ஷீட்டை வாங்குவது, லொகேஷன்களை முடிவு செய்வது, உரிய காலத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்து படத்தொகுப்பு, பின்னணி இசை கோர்ப்பு, ஒலிக்கலவை மற்றும் லேப் பிராசஸிங் பணிகளை நிறைவு செய்வது என்றிருந்திருக்கிறார்.
தமிழ் மற்றும் கன்னடத்தில் ‘பிரியா’ படத்தின் படப்பிடிப்பினை 26 நாட்களில் நிறைவு செய்தவர் எஸ்.பி.முத்துராமன். ‘குரு சிஷ்யன்’ படத்திற்காக 15 நாட்களே ரஜினிகாந்த் கால்ஷீட் தந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. இப்படிப் பல படங்களை உதாரணம் காட்டலாம். அதனாலேயே, ஆண்டுக்கு ஐந்து அல்லது ஆறு படங்களை இயக்குவது என்றிருந்திருக்கிறார் எஸ்.பி.முத்துராமன்.
மொத்தமாக 72 படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். அதில் மூன்று மட்டுமே தெலுங்குப் படங்கள். அவையும் கூடத் தமிழில் இருந்து ரீமேக் செய்யப்பட்டவை. திரைப்படங்களை உருவாக்கும் முயற்சிகளில் இருப்பவர்கள், இவரைப் போன்ற இயக்குனர்களின் அனுபவங்களைப் பாடமாகப் படிப்பது நிச்சயம் பலன் தரும்.
இன்று, ஒரே நாளில் ஒரு நாயகனின் இரண்டு படங்கள் வெளியாவதென்பது குதிரைக்கொம்பு தான். வியாபாரக் கணக்குகளைத் தாண்டி, அதற்கான உழைப்பும் காத்திருப்பும் சாத்தியமில்லாதது என்பது முக்கியக் காரணம். அப்படியிருக்க, இயக்குனரின் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவதை நம்மால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
அதனாலேயே, ஒரு இயக்குனராக எஸ்.பி.முத்துராமன் கொண்டாடப்பட வேண்டியவராகத் திகழ்கிறார். ரஜினியும் கமலும் இன்றும் வெற்றி நாயகர்களாகத் திகழ்வதற்கான விதையை இட்டவர்களில் ஒருவரான எஸ்.பி.எம். போன்ற கமர்ஷியல் பட ஜாம்பவான்களைக் கவுரவிக்கும்விதமாகத் திரைத்துறை ஏதேனும் ஒரு முயற்சியை மேற்கொள்ள வேண்டும்..!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“நான் ரெடி தான் வரவா”… மாநாட்டுக்கு தேதி குறித்த விஜய்?
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: ஆகஸ்ட் 20-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு!
பியூட்டி டிப்ஸ்: உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள அவசியம் இதை தெரிஞ்சுக்கோங்க!