இயக்குநர் பா.ரஞ்சித் ‘அட்டக்கத்தி’ படத்தை தொடர்ந்து ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் கார்த்தி நாயகனாக நடித்த ‘மெட்ராஸ்’ படத்தை இயக்கினார்.
செப்டம்பர் 26, 2014 ஆம் ஆண்டு வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சூப்பர் ஹிட் அடித்த படமாகும். 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ‘மெட்ராஸ்’ 40 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்தது.
பா.ரஞ்சித் இயக்கிய ‘அட்டக்கத்தி’ முதல் தற்போது இயக்கி முடித்து இருக்கும் ‘தங்கலான்’, மற்றும் அவரது நீலம் புரடெக்க்ஷன் தயாரிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ முதல் ஜனவரி 25 அன்று வெளியாகி வெற்றி பெற்ற ‘ப்ளு ஸ்டார்’ படம் வரை தான் சார்ந்துள்ள தலித் சமூகம், அவர்கள் உரிமை பற்றிய காட்சிகள் பிரதானமாக இடம்பெற்றிருக்கும்.
கார்த்தி, ரஜினிகாந்த், ஆர்யா, விக்ரம் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை இயக்கிய போதும் மசாலா, கமர்சியல் விஷயங்களை திரைப்படத்தில் பயன்படுத்தாத சமரசமில்லாத இயக்குநராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு தலித் உரிமைகளுக்காக சினிமா, மற்றும் கலை இலக்கியம் சம்பந்தப்பட்ட அனைத்து தளங்களையும் பயன்படுத்தி வருகிறார்.
அதே போன்று திரைப்பட விழாக்களையும் தனது பிரச்சார மேடையாக பயன்படுத்தி வருகிறார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா அன்று சென்னையில் நடைபெற்ற ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்வை மறைமுகமாக விமர்சித்த பா.ரஞ்சித் தான் நாயகனாக நடித்த இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பை வழங்கிய நடிகர் ரஜினிகாந்த்தை கடுமையாகவே விமர்சனம் செய்திருந்தார்.
இன்று வரை அவரை போன்று தமிழ் சினிமாவில் எந்த திரைக்கலைஞர்களும் பொது வெளியில் ராமர் கோவில் திறப்பு விழாவை விமர்சிக்காமல் மௌனம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது.
திரைப்பட விழாக்களில் இந்திய தணிக்கை துறையின் கோர முகத்தை அவ்வப்போது தனது சொந்த அனுபவங்களின் மூலம் விமர்சித்து வருகிறார். தற்போது தமிழ்நாடு அரசு விழா மேடையையும் அதற்காக பயன்படுத்தியுள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித்.
அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் நடிப்பில் ஜனவரி 25 அன்று வெளியான ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றதை அறிவிக்கும் வகையில் 2024 ஜனவரி 31 அன்று சென்னையில் வெற்றி விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய இயக்குநரும், அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவருமான பா.ரஞ்சித், “சென்சார் போர்டு குழுவினர் ‘ப்ளூ ஸ்டார்’ படம் பார்த்தனர்.
நீலம் புரொடக்ஷன் படம் சென்சாருக்கு வருகிறது என்றாலே, படத்தில் இதெல்லாம் இருக்கப் போகிறது என அலர்ட் ஆகிவிடுவார்கள். இந்தப் படத்துக்கு எந்தச் சிக்கலும் வராது என நினைத்தேன்.
‘ப்ளூ ஸ்டார்’ படம் வெளியாகக்கூடாது என அங்கே கருத்துகள் வெளிப்படத் தொடங்கின. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தப் படத்தை ஏன் வெளியிடக்கூடாது? என கேட்டபோது, ‘படம் சாதிய ரீதியாக உள்ளது. பூவை ஜெகன் மூர்த்தியார் படம் உள்ளது. அவர் ரவுடி என கூறினர்’.
பூவை மூர்த்தியார் எங்களை படிக்க வைத்தவர். பெரிய தலைவர் அவர். எங்களை படிக்க வைத்த அவரை எப்படி நீங்கள் ரவுடி என கூறலாம்? என கேள்வி எழுப்பினேன். எவ்வளவு பேசியும் சென்சார் தர முடியாது என கூறி விட்டனர்.
பின்னர் ரிவைஸிங்கில் மீண்டும் விண்ணப்பித்தோம். அதில் நிறைய மாற்றங்களைச் செய்யச் சொன்னனர். அதன் பிறகுதான் சென்சார் கிடைத்தது. ஒரு படம் ஒற்றுமையை வலியுறுத்தி, எல்லோரும் ஒன்றாக இருக்கச் சொல்கிறது.
வேறுபாடுகளுக்கு எதிராக திரளக்கூறும் ஒரு படம் வெளிவரக்கூடாது என சொல்லும் அளவுக்கு மாற்றுக்கருத்துடைய பலர் சென்சாரில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் படம் வெளியாகி மக்களிடையே சென்று சேர்ந்து வெற்றி பெற்றுள்ளது.
உங்களுடன் முரண்படுவது, சண்டையிடுவது எங்களுக்கு விருப்பமில்லை. நாம் எல்லோரும் ஒன்றாக இருப்போம் என்பதை சொல்லும் படமாக இதனைப் பார்க்கிறேன். இதையே எத்தனை நாளைக்குத்தான் பேசுவார்கள் என்றால், என் பிரச்சினை இன்னும் தீரவில்லை. பேசித்தான் ஆகவேண்டும். மக்களை கனெக்ட் செய்யாமல், அதை கலையாக மாற்றாமல் இங்கே நின்று கொண்டிருக்க முடியாது.
மக்கள் விரும்பும் மொழியில் சொல்கிறோம். இந்த வெற்றி பலருக்கு நம்பிக்கையை கொடுக்கிறது. அந்த நம்பிக்கை சமூகத்தில் முடிந்த அளவுக்கு மாற்றத்தை உருவாக்கும் என எங்கள் படங்கள் மூலமாக நாங்கள் நம்புகிறோம்” என பேசியது பொது வெளியில் விவாத பொருளாக மாறியது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற மாணவர்களின் புகைப்படக் கண்காட்சி தொடக்க விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
நிகழ்வில் பா.ரஞ்சித் பேசுகிற போது, “நான் அரசுப் பள்ளி, கல்லூரி மாணவன் தான். அரசுப் பள்ளியில் படிப்பது என்பதையே தாழ்வு மனப்பான்மையாக கருதும் சூழல் சமூகத்தில் உள்ளது. நான் படித்த பள்ளியில் ஒருவர் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாலே பெரிய விஷயம்.
12-ம் வகுப்பில் ஆங்கில பாடத்தில் நான் பெயில் ஆகியிருந்தேன். படிக்க வேண்டும் என்ற ஆசை என்னிடம் இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் படிக்கும் சூழல் இல்லை. நான் பள்ளியில் படிக்கும்போது படிப்பதைக் காட்டிலும், வரைவது தான் அதிகம். கணக்கு கூட எழுதமாட்டேன்.
வரைந்துகொண்டேயிருந்தேன். அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் நன்றாக பழகுவார்கள். ஊக்குவிப்பார்கள். அரசு பள்ளிக்கூடங்களில் படித்தது எனக்கு நம்பிக்கையை கொடுத்தது. நான் என்னவாக ஆகவேண்டும் என்பதையும் அரசு பள்ளி, கல்லூரி நிறுவனங்களே முடிவு செய்தன.
என்னுடைய ‘மெட்ராஸ்’ படத்தின் கதையை பலரிடம் சொல்லும்போது அவர்கள் என்னிடம் ‘டார்க்’ ஆக உள்ளது என்றனர். சேரிப்பகுதி கதைகள் என்றாலே டார்க் கதைகள் என்ற மனநிலை அவர்களிடம் உண்டு.
