அமரன் திரைப்படத்தில் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் சாதிய அடையாளம் இடம்பெறாதது ஏன்? என்பது குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் தீபாவளியன்று வெளியான திரைப்படம் ‘அமரன்’.
மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான இப்படம் 3 நாட்களில் ரூ.100 கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.
இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்படும் நிலையில், சிலர் முகுந்த் வரதராஜனை ஏன் பிராமணராக படத்தில் காட்டவில்லை என சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று (நவம்பர் 3) நடைபெற்ற அமரன் திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, முகுந்த் வரதராஜனின் சாதிய அடையாளம் படத்தில் ஏன் காட்டப்படவில்லை என்பதற்கான காரணத்தை தெரிவித்தார்.
அவர் பேசும்போது, “அமரன் படத்தை பொறுத்தவரை, ’முகுந்த் ஒரு தமிழர், அந்த கதாப்பாத்திரத்தில் ஒரு தமிழர் தான் நடிக்க வேண்டும்’ என்பது அவரது மனைவி இந்து ரெபக்கா வர்கீஸ் எனக்கு முதன்முதலில் வைத்த கோரிக்கை.
அந்த வகையில், சிவகார்த்திகேயன் என் பார்வையில் ஒரு அக்மார்க் தமிழனாக தெரிந்தார். அப்படி தான் அவர் இந்த படத்திற்குள் வந்தார்.
அதே போல முகுந்த் ‘நைனா’ நைனா’ என்று தினமும் அழைக்கும் அந்த தந்தை வரதராஜனும், ‘ஸ்வீட்டி’ என்று அழைக்கும் தாய் கீதாவும் வைத்த கோரிக்கை என்னவென்றால், ”முகுந்த் எப்போதும் தன்னை இந்தியன் என்று சொல்லிக் கொள்ள தான் ஆசைப்படுவார். தன்னுடைய சான்றிதழில் கூட எந்த குறியீடும் இருக்கக் கூடாது என்று நினைப்பார். எனவே ஒரு இந்தியன், தமிழன் என்ற அடையாளத்தை மட்டும் ஒரு ராணுவ வீரனாக இந்த படத்தில் அவருக்கு கொடுங்கள்” என்று அவரது பெற்றோர் எங்கள் முதல் சந்திப்பிலேயே கேட்டுக் கொண்டனர்.
அதையும் தாண்டி ஒரு இயக்குநராக, இந்த பயணத்தில் அவர் மீது கொண்ட மரியாதையால் படம் எடுத்திருக்கிறோம். அதில் அவர் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது ஒரு முக்கியமான விஷயமாக எங்கள் பார்வைக்குப் படவில்லை. அவர்கள் வீட்டுக்கு நாங்கள் சென்றபோது கூட நாங்களும் அதை கேட்கவில்லை. அவர்களும் அதுகுறித்து பேசவில்லை.
அசோக் சக்ரா விருது பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜன் ஆற்றிய சிறப்பான பணிக்கும், தியாகத்திற்குமான மரியாதையை அமரன் படம் செய்திருக்கிறது என்று நம்புகிறேன்” என்று ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தமிழக அரசின் முதல்வர் மருந்தகம் அமைக்க முழு விவரங்கள்!
காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்துங்கள்: பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேண்டுகோள்