ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் திரைப்படத்திற்கு, ‘ஏழு கடல் ஏழு மலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இயக்குனர் ராம், பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்தவர். 2007-ஆம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார்.
இவரது இயக்கத்தில் 2013-ல் வெளியான தங்க மீன்கள் திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வாங்கியது. தொடர்ந்து தரமணி, பேரன்பு உள்ளிட்ட திரைப்படங்களை ராம் இயக்கினார்.

யதார்த்தமான திரை மொழியில் எளிய மக்களின் வாழ்வியலையும், அரசியலையும் பேசக்கூடியவர் ராம்.
அவரது திரைப்படத்திற்கென்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இன்று இயக்குனர் ராமிற்கு 48-வது பிறந்தநாள். அவரது படத்தில் நடித்துள்ள நடிகர் நிவின் பாலிக்கும் இன்று 38-வது பிறந்தநாள்.
இவர்களது பிறந்தநாளை முன்னிட்டு, ராமின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ராமின் ஐந்தாவது படத்திற்கு ’ஏழு கடல் ஏழு மலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டவர்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

காதல் குறித்த திரைப்படமாக, ஏழு கடல் ஏழு மலை உருவாகியுள்ளது. இப்படத்தின் அறிவிப்பு குறித்து வெளியான வீடியோவில்,
“காதல்னு வந்துட்டா மனசு மட்டுமல்ல உடம்பு, உசுரு எல்லாம் பறக்கும்” என்று நிவின் பாலி பேசும் வசனம் இடம் பெற்றுள்ளது.
தரமணி திரைப்படத்தில் நகர்ப்புற பெண்மணி ஒருவரின் வாழ்க்கையையும், காதலையும் அழகாக காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர் ராம்.
அதனை போன்று ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்திலும் வித்தியாசமான காதல் கதையை அமைத்திருப்பார் என்று இயக்குனர் ராம் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
செல்வம்
உச்ச நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
4 மொழிகளில் டப் செய்யப்படும் ‘கந்தாரா’!