ரஜினிகாந்துக்கு சிறந்த நடிகர் என தமிழ்நாடு அரசு விருது வழங்கியது தவறு என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
அரசியல், சினிமா, சமூகம் என்று எந்த கேள்வி கேட்டாலும் தயக்கமின்றி அரசியல் பார்வையுடன் பதில் கூறுவது பழக்கம்.
பான் இந்தியா படங்கள் என்கிற வார்த்தை பிரயோகமே தவறானது என ஒரு சினிமா விழாவில் பேசி இவர் சர்ச்சைக்குள்ளானார்.

சமீப காலங்களாக அமீர் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளவில்லை. இந்தநிலையில் நேற்று (மார்ச் 17) மாலை சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள பிரசாத் பிரிவியூ திரையரங்கில் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் கலையரசன், வாணி போஜன் நடித்துள்ள ‘செங்களம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் அமீர், “இந்திய திரைப்படங்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைப்பதற்கு வாழ்த்துகள். கலைக்கு அரசியல் கிடையாது. அந்த வகையில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தற்கு வாழ்த்துகள்.
என்னை பொறுத்தவரையில் ஆஸ்கர் அகாடமி விருதை பெரிய விருதாக என்றைக்கும் கருதியது கிடையாது. அதை பெரிய விருது என சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. வேண்டுமென்றால் அது அந்த நாட்டின் தேசிய விருது என வைத்துக் கொள்ளலாம். இருந்த போதிலும் இந்திய திரைப்படங்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கும்போது அது எனக்கு கிடைத்ததாக நான் நினைத்துக்கொள்கிறேன்” என்றார்.
‘நாட்டு நாட்டு’ பாடலுக்கான ஆஸ்கர் விருதில் அரசியல் இருப்பதாக கூறப்படுகிறதே, அதன் விளம்பரத்துக்காக கோடிகளில் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதே என்று பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு, “தற்போது வழங்கப்படும் அனைத்து விருதுகளிலும் அரசியல் இருப்பதாக நினைக்கிறேன். ஆஸ்கர் மட்டுமல்ல.

தேசிய விருது, மாநில அரசு விருது, தனியார் நிறுவன விருதுகள் என அனைத்திலும் அரசியல் இருப்பதாக கருதுகிறேன். இந்தியாவிலேயே மிகச் சிறந்த நடிகர் சிவாஜிகணேசன். அவர் வெளிநாட்டுக்குச் சென்றபோது ஹாலிவுட் நடிகர்களே அவருடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்ட காலம் உண்டு.
அவரின் நடிப்பை பார்த்து பிரம்மித்திருக்கிறார்கள். இந்தியாவிலேயே சிவாஜியை மிஞ்சிய நடிகர் கிடையாது. ஆனால், சிவாஜிக்கு ஏன் தேசிய விருது கொடுக்கப்படவில்லை? . இறுதியாக ‘தேவர் மகன்’ படத்தில் நடித்ததற்காகத்தான் சிவாஜி கணேசனுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
அது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய சிவாஜி, “இந்த விருது கொடுக்கப்படவில்லை. ஜூரியிலிருந்த நம் ஆட்களால் வற்புறுத்தப்பட்டது” என தெரிவித்திருந்தார்.
முற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை விருதுகளுக்கு மதிப்பு இருந்தது. தற்போது அது இல்லை. ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘சிவாஜி’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் என்ற பிரிவில் ரஜினிகாந்திற்கு மாநில அரசின் விருது வழங்கப்பட்டது. மனசாட்சியை தொட்டு சொல்ல முடியுமா? ரஜினியை சிறந்த நடிகர் என்று? அவர் சிறந்த என்டர்டெயினர் அதில் மாற்றுகருத்தில்லை.
‘சிவாஜி’ படத்தில் நடிகர் ரஜினியின் நடிப்பை ஒப்பீட்டளவில் பார்க்கும்போது சிறந்த நடிகர் என கூறிவிட முடியாது. அப்படிப் பார்த்தால் ‘முள்ளும் மலரும்’ போன்ற ரஜினியின் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களுக்கு ஏன் அந்த விருது வழங்கப்படவில்லை. விருதுகள் ஒரு லாபியாக மாற்றப்பட்டுவிட்டது” என்றார்.

வேங்கை வயல் விவகாரம் குறித்து பேசியபோது “மனிதன் நாகரிகமாக மாறிவிட்டான் என கூறும்போது, வேங்கை வயலில் நடந்த இழிவான செயலை செய்தவர்களை நான் மனிதனாகவே பார்க்கவில்லை.
வேங்கை வயல் பிரச்சினையில் தமிழக அரசின் நடவடிக்கை போதுமான அளவில் இல்லை. வாக்கு வங்கி அரசியலுக்கு பயந்து சிலர் பேசாமல் இருந்திருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலான அரசின் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை. பாதிக்கப்பட்ட மக்கள் மீது தொடர்ந்து விசாரணை நடப்பது வேதனை அளிக்கிறது. சம்பந்தபட்ட தண்ணீர் தொட்டி இடிக்கப்பட வேண்டும். நீதி கிடைக்க வேண்டும்” என்றார்.
இராமானுஜம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: வரகு முறுக்கு வற்றல்