ஜப்பான் பட வெளியீட்டை முன்னிட்டு கார்த்தி 25 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. அதில் கார்த்தி மற்றும் சூர்யாவுக்கு திரைத்துறையில் பருத்தி வீரன், மவுனம் பேசியதே போன்ற படங்களின் மூலம் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்த இயக்குநர் அமீர் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஊடகங்களில் கேள்வி எழுப்பியபோது, பருத்தி வீரன் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக அமீர் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பகிங்கரமாக குற்றச்சாட்டினார். அதற்கு அமீர் மறுப்பு தெரிவித்த நிலையில் சமூகவலைதளங்களில் இருதரப்பினரிடையே கடும் மோதல் வெடித்தது.
அமீருக்கு ஆதரவாக மவுனம் பேசியதே படத் தயாரிப்பாளர் கணேஷ் ரகு, சசிகுமார், சமுத்திரகனி, கரு.பழனியப்பன், சேரன், நந்தா பெரியசாமி உள்ளிட்ட திரையுலகினர் பலர் நேரடியாக கருத்து தெரிவித்தனர்.
எனினும் ஞானவேல்ராஜாவுக்கு ஆதரவாக திரையுலகினர் யாரும் திரளாத நிலையில், இந்த விவகாரம் குறித்து சூர்யா, கார்த்தி இருவரும் இதுவரையிலும் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருவது அமீர் தரப்பினரிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இயக்குநர் அமீரின் முதல் படமான ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் இன்றுடன் (டிசம்பர் 13) வெளியாகி 21 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அவர் உருக்கமான கடிதம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
வெற்றிக்கு கரம் கொடுத்த சூர்யா
அதில், “மரியாதைக்குரிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், பேரன்புக்கும் பாசத்துக்கும் உரிய தமிழக மக்களுக்கும் என் அன்பு கலந்த வணக்கம்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன் என்னை வீழ்த்துவதற்காக அவதூறுகளையும், அவமானங்களையும் பொதுவெளியில் எனக்கு சிலர் அன்பளிப்பாக கொடுத்தபோது, நான் சோர்ந்துவிடாமலும் துவண்டுவிழாமலும் பார்த்துக் கொள்ளும் விதமாக எனக்கு தன்னம்பிக்கையையும், அன்பையும், ஆதரவையும் எதிர்பாராத அளவிற்கு எனக்களித்த தமிழக ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் ஊடகத் துறையினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
ஒரு இயக்குனராக எனக்கு அடையாளத்தைப் பெற்று தந்த என்னுடைய முதல் திரைப்படம் “மெளனம் பேசியதே” வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவடைந்தருக்கிறது.
இந்த நெகிழ்வான தருணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
சென்னையை நோக்கி – சினிமாவை நோக்கி படையெடுத்து வந்த எல்லோரது கனவும் நனவாவது இல்லை. அப்படி கனவுகளை சுமந்து கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவனாக இருந்த என்னை கரம் பிடித்து உயர்த்தி என்னுடைய திரைக்கனவை நனவாக்கிய, ”மெளனம் பேசியதே” திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் கணேஷ் ரகு மற்றும் வெங்கி நாராயணன் உள்ளிட்ட அபராஜித் பிலிம்ஸ் நிறுவனத்தாருக்கும்,
என்னோடு பயணித்து திரைப்படத்தின் வெற்றிக்கு கரம் கொடுத்த சூர்யா, த்ரிஷா, லைலா உள்ளிட்ட நடிகர் – நடிகைகளுக்கும், ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைத்துறை தொழிலாளர்களுக்கும் என் நன்றிகள்!
என்னுடைய திரைப்பயணம் தொடங்கிய இந்த 21 ஆண்டுகளில், நான் இயக்கிய படங்கள் குறைவாக இருந்தாலும் இன்னும் என்னை மனதில் நிறுத்தி தொடர்ந்து சமூக வலைதளங்களில், ஊடகங்களில் ஆதரவு தந்து கொண்டிருக்கிற திரை ரசிர்களுக்கும், ஊடக – பத்திரிகை நண்பர்களுக்கும், தமிழக மக்களுக்கும் குறிப்பாக “மெளனம் பேசியதே” ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!” என்று இயக்குநர் அமீர் நெகிழ்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தயாரிப்பாளார் ஞானவேல் ராஜா பேசியது குறித்து இதுவரை நடிகர் சூர்யா எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையிலும், அவரை குறிப்பிட்டு அமீர் நன்றி தெரிவித்துள்ளது தற்போது கவனம் பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பொங்கல் 2024 விடுமுறை… இன்று முதல் அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு!