ஜெயிலர் படத்தில் நடிக்க ரஜினிக்கு முதலில் 150 கோடி சம்பளம் பேசப்பட்டு அண்ணாத்த படம் சரியாக போகாததால் பின்னர் அது 110 கோடியாக குறைக்கப்பட்டுள்ளதாம்..
பீஸ்ட் தோல்வியில் நெல்சனுக்கு இயக்கம் சரிவர வராததால் நெல்சனை இயக்க கே.எஸ் ரவிக்குமாரை ரஜினி நியமிக்க இருப்பதாக தகவல் இருக்கிறதாம்..
ஜெயிலர் படம் எடுத்த வரைக்கும் பார்த்ததில் ரஜினிக்கு திருப்தி இல்லாததால் நெல்சன் மீது அதிருப்தியில் இருக்கிறாராம் ரஜினி..
ஜெயிலர் படம் சுமாரான படமாகவே வந்திருப்பதால் படத்தின் புரமோஷன் வேலைகளில் ஆர்வம் காட்ட கலாநிதிமாறன் விரும்பவில்லையாம்..
இவையெல்லாம் ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்பு வலைத்தளங்களில் பேசப்பட்டவை.
ஆகஸ்ட் 10 அன்று ஜெயிலர் படம் வெளியான பின்பு படம் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் வெளியானபோதும் ‘எந்திரன்’ படத்திற்கு பின் மிகப்பெரும் ஓபனிங் கிடைத்த படமாக ஜெயிலர் அமைந்தது.
படம் வெளியான தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கேரள, கர்நாடக மாநிலங்கள் இதுவரை வெளியான தமிழ் படங்களின் முந்தைய வசூல் கணக்கை முந்தியுள்ளது ஜெயிலர்.
வெளிநாட்டு விநியோக உரிமையை 31 கோடி ரூபாய்க்கு ஐங்கரன் கருணா வாங்கியதை விநியோகஸ்தர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் தமிழ்நாட்டை காட்டிலும் அதிகமான வசூலை வெளிநாட்டு திரையரங்குகளில் குவித்து வருகிறது ஜெயிலர்.
தமிழ் படங்களில் சாதனை அளவாக கூறப்பட்டு வந்த விக்ரம், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் உலகளாவிய 500 கோடி ரூபாய் மொத்த வசூலை ஜெயிலர் சமன் செய்யுமா அல்லது எந்திரன் படத்தின் மொத்த வசூல் சாதனையான 700 கோடியை எட்டிப் பிடிக்குமா என்கிற விவாதம் நடைபெற்று வரும் சூழலில், ஜெயிலர் படத்தின் முதல் வார வசூலை சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்து உறுதிப்படுத்தியிருக்கிறது.
‘ஜெயிலர்’ படம் உலகம் முழுவதும் முதல் வாரத்தில் ரூ.375 கோடி வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் வாரத்தில் வசூலான அதிக தொகை இதுதான் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களில் சென்னையில் ‘ஜெயிலர்’ படத்தின் இயக்குநர் நெல்சன் படக்குழுவினருடன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், “ஜெயிலர்’ படம் இவ்வளவு பெரிய வெற்றி பெரும் என எதிர்பார்க்கவில்லை.
நாங்கள் நினைத்தது ஒரு நல்ல கதையை, நல்லபடியாக கொடுக்க வேண்டும் என்பது தான். அதை சிறப்பாக செய்ததற்கான வெற்றியாக தான் இந்த வெற்றியை பார்க்கிறோம்.
முக்கியமாக இந்த வெற்றிக்கு ரஜினிக்கு இந்த ஸ்கிரிப்ட் மீது இருந்த நம்பிக்கைதான் மிக முக்கிய காரணம். படம் வெளியாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு படத்தை ரஜினிக்கு போட்டு காட்டினேன். அப்போது அவரிடம், ‘நான் கதை சொல்லும்போது ஒரு விஷுவல் உங்கள் மனதுக்குள் தோன்றியிருக்குமே, அப்படியான ஒரு விஷுவலாக படம் இருக்கிறதா?’ என கேட்டேன்.
அதற்கு அவர், ‘நான் நினைத்ததை விட 10 மடங்கு சிறப்பாகவே வந்திருக்கிறது’ என கூறினார். இன்றைக்கு எனக்கு இருக்கும் நிறைவு அன்றே எனக்கு கிடைத்துவிட்டது.
நிறைய பேர் நம்மை சந்தேகத்துடன் பார்க்கும்போது, படம் சரியாக வருமா, இவர் சாத்தியப்படுத்துவாரா என பலரும் யோசித்துக் கொண்டிருந்தபோது, இதற்கு முக்கியப் புள்ளியாக இருக்கும் ரஜினி சார் நாங்கள் சொல்வதை கேட்டு எங்களின் குழுவுடன் இணைந்து பணியாற்றினார்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “அதே போல் இந்த படத்தின் நடிகர்கள் பற்றி பல இடங்களில் நான் பேசி இருந்தாலும் டெக்னீஷியன்கள் பற்றி பேசியது இல்லை. அதில் முக்கியமானவர் ஒளிப்பதிவாளர், விஜய் கார்த்திக் கண்ணன். எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார் இதற்காக ஏதோ சித்த வைத்தியம் பார்த்து இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
அவரும் ரஜினி சாரின் ரசிகன் தான் என்றாலும் சில விஷயங்களை நம்புகிற மாதிரி இல்லை என்றால் அதை ஓபன் ஆக சொல்லிவிடுவார். இந்த படத்தில் அதிக நேரம் பணியாற்றியது என்றால் அது படத்தொகுப்பாளர் நிர்மலாகத்தான் இருக்கும். படம் ரிலீஸ் ஆகின்ற தினத்தில் கூட ஏதாவது ஒரு வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அதேபோல கலை இயக்குனர் கிரண் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கிறதா என கேட்டார். ஆனால் அவரின் முழு கவனத்தையும் செட்டின் மீது செலுத்துங்கள் என கூறிவிட்டேன். கோபத்தில் ஏதாவது குறை வைத்து விடுவாரோ என நினைத்தேன் ஆனால் அற்புதமாக தனது வேலையை பார்த்துள்ளார்.
கோலமாவு கோகிலா படத்திலிருந்து சிவா மாஸ்டர் என்னை பாலோ செய்து வருகிறார். அதன்பிறகு தான் அவர் பணியாற்றிய படங்களை பார்த்தேன்.
உடனே ’ஜெயிலர்’ படத்தில் அவரை பணியாற்ற இணைத்துக்கொண்டேன். படப்பிடிப்பிற்கு அவர் மட்டுமல்ல அவரது இரண்டு பையன்களும் இணைந்து வந்து பணியாற்றினார்கள். அதே போல் ஜானி மாஸ்டருடன் நான்காவது முறையாக இணைந்து இந்த படத்தில் பணியாற்றியுள்ளேன்.
அவர் வடிவமைத்த ’காவாலா’ பாடல் படத்திற்கு மிகப்பெரிய புரமோஷன் ஆக அமைந்தது. நடிகர் சுனில் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் ஒப்புக்கொண்டு நடித்ததுடன் சிறப்பாக நடித்தாலும் கூட இன்னொரு முறை டேக் போகலாமா என ஆர்வமுடன் கேட்பார்.
எனக்காக ஒரு டேக்கும் அவருக்காக ஒரு டேக்கும் கூட சில நேரங்களில் எடுத்துக் கொண்டு அவற்றில் எது சிறப்பாக இருந்ததோ அதை பயன்படுத்தினோம். இந்த படத்தில் மிர்னா நடித்துள்ள கதாபாத்திரத்திற்காக முதலில் ஐந்து ஆறு பேரிடம் பேசினோம். ஆனால் மிர்னாவின் நடிப்பை பார்த்ததும் வேறு யாரையும் அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்ய யோசிக்கவில்லை.
இந்தப்படத்தில் குறைந்த டேக் வாங்கி நடித்தவர்களில் மிர்னாவும் ஒருவர். இந்த படத்திற்காக ’ஹுக்கூம்’ பாடல் எழுதப்பட்டு என்னிடம் வந்த போது இதை எழுதியவர் யாரோ ஒரு ரஜினி ரசிகர் மன்ற தலைவர் தானே என்று அனிருத்திடம் கேட்டேன். அந்த அளவிற்கு ஒரு அதிரடி பாடலாக இதை உருவாக்கி இருந்தார். என்னுடைய முதல் படத்திலிருந்து இடம் பிடித்து வருகிறார் ரெடின் கிங்ஸ்லி.
அவர் வரவில்லை என்று கூறினாலும் ஓல்டு சென்டிமென்ட் பேசி பிளாக்மெயில் செய்து வர வைப்பேன். ஆனால் படத்திற்குள் வந்த பிறகு நம்மை அவர் பிளாக்மெயில் செய்வார். கதை விவாதங்களில் கூட வந்து கலந்து கொள்வார். கலாநிதி மாறன் சாரிடம் ஒற்றை வரியில் கதை சொல்லி தப்பித்து விடலாம் என நினைத்தால் அவரோ இரண்டரை மணி நேரம் அல்ல 5 மணி நேரம் வரை கூட பொறுமையாக அமர்ந்து கதை கேட்பார்.
இந்த படத்தை தனது இதயத்திற்கு நெருக்கமாக நினைத்தார் கலாநிதி மாறன். இந்த படத்தை ரசிகர்கள் இவ்வளவு கொண்டாட காரணம் ரஜினி சார் இந்த படத்தின் ஸ்கிரிப்ட் மீது ரொம்பவே நம்பிக்கை வைத்ததுதான்.” என்றார் நெல்சன்.
இராமானுஜம்
“நீண்ட ஓய்வுக்குப் பின் திரும்பி வந்திருக்கிறேன்”- பும்ரா நெகிழ்ச்சி!
அதிமுக பொதுக்குழு எதிரான வழக்கு: தேர்தல் ஆணையம் பதில்!
ஓராண்டுக்குள் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம்!