சினிமாவுக்காக தன்னை வருத்திக் கொள்கிற, கலையை நேசிக்கிற ஒரு கலைஞனுடன் சேர்ந்து பணிபுரிவது சுலபமான ஒன்று அல்ல என்று விக்ரம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் தங்கலான் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.
விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் தங்கலான். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிடப்படவுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக அரங்கில் நேற்று (ஆகஸ்ட் 6) இரவு நடைபெற்றது.
நிகழ்வில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில்,
தங்கலான் படத்தை அறிவித்த போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நிறைய பிரச்சினைகளில் இருந்தார். நான் அவருடன் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். தங்கலான் படம் பேசும் அரசியலுக்கு, படப்பிடிப்புக்கான செலவுகளுக்கு ஞானவேல் ராஜா தடையாக இருந்ததில்லை.
முழுமையான படைப்பு சுதந்திரத்திற்கான ஆதரவாளர் அவர். சினிமா நமது வாழ்க்கையில் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. நான் கவின் கலைக் கல்லூரியில் சேர்ந்த பின்னர், நான் பார்த்த உலக சினிமாக்கள்தான் என்னை சினிமாவை நோக்கி உந்தியது.
The Grand Audio Launch Event of #Thangalaan was a blast! ????????
A @gvprakash Musical ????#ThangalaanAudioLaunch#ThangalaanFromAug15@Thangalaan @chiyaan @beemji @GnanavelrajaKe #StudioGreen @OfficialNeelam @parvatweets @MalavikaM_ @NehaGnanavel @Dhananjayang @KvnProductions… pic.twitter.com/BiC407XN15
— Studio Green (@StudioGreen2) August 5, 2024
சினிமா என்னை தேர்ந்தெடுக்கவில்லை. சினிமாவில் சொல்லப்படாத விஷயங்களை சொல்ல நான் தான் சினிமாவை நான் தேர்ந்தெடுத்தேன். நாம் நினைக்கும் கருத்துகளை எடுத்துவிடலாம் என்றுதான் நான் சினிமாவுக்குள் வந்தேன். ஆனால், சினிமா மிகவும் வித்தியாசமாக இருந்தது. குறிப்பாக தமிழ் சினிமா. இங்கே நாம் நினைக்கும் விஷயத்தை அப்படியே சொல்லமுடியுமா என்ற பயம் வந்தது. அந்த பயத்தை முதன்முதலில் போக்கியது என்னுடைய குரு இயக்குநர் வெங்கட் பிரபுதான். அவருக்கு இது போன்ற எந்த ஐடியாவும் இல்லாமலேயே ‘சென்னை 28’ என்ற படத்தின் மூலம் சென்னையை பற்றி பதிவு செய்திருப்பார்.
ஒரு சொல்லப்படாத கதையை கொண்டாட்டத்தின் மூலம் சொல்லும்போது பார்வையாளர்களுடன் நம்மால் சுலபமாக நெருங்கமுடியும் என்பதை நான் அவரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். இதனால் நான் ஏற்கெனவே எழுதிய கதைகளை விட்டுவிட்டு ‘அட்டக்கத்தி’ என்ற கதையை எழுதினேன்.
என்னுடைய அடுத்த படத்தை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத்தான் எடுக்கிறேன் என்று ஞானவேல்ராஜா, கார்த்தி ஆகியோரிடம் சொல்லிவிட்டே ஆரம்பித்தேன். அப்படித்தான் ‘மெட்ராஸ்’ உருவானது. அந்தப் படத்தை பார்த்துவிட்டுத்தான் ரஜினிகாந்த் எனக்கு ‘கபாலி’ வாய்ப்பு கொடுத்தார். அவருக்கு என்னுடைய அரசியல் ரொம்ப பிடிக்கும்.
‘சார்பட்டா’ படத்துக்குப் பிறகு நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று விக்ரம் சொன்னார். சினிமாவுக்காக தன்னை வருத்திக் கொள்கிற, கலையை நேசிக்கிற ஒரு கலைஞனுடன் சேர்ந்து பணிபுரிவது சுலபமான ஒன்று அல்ல.
