தமிழ் திரையுலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சில இயக்குனர்கள் அரசாட்சி புரிவார்கள். அதன்பிறகு, அவர்களது புகழ் மங்கி வேறு சிலர் வெளிச்சம் பெறுவார்கள். மிகச்சிலரே காலத்தால் அழியாப் பெருமையையும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தையும் கைக்கொள்வார்கள்.
கலைப்படங்கள், கமர்ஷியல் படங்கள் என்ற வித்தியாசத்தை மீறி, அவர்கள் மக்களை உற்சாகப்படுத்திய படைப்புகளைத் தந்திருப்பார்கள். அதிலொருவர் தான் இயக்குனர் பாசில்.
மலையாளத்தில் அஸ்திவாரம்!
தெலுங்கில் பிரபல இயக்குனர்களாகத் திகழ்ந்த டி.பிரகாஷ்ராவ், யோகானந்த், எல்.வி.பிரசாத், சிங்கிதம் சீனிவாசராவ், கன்னடத்தில் பல வெற்றிகளைக் குவித்த பி.ஆர்.பந்துலு போன்றவர்கள் தமிழிலும் முன்னணி நாயகர்களுடன் இணைந்து பல படங்களை உருவாக்கினார்கள்.
அந்த வகையில் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த கே.எஸ்.சேது மாதவன், ஐ.வி.சசி, பரதன், பத்மராஜன் போன்ற இயக்குனர்கள் தமிழில் குறிப்பிடத்தக்க படைப்புகளைத் தந்திருக்கின்றனர். ரஜினி, கமல் போன்ற முன்னணி நாயகர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கின்றனர்.
தொண்ணூறுகளின் பிற்பாதியில் ஜோஷி, ராஃபி – மெக்கார்டின், சித்திக், லோகிதாஸ், ஷாஜி கைலாஷ் உட்படப் பல இயக்குனர்கள் தமிழ் ரசிகர்களை ஈர்க்கும் வழிகளைத் தேடியிருக்கின்றனர். அவர்களில் இருந்து ரொம்பவே வேறுபட்ட கதை சொல்லலைக் கொண்டிருந்தாலும், தமிழுக்குத் தகுந்தவாறு திரைக்கதை, வசனம் அமைப்பது எப்படி என்ற நுணுக்கம் தெரிந்தவராக விளங்கினார் பாசில்.
எண்பதுகளில் அடூர் கோபாலகிருஷ்ணன், எம்.டி.வாசுதேவன் நாயர், ஹரிஹரன் போன்ற எழுத்தாளர் – இயக்குனர்களால் கலையம்சமிக்க படங்கள் மலையாளத்தில் கோலோச்சின. அவற்றினூடே ஐ.வி.சசி, பரதன், பத்மராஜன், கிருஷ்ணன், பிரியதர்ஷன், சிபி மலயில் உள்ளிட்ட பல இயக்குனர்கள் கமர்ஷியல் அம்சங்களோடு கலையழகையும் திரையில் மிளிரச் செய்தனர். அந்த காலகட்டத்தில் யதார்த்தமான வாழ்வைத் திரையில் சொல்லும் ட்ரீட்மெண்ட்டுடன் சினிமாத்தனமிக்க கதைகளுக்கு உருவம் தந்தார் பாசில். மஞ்சில் விரிஞ்ச பூக்கள், எண்ட மாமாட்டிக்குட்டியம்மைக்கு போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.
அவரது இயக்கத்தில் ஆறாவதாக வெளியான படம் ‘நோக்கத்த தூரத்து கண்ணும் நாட்டு’. பல ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு பத்மினியை இதில் நடிக்க வைத்திருந்தார். கூடவே, நதியா எனும் நடிகையையும் அறிமுகப்படுத்தியிருந்தார். இந்தப் படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அந்த வகையில், மலையாளத் திரையுலகில் அவரது அஸ்திவாரம் பலமானதாக அமைந்தது. 1985 ஜூலை 17ஆம் தேதியன்று இது தமிழில் ரீமேக் செய்யப்பட்டு ‘பூவே பூச்சூடவா’ என்ற பெயரில் வெளியானது.
