தென்னிந்திய திரையுலகில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி யாரும் மறக்க முடியாத வில்லன் நடிகராக வலம் வந்த டேனியல் பாலாஜி (48) மாரடைப்பு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார்.
இதனையடுத்து கண் தானம் செய்யப்பட்ட அவரது உடல் இன்று (மார்ச் 30) காலை பொதுமக்கள் மற்றும் திரையுல பிரபலங்களின் அஞ்சலிக்காக புரசைவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. அங்கு இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், கௌதம் வாசுதேவ், அருண் மாதேஸ்வரன், நடிகர்கள் விஜய்சேதுபதி, அதர்வா, ஒளிப்பதிவாளர் ஆர்டி ராஜசேகர் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் டேனியல் பாலாஜியின் உடல் மாலை 4 மணிக்கு ஓட்டேரியில் உள்ள மின்மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
அவரது திடீர் மறைவு தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் டேனியல் பாலாஜியால் பெற்ற உதவிகளையும், அவருடன் படபிடிப்பில் இருந்த தருணங்களையும் சோகத்துடன் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்! – சூர்யா
காக்க காக்க படத்தில் தன்னுடன் சக போலீஸ் அதிகாரியாக நடித்த நடிவேல் பாலாஜியை தற்போது நடிகர் சூர்யா உருக்கமுடன் நினைவு கூர்ந்துள்ளார்.
அவர், “டேனியல் பாலாஜி உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். எப்பொழுதும் ஒரு காட்சியை சரியாக கொண்டு வருவதற்கு தன்னைத்தானே மிகவும் உந்தித் தள்ளுவார். காக்கா காக்கா பட நாட்களின் இனிய நினைவுகள் இன்னும் என் மனதில் இருக்கின்றன. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்” என்று சூர்யா தெரிவித்துள்ளார்.
யாரென்றே தெரியாத எனக்காக..
அதே போன்று பூவரம் பீப்பி, சில்லுக்கருப்பட்டி, ஏலே படங்களின் இயக்குநர் ஹலிதா ஷமீம், மறைந்த டேனியல் பாலாஜி குறித்து தெரிவித்துள்ளார்.
அவர், “Electronic Media degree- யிற்காக எந்த கல்லூரியில் சேறுவது என்ற யோசனையில் இருந்த போது, நண்பர்களிடம் ஆலோசனை கேட்டபோது, இந்த கல்லூரியில் சேரச் சொல், அரவிந்த் என்ற lecturer அட்டகாசமாக videography கற்றுக் கொடுப்பார், தவற விட வேண்டாம் என்று என் நண்பரிடம், யாரென்றே தெரியாத எனக்காக பரிந்துரைத்தது, டேனியல் பாலாஜி அவர்கள். அவர் சொன்ன அக்கல்லூரியில் சேர்ந்து, அந்த ஆசிரியரிடம் பயின்று பலன் பெற்றேன். போற போக்கில் எனக்காக நல்லது செய்த மனிதர்.” என்று ஹலிதா தெரிவித்துள்ளார்.
இதுபோன்று பல்வேறு திரையுலக நட்சத்திரங்களும் டேனியல் பாலாஜி உடனான தங்களுடைய தருணங்களை பகிர்ந்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வடசென்னைக்கு என்னென்ன செய்தேன்? : பட்டியல் போடும் கலாநிதி வீராசாமி
”பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கேஸ் விலை ரூ.2000 ஆக உயரும்” : கதிர் ஆனந்த்