’அமரன்’ இயக்குநருடன் இணையும் தனுஷ் ?
இந்தாண்டு தீபாவளிக்கு வெளியான சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை படைத்து வரும் இந்தத் திரைப்படம் சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையிலேயே அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியுள்ளது.
மேலும், இந்தத் திரைப்படத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்ற அரசியல் தலைவர்களும், நடிகர் சூர்யா, சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, போன்ற திரைப்பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்தப் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. தற்போது, அடுத்ததாக நடிகர் தனுஷ் – இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி காம்போவில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளதாகவும், அதை தயாரிப்பாளர் மதுரை அன்பு தயாரிக்கவிருப்பதாகவும் தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மேலும், ’அமரன்’ படத்தின் இந்த மாபெரும் வெற்றியால் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்தப் படத்திற்கு ரூ.15 கோடி வரை சம்பளம் கொடுக்கப்படலாம் எனவும் திரை வர்த்தக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
நடிகர் தனுஷ் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான ‘ராயன்’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது தனுஷ், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, ‘இட்லி கடை’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார். அடுமட்டுமின்றி தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, ரஷ்மிகா மந்தானா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி காம்போ உருவாகிறது என்பதற்கான ஒரு ஹிண்டாக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘அடுத்ததாக நான் இயக்கும் படத்தில், ஒரு அசாத்திய திறமை கொண்ட நடிகர் நடிப்பார்’ எனக் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிக் பாஸ் சீசன் 8 : வீட்டுக்குள் ஸ்ட்ரைக் செய்த பெண்கள் அணி!