தமிழ் திரைப்பட இயக்குநர்களில் சினிமா மேடை, பொதுமேடை, தொலைக்காட்சி விவாதங்கள், பத்திரிகை பேட்டி என எல்லா தளங்களிலும் நேரடி அரசியல் கருத்துக்களை தயக்கமின்றி பேசுபவர் அமீர்.
அதன் காரணமாக இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினார் என கருணாநிதி தலைமையிலான திமுக அரசால் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் சிறையில் இருந்தவர் இயக்குநர் அமீர்.
சர்ச்சையான கருத்துக்களை அரசியல் பார்வையுடன் பேசிவரும் அமீர், நேற்று (டிசம்பர் 13) மாலை ’உயிர் தமிழுக்கு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது படம் சம்பந்தமான கேள்விகளை கடந்து அரசியல் ரீதியான கேள்விகளை அதிகம் எதிர்கொண்டார்.
மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப்படத்தை வெளியிடுகிறார்.
படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் பிரிவியூ திரையரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இயக்குநர் அமீர், மௌனம் பேசியதே படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்து 20 வருடங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவரை கவுரவிக்கும் விதமாக படக்குழுவினரால் அவருக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்வில் இயக்குநரும் நடிகருமான அமீர் பேசினார்.
அப்போது பேசிய அவர், “தமிழ் திரையுலகில் மௌனம் பேசியதே படம் மூலம் அடி எடுத்து வைத்து இருபது வருஷம் ஆகிவிட்டது. திரையுலகில் 20 ஆண்டுகள் இருப்பதே ஒரு சாதனை தான். எனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பயந்து பயந்து பேசியது இப்போதும் ஞாபகம் இருக்கிறது. துணிச்சலாக பேசுங்கள் என்று கூறியபோது, நான் பேசிய விஷயங்களால் அந்த படத்தின் நாயகன் சூர்யா என் மீது கோபப்பட்டு கொஞ்ச நாள் என்னிடம் பேசாமல் இருந்தார்.
நான் கரை வேட்டி கட்டிய அரசியலை படமாக இயக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த சமயத்தில்தான் இந்த கதை என்னிடம் வந்தது. ஆனால் என்னிடம் இருக்கும் கதைக்கும் இதற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை.
அதேசமயம் ஆரம்பத்தில் இந்த படத்திற்கு வேறு ஒரு டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த படத்தை வெளியிடுகிறார் என்றதும் எனது படத்திற்காக வைத்திருந்த உயிர் தமிழுக்கு என்கிற டைட்டில் இதற்கு பொருத்தமாக இருந்ததால் உடனே கொடுத்துவிட்டேன்.
இந்த சமயத்தில் இது தேவையான தலைப்பு. ஆனந்த்ராஜ் வில்லனாக நடித்து பார்ப்பதைவிட அவரை நகைச்சுவை நடிகராக ரசிப்பதற்கு எனக்கு ரொம்பவே பிடிக்கும். இந்த படத்தில் அவருக்கு அப்படி சில காட்சிகள் இருக்கின்றன.
சிவகார்த்திகேயன், சூரி கூட்டணி போல எனக்கும் இமான் அண்ணாச்சிக்குமான கெமிஸ்டரி நன்றாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது.
இது வெற்றி பெற்றால் அடுத்த படங்களில் இருந்து இந்த கூட்டணி தொடரும். இளையராஜாவுக்கு பிறகு, நான் வியந்து பார்த்த இசையமைப்பாளர் வித்யாசாகர். இந்த படத்திற்காக மெனக்கெட்டதை மறக்க முடியாது. படத்தில் எம்ஜிஆர் பாடல் உள்ளிட்ட நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த படத்தை பார்ப்பவர்கள் என் மீதுள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு படமாக மட்டும் பாருங்கள்.. இந்த படம் மொழியை பற்றி பேசும் படமே தவிர, மொழிப்பிரச்சினையை பற்றியது அல்ல.
வட மாநில மக்களின் வருகை என தமிழ் மொழிக்கு எதிரான அநீதிகள் நடப்பதால் இந்த தலைப்பு தற்போது அவசியமாகிறது. நேரடி அரசியலுக்கு வரும் தகுதியை நான் இன்னும் வளர்த்து கொள்ளவில்லை. அதே சமயம் அரசியல் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.
நான் எப்போதும் கதையின் நாயகனாக தான் இருப்பேன். சினிமா என்பது இயக்குனரின் மீடியம்.. நாயகர்களால் தான் சினிமா என்கிற பிம்பத்தை தான் உடைக்க விரும்புகிறேன்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் அமீர்.
”இந்த வருடம் பான் இந்தியா படங்கள் அதிகமாக வெற்றிபெற்று வசூலை குவித்து வருகிறதே?”
”பான் இந்தியா என்கிற கலாச்சாரம் இப்போது வருவதற்கு முன்பே மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா, பம்பாய் ஆகிய படங்கள் அதை சாதித்து காட்டிவிட்டன.
இந்தியில் இருந்தும், யாதோங்கி பாரத், ஷோலே, ஹம் ஆப் கே போன்ற படங்கள் எல்லாம் இங்கே ஒரு வருடம் ஓடின. கிழக்கு சீமையிலே, ஆட்டோகிராப், பருத்திவீரன், சுப்பிரமணியபுரம் படங்கள் எல்லாம் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ற படம். அதனால் பான் இந்தியாவுக்கு என ஒரு படம் எடுப்போம் என்பதே ஒரு பைத்தியக்காரத்தனம்”.
”உயிர் தமிழுக்கு என தமிழ்மொழிக்கு வக்காலத்து வாங்குவது முரணாக இருக்கிறதே?’
”தமிழ் என் தாய் மொழி. மதத்தால் நான் இஸ்லாமியனாக இருக்கலாம்; மொழியால், இனத்தால் நான் தமிழன். அதில் உங்களுக்கு என்ன சந்தேகம்? தமிழுக்காக நான் பேசுவது எனது கடமை”.
”தமிழ் மொழிக்கு இப்போது என்ன ஆபத்து?”
”பத்திரிகையாளர்கள் இப்படி ஒரு கேள்வி கேட்பது அதிர்ச்சியாக இருக்கிறது. தமிழ் மொழியை பின்தங்க செய்வதும், அதனை படிப்படியாக அழிக்க முயற்சிக்கும் செயல் கடந்த காலங்களை காட்டிலும் இப்போது தீவிரமாக உள்ளது. இந்தியை முதன்மை மொழியாக்க முயற்சிக்கப்படுகிறது. அதனால்தான் உயிர் தமிழுக்கு என பெயர் மாற்றம் செய்துள்ளோம்”.
”இந்தி படித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்கிற பிரச்சாரம் பற்றி?”
”தமிழ்நாட்டில் இன்றைக்கு சாலையோர உணவகம் முதல் அனைத்து தொழில் நிறுவனங்களிலும் அதிகமான பணியாளர்கள் இந்தி மொழி பேசும் வட இந்திய மாநிலத்தவர்கள்தான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாநாட்டு ஊர்வலத்திற்கு வருவது போன்று வட மாநிலத்தவர்கள் தினந்தோறும் ரயில்களில் வந்து இறங்குகின்றனர். இதில் இருந்தே தெரியும் இந்தி பேசுவோருக்கு அவர்கள் மாநிலங்களில் வேலை கிடைக்கவில்லை.”
”ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே உணவு என ஒன்றிய அரசு பிரச்சாரம் செய்கிறதே?’
”சாத்தியமில்லாத ஒன்று. இதனை தமிழகத்தில் மட்டும்தான் பேசுகின்றனர். அவர்கள் ஆட்சி புரியும் கர்நாடகாவில் பேசுவது இல்லை. பஞ்சாபில், வடகிழக்கு மாநிலங்களில் பேசுவது இல்லை. அப்படி பேசினால் அவர்களால் அங்கு ஆட்சியில் நீடிக்க முடியாது. தமிழகத்தில் மட்டும்தான் அதனை பேசி வருகின்றனர்.
இங்கு அவர்கள் கட்சியை வளர்க்க அவ்வப்போது இது போன்று பேசி மக்களை பாதிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளில் இருந்து நம் கவனத்தை திசைதிருப்பும் நடவடிக்கை. விலங்குகள்கூட அவற்றுக்கு பிடித்த உணவுகளைத் தேடி சாப்பிடும் மனிதர்கள் மண்சார்ந்து, மரபு சார்ந்த உணவு பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பவர்கள் அப்புறம் எப்படி ஒரே உணவு சாத்தியமாகும்?”
”இயக்குநர், நடிகராக இருந்து கொண்டு அரசியல் பேசுவது பற்றி?”
”அரசியல்வாதிதான் அரசியல் பேச வேண்டுமா? அவர்கள் தங்கள் கட்சி நலன் சார்ந்து பேசுவார்கள். நான் மக்கள் நலன் சார்ந்த அரசியல் பேசுகிறேன். கலைஞன் பேசுகிறபோது மக்களிடம் எளிதில் சென்றடையும் என்பதுடன் நம்பகத்தன்மையும் இருக்கும். நான் தேர்தல் அரசியல் பேசவில்லை. இந்திய குடிமகனாக மக்கள் அரசியல் பேசுகிறேன்”.
”அரசியல் கட்சிகளில் சேருகிற அல்லது கட்சி தொடங்குகிற ஐடியா இருக்கிறதா?”
”நான் திரைத்துறைக்கு வந்த காலம் முதல் அரசியல் பேசுகிறேன். கட்சிகளில் சேர்ந்து பணியாற்றுவதற்கான தகுதி வேண்டும். அதற்கு நான் இன்று வரை தயாராகவில்லை. என் உயரம் என்ன என்று எனக்கு தெரியும். அதனால் நீங்கள் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை என்பதுடன் அப்படி ஒரு ஐடியா இல்லை”.
இராமானுஜம்
அர்ஜென்டினா அணி வெற்றிபெற்றால் எனக்கு வருத்தம் : ரொனால்டோ
குஜராத் அமைச்சரவை: கிரிமினல் வழக்கில் 4 அமைச்சர்கள்!