சமீபத்தில் ‘பாட்டல் ராதா’ படத்தின் புரொமோஷன் விழா மேடையில் இயக்குனர் மிஷ்கின் ஆபாசமான வார்த்தைகளைப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மிஷ்கினின் இந்தப் பேச்சுக்கு பாடலாசிரியர் தாமரை, நடிகர் அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில், சென்னையில் இன்று (ஜனவரி 26) நடைபெற்ற ‘பேட் கேர்ள்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மிஷ்கின் தனது பேச்சுக்கு மன்னிப்பு தெரிவித்துள்ளார்.

இயக்குனர் மிஷ்கின் பேசும்போது, “என்னை விமர்சித்த பாடலாசிரியர் தாமரை, இயக்குனர் லெனின் பாரதி, நடிகர் அருள்தாஸ், லெட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் தாணு ஆகியோருக்கு எனது வருத்தத்தையும் மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன்.
தத்துவவியலாளர் ஃபிராய்டு ‘ஜோக்ஸ் அண்ட் அன்கான்சியஸ்’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதில், ஒரு நகைச்சுவை சொல்லும் போது ஒருவர் தனது ஆழ்மனதில் இருந்து சிரிக்கிறார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘பாட்டல் ராதா’ புரொமோஷன் மேடையில் ஜோக்காக நான் பேசியதில் ஒன்றிரண்டு வார்த்தைகள் தவறாகிவிட்டது. ஆனால், ஒரு நகைச்சுவையை நீங்கள் நகைச்சுவையாகத் தான் பார்க்க வேண்டும். அந்த இடத்தில் நான் ஒரு குறிப்பிட்ட நபரை தாக்கிப் பேசவில்லை. யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நான் பேசவில்லை. திருக்குறளில் காமத்துப்பால் என்ற அதிகாரம் இல்லையா?
மூன்று நாட்களாக அனைத்து தொலைக்காட்சிகளிலும் என்னைப் பற்றி தான் பேசுகிறார்கள். என் படங்கள் நல்ல படம் இல்லையா? அவை சமூக கருத்துக்களை சொல்லவில்லையா? நான் சினிமாவையும், மனிதர்களையும், இயற்கையையும் நேசிப்பவன். மன்னிப்பு கேட்பதற்கு எப்போதுமே தயங்க மாட்டேன்” என்று மிஷ்கின் தெரிவித்தார்.