நானும் அங்கே தான் வாழ்ந்திருக்கிறேன். என்னுடைய வாழ்க்கை சந்தோஷமாக இருந்திருக்கிறது. கொண்டாட்டமான வண்ணமயமாக இருந்திருக்கிறது. ஆனால், அந்தப் பகுதி தொடர்பான கதைகளை சொல்லப்போகும்போது, இது சோகமான கதைகள் என்ற ஸ்டீரியோ டைப் எண்ணங்கள் இங்கு வலிமையாக இருக்கின்றன.
அந்த எண்ணங்களை உடைப்பதை பெரிய விஷயமாக பார்க்கிறேன். அதனால் தான் ‘மெட்ராஸ்’ படத்தில் மக்களின் வாழ்வியலை கலர்ஃபுல்லாக காட்ட விரும்பினேன். படத்தில் எந்த வண்ணங்களும் இருக்காது. சொல்லப்போனால் அந்தச் சுவரில் கூடுதலாக எந்த பெயிண்ட் கூட இருக்காது.
அங்கிருக்கும் மனிதர்களை வைத்து, கூடுதலாக எந்த பூச்சும் இல்லாமல், கூடுதல் லைட்டை கூட பயன்படுத்தாமல் இயல்பைக் காட்டினேன். ‘மெட்ராஸ்’ படத்துக்குப் பிறகு அதைப் பார்க்கும் கோணம் மாறியது.
‘அட்டக்கத்தி’ படத்தை பார்த்த ஒருவர் ‘ஆரண்ய காண்டம்’ படம் போல இருக்கிறது என்றார். இரண்டும் வெவ்வேறு எல்லை. வெவ்வேறு கதைகளைச் சொன்னாலும், களத்தை வைத்து ஒரேமாதிரி என புரிந்துகொள்கின்றனர். அந்த கோணத்தை மாற்றுவது முக்கியம் என கருதுகிறேன்.
சென்சார் போர்டு ‘மெட்ராஸ்’ படம் பார்த்துவிட்டு இதற்கு A+ தருகிறோம் என்றனர். ஏன் என கேட்டதற்கு, “ஸ்லம் மக்களைப் பற்றி தானே படம் எடுத்துள்ளீர்கள். அந்த மக்களுக்கு மட்டும் போட்டுக் காட்டுங்கள் அதற்கான சான்றிதழை தருகிறோம்.
காரணம் இது ரவுடிகளுக்கான படம்” என்றனர். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. “நீங்கள் எப்படி ஸ்லம் பகுதியில் வாழும் மக்களை ரவுடிகளாக சித்தரிப்பீர்கள். நானும் அங்கிருந்துதான் வந்தேன்.
நான் ரவுடியா” என கேட்டு சண்டையிட்டு தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டு பின் படம் வெளியானது. இந்திய சினிமாவில், தமிழ் சினிமாவில் ‘மெட்ராஸ்’ புதிய கோணத்தை உருவாக்கியது.
மக்களுக்கு படம் பிடித்திருந்தது. இந்த கோணத்தை உடைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால், இன்று அதன் பாதை இலகுவாகியிருக்கிறது என நினைக்கிறேன். ‘ப்ளூ ஸ்டார்’ படத்தை மக்கள் ஏற்று கொண்டாடியுள்ளனர். இந்த கோணத்தை இங்கிருக்கும் புகைப்படங்கள் மாற்றியிருக்கின்றன.
இந்த புகைப்படங்கள் அழகாக உள்ளன. இந்த குழந்தைகள் பொதுபுத்தியின் கோணங்களை உடைக்கும் புகைப்படங்களை எடுத்துள்ளனர். பள்ளிக்கல்வி துறையின் இந்த முன்னெடுப்பு பாராட்டுக்குரியது”, என்றார்.
-ராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சூறாவளிக்காற்று 65 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்… கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை மையம்
விவசாயி சின்னம் கிடைக்குமா? – நீதிமன்றம் ஏறும் சீமான்
மீண்டும் ஒரு கேப்டன் மாற்றம்… எந்த டீம்லன்னு பாருங்க!
குழந்தையின் வாழ்க்கையில் பெற்றோர்களின் பங்களிப்பு எப்படி இருக்கவேண்டும்?