மணிரத்னத்திற்கு கொரோனா!

Published On:

| By christopher

இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களுள் ஒருவர் மணிரத்னம். மெளனராகம், நாயகன், ரோஜா, அலைபாயுதே, ராவணன் என பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர். தலைமுறை கடந்து இந்திய அளவில் சிறந்த இயக்குநராக உள்ளார். தயாரிப்பு, திரைக்கதை என பலத் துறைகளில் வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மிக பிரம்மாண்டமான திரைப்படமாக இயக்கியுள்ளார். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிப்பில் 2 பாகங்களாக உருவாகி உள்ள இத்திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோசன் வேலைகளில் இயக்குநர் மணிரத்னம் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்காரணமாக அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் நாசர், ஓபிஎஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அந்த வரிசையில் தற்போது இயக்குநர் மணி ரத்னம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் நலம்பெற ரசிகர்கள், சக கலைஞர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel