how japan movie made

ஜப்பான் படம் உருவானது எப்படி?: இயக்குநர் ராஜு முருகன்

சினிமா

“வெகுஜன ரசிகர்களுக்கான பொழுதுபோக்குக்கு, குடும்பமாக வரும் ரசிகர்களுக்கான அம்சங்கள் எல்லாமே ‘ஜப்பான்’ படத்தில் இருக்கும். அதேநேரம் என் படத்தில் இருக்கக் கூடிய சமுதாயம் சார்ந்த விஷயங்களும் இருக்கும். அதை என்றுமே நான் தவற விட முடியாது. அந்த அம்சங்கள் வேண்டும் என கார்த்தியும் தீவிரமாக இருந்தார்” என்கிறார் இயக்குநர் ராஜு முருகன்.  japan movie made

அவர் இயக்கத்தில் கார்த்தி, அனு இமானுவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக நவம்பர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படம் தொடர்பாக இயக்குநர் ராஜுமுருகன் பகிர்ந்தவை,

ஜப்பான் படம் எப்படி உருவானது என்பதை பற்றி ராஜுமுருகன் கூறுகிறபோது,

“இந்தப் படம் கண்டிப்பாக இதுவரைக்கும் நான் எடுத்த படங்களிலிருந்து வித்தியாசமானது. முழுக்க முழுக்க ஜாலியான ஒரு படமாக இருக்கும். கார்த்தி நடிக்கிறார் என்பதால் அவரோட நடிப்புத் திறன், ரசிகர்களின் எதிர்பார்ப்பு என எல்லாவற்றுக்கான படமாக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. முதலில் இந்த ஜப்பான் கதாபாத்திரம் அவருக்கான சரியான கதாபாத்திரமாக திரைக்கதையில் அமைந்துவிட்டது. திரைக்கதையைப் படித்தவுடன், இந்த கதாபாத்திரம் என்னை ஈர்த்துவிட்டது என்று கார்த்தி சொன்னார்.

அப்போது அவர் இந்தக் கதைக்குள் வந்துவிட்டார். தொடர்ந்து இந்தக் கதாபாத்திரத்தை எப்படி கொண்டு செல்வது என்பது பற்றி பல உரையாடல்கள் எங்களுக்குள் இருந்தன. ஒரு நாயகன், நடிகர் என்பதைத் தாண்டி அவர் அடிப்படையில் முதலில் உதவி இயக்குநராக இருந்தவர். எனவே அடிப்படையில் அவருக்கு திரைக்கதை பற்றிய புரிதல் அதிகம். அது எனக்கும் உதவியாக இருந்தது. அப்படி அந்தக் கதாபாத்திரத்தை ஒவ்வொரு கட்டமாகக் கொண்டு சென்றோம். இது முழுக்க முழுக்க ஜப்பான் என்கிற கதாபாத்திரத்தை ஒட்டிய படம்.

அதில் ஜனரஞ்சக ரசிகர்களுக்கான பொழுதுபோக்குக்காக குடும்பமாக வரும் ரசிகர்களுக்கான அம்சங்கள் எல்லாமே இருக்கும். அதே நேரம் என் படத்தில் இருக்கக் கூடிய சமுதாயம் சார்ந்த விஷயங்களும் இருக்கும். அதை என்றுமே நான் தவற விட முடியாது. அந்த அம்சங்கள் வேண்டும் என கார்த்தியும் தீவிரமாக இருந்தார். எனவே இது நடிகர் கார்த்தி, இயக்குநர் ராஜுமுருகன் என இருவரது முத்திரைகளும் இருக்கும் படம். எங்களின் கூட்டு முயற்சி என்று கூட சொல்லலாம். இப்படி அமைவது எனக்கும் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியைத் தருகிறது. ஏனென்றால் இது கார்த்தியின் 25வது படம். அதை இயக்கும் வாய்ப்பை எனக்குத் தந்திருக்கிறார். அவர் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாகக் கண்டிப்பாக ஜப்பான் இருக்கும்” என்றார்.

தொடர்ந்து கார்த்தியின் ஜப்பான் கதாபாத்திரம் பற்றி கூறுகிறபோது,

”இப்படியான கதாபாத்திரம் அமைந்துவிட்டதால் அது இப்படி இருக்கலாமா என்று கேட்டு பல ஒப்பனை, ஆடைகள் என யோசனைகளை கார்த்தியே அடிக்கடி வாட்ஸ் ஆப்பில் அனுப்புவார். கடைசியில் அவர் படத்தில் பேசும் விதம் வரைக்கும் மாறியது. ஏனென்றால் 24 படங்கள் நடித்தாகிவிட்டது. எப்படி பேசினாலும் கார்த்தி என்கிற அந்த பிம்பம் கண் முன்னே வந்துவிடும். எனவே வேறு விதமாகப் பேசுகிறேன் என்று அவரே சொன்னார். அது எப்படி இருக்கலாம் என்று நிறைய யோசித்தோம்.

ஒரு கதாபாத்திரத்தை வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும் என்கிற அவரது மெனக்கெடல், உழைப்பு எனக்குமே கூட பெரிய கற்றல் அனுபவமாக இருந்தது. ஜப்பான் என்கிற கதாபாத்திரம் அடுத்து என்ன செய்யும் என்று அவனுக்கே தெரியாது. கோவிட்டுக்கு பிந்தைய நமது உலகத்தின் ஒரு பிரதிநிதியே அவன். என்னிடம் கார்த்தி கேட்கும் கேள்விகள் அர்த்தமுள்ளவையாக இருக்கும். திரைக்கதையை மேம்படுத்தத்தான் கேட்பார். ஒரு தொழில்நுட்பக் கலைஞரோ, நடிகரோ ஒரு படத்தில் பணியாற்ற முன் வரும்போது அவர்களுக்கு அந்தப் படத்தைப் பற்றிய ஒரு மதிப்பீடு இருக்கும். சிலர் இந்தக் கதைக்கு இவ்வளவு தான் பணியாற்ற வேண்டும் என்கிற முன் முடிவோடு வருவார்கள். அப்படி வருபவர்களிடமிருந்து அவர்கள் நினைத்த அளவுக்கு மேல் நம்மால் ஒரு உழைப்பை வாங்கவே முடியாது.

இயக்குநர் நம்பும் ஒருவரிடமிருந்து தேவையான உழைப்பு வரவில்லையென்றால் அது இயக்குநருக்கு மிகப்பெரிய வலியைத் தரும். அப்படியான அனுபவங்கள் எனக்கு இருந்திருக்கிறது. ஆனால் கார்த்தியைப் பொருத்தவரை எப்போதுமே நினைத்ததை விட அதிக உழைப்பைத் தர வேண்டும் என்றே நினைப்பார். அதுதான் அவரிடமிருந்து கேள்விகளாக வரும். எனக்கு அது ஆரோக்கியமான விஷயமாகவே தெரிந்தது” என்றார். how japan movie made

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இராமானுஜம்

ஆஸ்திரேலியா வெற்றி: கொண்டாடும் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள்!

சென்னையில் என்.ஐ.ஏ சோதனை: 3 பேர் கைது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0