புதிய திரை மொழி!
ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலு மகேந்திராவுக்கு முன்னும் பின்னும் தமிழ் திரையுலகைப் பெருமைப்படுத்திய இயக்குனர்கள் சிலர் சிறப்பான பல படைப்புகளைத் தந்திருக்கின்றனர். அவர்களை ஒன்றாகக் கலந்தது போலவும், தனித்துவமிக்கதாகவும் அமைந்திருந்தது பாசிலின் திரைமொழி. அதுவே ‘பூவே பூச்சூடவா’ படத்திற்கு அதீத வரவேற்பை வழங்கியது.
காதல் திருமணம் செய்துகொண்டு தன்னை நிர்க்கதியாக விட்டுச் சென்ற மகள் வயிற்றுப் பேத்தியின் வருகையை ஏற்க மறுக்கிறார் ஒரு மூதாட்டி. இருவருக்கும் இடையே ‘எலி – பூனை’ விளையாட்டைப் போல பகைமை ஊடாடிக் கொண்டிருக்கிறது. அதையும் மீறி, அந்த இளம்பெண்ணுக்கும் பேரிளம் பெண்ணுக்கும் நல்ல உறவொன்று பூக்கையில் இடியாய் ஒரு தகவல் வந்து சேர்கிறது.
அந்த பேத்தி கொடுமையான நோயால் பாதிப்புக்குள்ளாகி சில நாட்களில் மரணமடையவிருக்கிறார். அதனைக் கேள்விப்பட்டவுடன் அந்த பாட்டி இடிந்து போகிறார். நிரந்தரமாக அவர் தன்னுடன் தங்கிவிட மாட்டாரா என்று ஏங்குகிறார். சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற பேத்தி திரும்பி வர வேண்டுமென்ற பிரார்த்தனையுடன் அந்த பாட்டி காத்திருப்பது போல அப்படம் முடிவடையும்.
இந்தக் கதையை ஒரு கவிதையைப் போலத் திரையில் படைத்திருந்தார் பாசில். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் இளையராஜாவின் பின்னணி இசையும் அப்படைப்பில் கவித்துவத்தை ததும்பச் செய்தன. தொழில்நுட்ப உழைப்போடு செயற்கைப்பூச்சுகள் அற்ற நடிப்புக்கலைஞர்களின் அர்ப்பணிப்பும் கலந்தபோது திரையில் அந்த மாயாஜாலம் நிகழ்ந்தது. ’பூவே பூச்சூடவா’ திரைக்கதையில் பல இடங்களில் மௌனத்திற்கு இடம் தரப்பட்டிருக்கும். அந்த திரைமொழி தமிழ் ரசிகர்களுக்குப் புதிதாகத் தெரிந்தது. அதன் விளைவாக, பாசில் படங்களுக்குத் தனி அடையாளம் கிடைத்தது. அந்த வகையில், பாசிலை நமக்குத் தந்தது இப்படம்.
தொடர்ந்து பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, வருஷம் 16, அரங்கேற்ற வேளை, கற்பூர முல்லை, கிளிப்பேச்சு கேட்கவா, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, ஒருநாள் ஒரு கனவு படங்களைத் தமிழில் இயக்கினார் பாசில். அவற்றின் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு, அவரது படங்கள் என்ற வகையில் அவை இன்றும் ரசிக்கப்படுகின்றன. தமிழில் வெற்றிக்கொடி நாட்டிய மலையாள இயக்குனர் என்ற பெருமைக்குரியவர் பாசில். அதன் தொடர்ச்சியாக, இன்று அவரது மகன் பஹத் பாசில் நடிப்புக்கும் கடைக்கோடி வரை வரவேற்பு தானாகக் கிடைத்து வருகிறது.
நதியா எனும் பேரழகி!