இந்த கதையை விக்ரம் ஒப்புக்கொண்ட பிறகு தான் என்னுடைய சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய சவால் ஆரம்பித்தது. ஆனால், முதல் நாள் படப்பிடிப்பிலேயே நான் எதிர்பார்த்த தங்கலானாக வந்து நின்று அனைத்தையும் அவர் சுலபமாக்கி விட்டார். சில காட்சிகளை ரீஷூட் செய்ய வேண்டும் என்று சொன்னபோது கூட தயங்காமால் சம்மதித்தார்.
விக்ரம் போன்ற ஒரு நடிகரை தேர்வு செய்தபின் அவரோடு நடிக்கக் கூடிய மற்ற நடிகர்கள் என்றதுமே முதலில் என் நினைவுக்கு வந்தது பசுபதிதான். அவரைப் போல ஒரு மனிதரை பார்க்கவே முடியாது. ஒவ்வொரு காட்சியிலும் போட்டி மனப்பான்மையுடன் நடித்திருக்கிறார்.
பார்வதியை நான் ‘பூ’ படத்திலிருந்தே பார்க்கிறேன். அவரை என் படத்தில் நடிக்க வைக்க வேண்டுமென்றால் அவருக்காக ஒரு கதையை எழுதவேண்டும் என்று காத்திருந்தேன். அவரிடம் இந்த கதையை சொன்னதும் உடனே ஒப்புக் கொண்டார்.
இந்த சினிமா உங்களுடைய உணர்வுகளை தொடும் என்று நம்புகிறேன். அதன் மூலம் இந்த சினிமா பல விவாதங்களை உண்டு பண்ணும். எழுத்து வடிவில் எழுதாத எழுத்துக்கள் உள்ளது. வரலாற்றில் பதிவு செய்யப்படாமல் விடுபட்ட கைகள் இருக்கிறது. இந்த வரலாற்றில் நான் ஏன் இப்படி இருக்கின்றேன். என்னுடன் சேர்ந்த மக்களுக்கு ஏன் இவ்வாறு நடக்கின்றது. ஒரு பெரும்பகுதி மக்களுக்கு ஏன் இவ்வாறு நடக்கின்றது. ஏன் இங்கு ஒரு ஒடுக்குமுறை, பாகுபாடு, பிரிவினை இருக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது. இதற்கான பதிலை வரலாற்றில் தேடினால், வரலாறு பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று பேசவேயில்லை. அது ஒருதலைப்பட்சமாக உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் இல்லவே இல்லை,
அவர்கள் குறித்த குறிப்புகள் இல்லை. வரலாற்றில் தொடர்ந்து தேடினால் ஏமாற்றம் தான் மிஞ்சுகின்றது. அதுபோலத்தான் சினிமாக்களும் இருக்கின்றன. அம்பேத்கர் தீண்டப்படாதவர்கள் யார் என்ற புத்தகத்தில், ஒரு வரலாற்று ஆய்வாளன், மறைக்கப்பட்ட வரலாற்றை உருவாக்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சொல்லப்படாத மறைக்கப்பட்ட வரலாறுகளை தேடிச் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஒரு வரலாற்று ஆய்வாளனுக்கு உணர்வும் கற்பனையும் மிகவும் அவசியம். மறைக்கப்பட்ட வரலாற்றை மீள் உருவாக்கம் செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார். அப்படியான வரலாற்று தேவையை தேடுகின்ற மாணவனாக, வரலாற்று ஆய்வாளனாக நான் என்றைக்கும் இருப்பேன்.
உன்னுடைய சமூகத்திற்கும் உன்னுடைய மக்களுக்கும் நீ பேசியே ஆகவேண்டும் என அம்பேத்கர் தான் என்னை உந்தித்தள்ளினார். அம்பேத்கரின் குரலாக, அம்பேத்கரின் மாணவனாக, அம்பேத்கரின் சீடனாக நான் என்றைக்கும் இயங்குவேன்” என ரஞ்சித் பேசியுள்ளார்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Olympics 2024: அரையிறுதிக்கு முன் இந்திய ஹாக்கி அணிக்கு பெரும் பின்னடைவு!