ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிப்பில், M.R.மாதவன் இயக்கத்தில், உதய் கார்த்திக், ‘அட்டு’ புகழ் ரிஷி ரித்விக், சாய் ப்ரியா தேவா, ஸ்ரீனி, D.மானேக்க்ஷா, கவின், ஜெய்பாபு, T.N.அருண் பாலாஜி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘டைனோசர்ஸ்’.
இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளரான ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் பேசும்போது, “எப்போதுமே ஒரு புது டீம் என்ன மாதிரி படம் தருவார்கள் என்று சந்தேகம் இருக்கும். ஆனால் எங்கள் படத்தின் மீது எங்களுக்கு மிகப் பெரும் நம்பிக்கை இருக்கிறது. இயக்குநர் ஹெச்.வினோத் மூலம்தான் இந்தப்படத்தின் இயக்குநர் அறிமுகமானார். இயக்குநர் மிகத் திறமையானவர்.
இப்படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பல தடைகளைத் தாண்டியே படப்பிடிப்பு செய்துள்ளோம். படம் பார்க்கும்போது படத்தின் தரம் உங்களுக்குத் தெரியும்” என்றார்.
நடிகர் ஸ்ரீனி பேசும்போது, “2015-ம் ஆண்டிலிருந்தே இயக்குநர் மாதவனை எனக்குத் தெரியும். முதல் தடவை அவரிடம் கதை கேட்டுட்டு “ஏன் தலைவா டைனோசர்ஸ் தலைப்பு..” என்றேன்.
“பொறக்கும்போது ஈயா, எறும்பாகூட பொறக்கலாம்… ஆனா சாகும்போது டைனோசரா சாகனும். ஏன்னா அப்பதான் நம்ம செத்தா தூக்குறதுக்கு ஒரு ஆயிரம் பேராவது வருவான்..” அப்படின்னு சொன்னாரு.
இன்னைக்கு இந்த சத்யம் தியேட்டர்ல எங்க ‘டைனோசர்ஸ்’ படத்தோட டிரெய்லர் அதே 1000 பேருக்கு முன்னாடி இவளோ பெரிய வெளியீட்டு விழாவா நடக்கும்போது இதை மிகவும் சந்தோசமா உணர்றேன்.
கொரோனா காலகட்டத்தைத் தாண்டி பல இன்னல்களுக்கு இடையில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். இந்தப் படம் எங்க எல்லாரோட வாழ்க்கையிலையும் ரொம்ப முக்கியமான படம். இதுக்காக நாங்க 4 வருடங்களா காத்துட்டு இருக்கோம். கண்டிப்பாக உங்களுக்குப் படம் பிடிக்கும்..” என்றார்.
திருமலை இயக்குநர் ரமணா பேசும்போது, “பதினோரு வருடங்களுக்குப் பிறகு என்னுடைய படம் வெளியானால் எனக்கு ஏற்படும் மகிழ்ச்சிதான் இன்றைக்கும் உள்ளது. அதற்குக் காரணம் இயக்குநர் மாதவன். இந்தப் படத்தில் நான் பணி செய்யக் காரணம் சென்னை நகரை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர்.
இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி அடைய வேண்டும். அனைவரும் புதிது என்று சொன்னார்கள். அதற்காக இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று நான் கூறவில்லை. படத்தின் கதை புதிது. அதற்காக இப்படம் வெற்றி பெற வேண்டும். பத்திரிக்கை நண்பர்கள் இப்படத்தை அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும்…” என்றார்.
நாயகன் உதய் கார்த்திக் பேசும்போது, “முதலில் என் மாமா போனி கபூர் அவர்களுக்கு நன்றி. கோவிட் நேரங்களிலும் மூன்று படத்தை வெளியிட்டு பலரது வாழ்வில் வெளிச்சத்தை அளித்துள்ளார். அவருக்குப் பல பணிகள் உள்ளது. இதற்கிடையில் எனக்காக இங்கு வந்ததற்கு நன்றி.
