மலையாள சினிமாவைச் சேர்ந்த நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டியில் பழம்பெரும் நடிகை சாரதா மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வல்சலா ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.
இந்தக் கமிட்டி 60க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட நடிகைகள், பெண் கலைஞர்கள் மற்றும் நடிகர்களிடம் விசாரணை நடத்தியது. படங்களில் நடிக்க வந்தபோது அனுபவித்த கொடுமைகள் பற்றி அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் இந்தக் கமிட்டி அறிக்கை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் 4 வருடங்களுக்கு மேலாக இந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டின் பேரில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்த அறிக்கை வெளியானது.
இதற்கிடையே, பெங்காலி நடிகையான ஸ்ரீலோக மித்ரா, டைரக்டர் ரஞ்சித் தன்னிடத்தில் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு சுமத்தினார்.
அதில், பாலேரி மாணிக்யம் என்ற படம் குறித்து விவாதம் நடத்த தனது வீட்டுக்கு வரும்படி ரஞ்சித் என்னை அழைத்தார். அங்கு, சென்ற போது, தன்னிடத்தில் தவறாக நடக்க முயன்றார். நான் மறுத்ததால், அந்த கதாபாத்திரத்துக்கு நான் சரியாக பொருந்த மாட்டேன் என்று கூறி திருப்பி அனுப்பியதாகவும் தன் குற்றச்சாட்டில் ஸ்ரீலேகா மித்ரா கூறியிருந்தார்.
இந்த ரஞ்சித் கேரள பிலிம் அகாடமி தலைவராகவும் இருந்தார். ஸ்ரீலோக மித்ராவின் குற்றச்சாட்டை தொடர்ந்து, ரஞ்சித் பதவியில் இருந்து விலக வேண்டுமென்று பலரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தான் கேரள பிலிம் அகாடமி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கேரள கலாசாரத்துறை அமைச்சர் சாஜி செரியனுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
அதே போல மலையாள நடிகர்கள் சங்கமான அம்மாவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நடிகர் சித்திக்கும் விலகியுள்ளார். இது தொடர்பாக, சங்கத்தின் தலைவரான மோகன்லாலுக்கு இமெயில் வழியாக ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார். இவர் மீது நடிகை ரேவதி சம்பத் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
”புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவதில் எந்த தாமதமும் இல்லை” : அமைச்சர் சக்கரபாணி
போக்குவரத்து மாற்றம்: போரூர் ரூட்டில் செல்கிறீர்களா… அப்போ இத படிங்க!