தமிழில் எத்தனையோ நடிகைகள் பேரழகிகளாகக் கொண்டாடப்பட்டிருக்கின்றனர்; வானத்து நட்சத்திரங்களைப் போல ஜொலித்திருக்கின்றனர்; கற்பனையில் வரைந்த ஓவியங்களுக்கு உருவம் கிடைத்ததோ என்று வியக்க வைத்திருக்கின்றனர். அவர்களில் இருந்து மாறுபட்டு, நிஜ வாழ்வில் நேராகப் பார்த்து பிரமித்தது போன்ற உணர்வைச் சிலரே ஏற்படுத்தியிருக்கின்றனர். ஆனால், ஒரே நேரத்தில் பிரமிப்பையும் யதார்த்தத்தையும் ஊட்டிய நட்சத்திரங்கள் என்று மிகச்சிலரையே கூற முடியும். அவர்களில் நதியாவுக்கு ஓரிடம் உண்டு.
எண்பதுகளில் நதியா திரையில் அணிந்து வந்த உடைகள், அணிகலன்கள் பெண்கள் மத்தியில் பெரும் தாக்கத்தையே உண்டாக்கின. அதே போன்று தாங்களும் அணிய வேண்டுமென்ற வேட்கையை உண்டுபண்ணின. அந்த அளவுக்கு ஒரு ‘பேஷன் ஐகான்’ ஆக விளங்கினார் நதியா. அன்று மட்டும் ‘டிக்டாக்’கோ, ‘கவர் வீடியோ’வோ இடும் ட்ரெண்ட் இருந்திருந்தால், நதியாவின் புகழ் இன்னும் பல மடங்காகப் பெருகியிருக்கும் என்பது நிதர்சனம்.
அழகு மட்டுமல்லாமல் நடிப்பிலும் நதியாவுக்கென்று தனி பாணி உண்டு. நாயகியாக நடித்த காலத்தையும் தாண்டி, சிறிது இடைவெளிக்குப் பிறகு அவர் தோன்றிய ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’யிலும் அது வெளிப்பட்டது. அந்த தனித்துவமே, கடந்த 20 ஆண்டுகளாக அவரைத் தமிழ், தெலுங்கு திரையுலகில் உலா வரச் செய்கிறது. ஐம்பத்தாறு வயதிலும் ஜவுளிக்கடை விளம்பரத்தின் நடுநாயகமாக நதியா தோன்றும்போது மெய் மறந்து ரசிக்கச் செய்கிறது.
கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!
ஒரு மொழியில் வெற்றி பெற்ற திரைப்படம் இன்னொரு மொழி யில் ‘ரீமேக்’ செய்யப்படும்போது, சிற்சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியம். படப்பிடிப்புக்கான களங்கள், நடிப்புக்கலைஞர்கள், காட்சியமைப்பு, வசனங்கள் முதல் இசை முதலான தொழில்நுட்ப அம்சங்கள் வரை பலவற்றில் மாறுபட்ட பார்வையை உருவாக்க வேண்டியிருக்கும். அதனூடே தனக்கான தனித்துவத்தையும் ஒரு இயக்குனர் திரையில் வெளிப்படுத்த வேண்டும். பாசில் அதனைச் சாத்தியப்படுத்த வழியமைத்துத் தந்தது ‘பூவே பூச்சூடவா’.
அவருக்குப் பிறகு, தமிழிலும் மலையாளத்திலும் ஒரேநேரத்தில் வெற்றிப்படங்களைத் தரும் வல்லமை பெருகவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம். அதேநேரத்தில், தமிழில் இருந்து தெலுங்குக்கு மொழி மாற்றம் செய்யப்படும் படங்களில் அதனைச் சாதித்து வருகின்றனர் சில இயக்குனர்கள். அவர்களனைவரும் பாசில் போன்ற இயக்குனர்களிடம் இருந்து ஏதேனும் கற்றுக் கொண்டிருப்பார்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்!
உதய் பாடகலிங்கம்
அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்தி வைப்பு!
மகளிர் உரிமைத் தொகை: ’வாட்சப் தகவலை நம்ப வேண்டாம்’- ராதாகிருஷ்ணன்