இயக்குநரும் தயாரிப்பாளருமான லிங்குசாமி மீதான காசோலை மோசடி வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான லிங்குசாமி ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவர் சில படங்களையும் தயாரித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு கார்த்தி, சமந்தா நடிப்பில் ’எண்ணி 7 நாள்’ படத்தை தயாரிப்பதற்காக பி.வி.பி கேபிட்டல்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து லிங்குசாமியும், அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோசும் கடன்பெற்றனர்.
அந்த கடன் தொகையை திருப்பி செலுத்த லிங்குசாமி – சந்திரபோஸ் பங்குதாரர்களாக உள்ள திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் உள்ள வங்கி கணக்கு மூலம் காசோலை கொடுத்துள்ளனர்.
ஆனால் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் கசோலை திரும்பி வந்துள்ளது.
பிவிபி கேப்பிட்டல் நிறுவனம் பலமுறை லிங்குசாமியிடம் பணத்தை கேட்டும் கொடுக்கவில்லை.
வங்கியில் பணம் இல்லாதது தெரிந்தும் காசோலை கொடுத்து ஏமாற்றும் நோக்கத்தில் லிங்குசாமி செயல்பட்டதாக, அவர் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கினை பிவிபி கேப்பிட்டல் தொடர்ந்தது.
இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 22, 2022 அன்று லிங்குசாமிக்கு 6 மாத கால சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து லிங்குசாமி சென்னை நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை ஏப்ரல் முதல் வாரத்தில் விசாரித்த உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் வழக்கை ஒத்திவைத்தது. தொடர்ந்து ஏப்ரல் 12 ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சட்டரீதியாக சந்திப்பேன் என்று லிங்குசாமி தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் லிங்குசாமி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு மனு இன்று (ஏப்ரல் 24) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 6 மாதம் சிறை தண்டனை வழங்கிய சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளது.
மேலும், காசோலை தொகையில் 20 சதவீதத்தை நீதிமன்றத்திற்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மோனிஷா
செட்டிநாடு குழுமத்தில் ரெய்டு!
தஞ்சையில் ஆளுநர் ரவிக்கு எதிராக போராட்டம்!