மாரடைப்பு காரணமாக இயக்குனரும் நடிகருமான ஈ. ராமதாஸ் நேற்று இரவு காலமானார்.
இது குறித்து அவரது மகன் கலைச்செல்வன் தனது சமூக வலைதள பக்கத்தில், “எனது தந்தை எழுத்தாளர், இயக்குனர், நடிகர் ஈ.ராமதாஸ் மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார். இறுதி சடங்குகள் 24/1/2023 காலை 11 மணி – மாலை 5 மணி அளவில் நடைபெற இருக்கிறது என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
ஈ. ராமதாஸ் விழுப்புரத்தைச் சேர்ந்தவர். சினிமா மீதான ஆசையால் சென்னைக்கு குடி பெயர்ந்த அவர், எழுத்தாளராக திரைத்துறையில் தனது பணியை தொடங்கினார்.
அதைத் தொடர்ந்து ஆயிரம் பூக்கள் மலரட்டும், ராஜா ராஜா தான், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, ராவணன், சுயம்வரம் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
மோகன் சீதா ஆகியோர் நடித்த ஆயிரம் பூக்கள் மலரட்டும் படம் தான் ராமதாஸ் இயக்கிய முதல் படம்.
அதுபோன்று வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் வார்டு பாயாக தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். பின்னர் யுத்தம் செய், காக்கி சட்டை, விசாரணை, தர்மதுரை, விக்ரம் வேதா, மாரி 2 உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சங்கமம், கண்ட நாள் முதல் , உள்ளிட்ட பல படங்களில் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.
இந்த சூழலில் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக அவர் இயற்கை எய்தினார். மாலை 5 மணியளவில் நெசப்பாக்கம் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. இந்த செய்தி திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரியா