நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் அடுத்த மாதம் 5ஆம் தேதி வெளியாக உள்ளது.
அதனைத்தொடர்ந்து ஏற்கெனவே அறிவித்தபடி தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி அரசியல் களத்தில் தீவிரமாக இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில் அதற்கு முன்னதாக தனது கடைசி படமாக ஜனரஞ்சக, அரசியல் களம் கொண்ட படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது. அதற்கான இயக்குநர்களை தேடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வந்தன.
எனினும் GOAT பட வெளியீட்டு பணியில் தற்போது தீவிர கவனம் செலுத்தி வந்தார் விஜய்.
இந்த நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சி நடத்திய விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் ஹெச்.வினோத் விஜய்யின் அடுத்த படத்தை தான் இயக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
விழாவில் வினோத் பேசுகையில், ”அஜித்துக்கு ஒரு இயக்குநர் பிடித்து விட்டால் தொடர்ந்து அவருடன் படங்களில் பணியாற்றுவார். அஜித் படத்தில் எனக்கு பிடித்தது நேர்கொண்ட பார்வை என்றும்,
ரஜினி சாரிடம் நாம் ஆயிரம் வார்த்தைகள் பேசினால் அவர் பத்து வார்த்தைகள் மட்டுமே பதில் அளிப்பார். ரஜினி சார் அழைத்தால் கண்டிப்பாக அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், நடிகர் விஜய் வைத்து நான் இயக்கவிருக்கும் புதிய படம் அனைத்து தரப்பு மக்களையும், குழந்தைகளையும் இளைஞர்களையும் கவரும் விதமாக இருக்கும் என்றும், அப்படம் அரசியல் கட்சி தலைவர்களையோ, அரசியல் கட்சிகளையோ தாக்கும் படமாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் நடிகர் விஜய் அரசியலுக்குள் முழுதாக நுழைவதற்கு முன்பாக, அவர் நடிக்கப் போகும் கடைசி படத்தை தான் இயக்க உள்ளதை உறுதி செய்துள்ளார் இயக்குநர் ஹெச். வினோத்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நீயும் என்ன விட்டுட்டு டீ பார்ட்டிக்கு போயிட்டியா? : அப்டேட் குமாரு
‘சர்தார் – 2’ : நடிகை ரஜிஷா விஜயன் இணைகிறார்!