இயக்குநர் மிஷ்கின் சார் நான் உங்களுடைய ரசிகன். அஞ்சாதே படம் முதல் இன்றுவரை உங்களைப் பார்த்து வியந்து வருகிறேன். அருண் விஜய் அண்ணா ஒரு ஹாலிவுட் நடிகர் தன்னை செதுக்குவது போல் செதுக்கியவர். இயக்குநர் ரமணா சாருக்கு நன்றி. இங்கு வந்துள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு இந்த தருணம் பெருமையாக உள்ளது. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் சாருக்கு மிகப் பெரும் நன்றி. இந்தப் படம் உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும்…” என்றார்.
இயக்குநர் M.R.மாதவன் பேசும்போது, “சினிமா கண்டிப்பாக அனைவரையும் எட்டி உதைக்கும். நாம்தான் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். படம் வெற்றி பெறுவது எனக்கு முக்கியம் என்பதைவிட படத்தில் பணி புரிந்துள்ள 100 பேருக்குத்தான் முக்கியம். இந்தப் படம் பல கதாநாயகர்களிடம் சென்றது. ஆனால் கார்த்திக் இப்படத்தில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார்.
பல நண்பர்களின் முயற்சியால்தான் நான் இங்கு வந்தேன். என்னை இந்த தயாரிப்பாளரிடம் அழைத்துச் சென்றது இயக்குநர் H.வினோத்தான். 143 தயாரிப்பாளரை நான் அணுகியுள்ளேன். ஆனால், இந்த படத்தின் தயாரிப்பாளர்தான் எனக்கு இந்த வாய்ப்பை அளித்தார். வாழ்நாள்வரையிலும் அவரை நான் மறக்க மாட்டேன்.
கதாநாயகன் உதய் கார்த்திக் பெரிய நடிகர்களான அஜித், விஜய் போன்று நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இரவு பகல் பாராமல் பணி செய்துள்ளார். ரமணா சார் மிகவும் எளிமையானவர். அவரது எளிமை மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
கதாநாயகி தமிழ் பேசும் நடிகையாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்தேன். அதுபோலவே அவர் அழகாக நடித்துள்ளார். ஸ்ரீனி நடிப்பு இந்த படத்தில் சிறப்பாகப் பேசப்படும்.
நடிகர் அருண் விஜய் சார் மற்றும் விஜய்குமார் சாருக்கு நன்றி, இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்குச் சிறந்த பொழுது போக்காக இருக்கும். நான் கலைப் படம் பண்ணவில்லை கலாய் படம் பண்ணியுள்ளேன். என் வளர்ச்சிக்கு முழுமுதல் காரணமாக இருக்கும் என் அம்மாவிற்கு நன்றி. கண்டிப்பாக இந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கும்…” என்றார்.
தயாரிப்பாளர் போனி கபூர் பேசும்போது, “இங்கு பேசிய அனைவரும் படத்தைப் பற்றி நம்பிக்கையாகப் பேசினார்கள். இந்தக் குழு கோவிட் காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு இப்படத்தை உருவாக்கியுள்ளனர். படத்தை நான் பார்த்துவிட்டேன். மிக அற்புதமாக இருந்தது. உதய் கார்த்திக் மிக நன்றாக நடித்துள்ளார் டான்ஸ், ஃபைட், ரொமான்ஸ் எல்லாம் நன்றாக வருகிறது. நன்றாக முத்தம் கொடுக்கிறார். அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்…” என்றார்.
இயக்குநர் மிஷ்கின் பேசும்போது, “இந்தப் படம் பற்றி அனைவரும் மிகுந்த நம்பிக்கையோடு பேசுகிறார்கள். டிரெய்லர் நன்றாக உள்ளது. படக் குழுவினரின் உழைப்பு தெரிகிறது. எனக்கு போனிகபூரை தெரியாது. ஆனால், ஸ்ரீதேவியைத் தெரியும். இந்த உலகில் வாழ்ந்த மிகச் சிறந்த நடிகைகளுள் ஒருவர் அவர். இன்று போனிகபூர் சாரை சந்தித்தது மகிழ்ச்சி. இயக்குநர் ரமணா அவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சி.
இந்தக் குழு என்னை அழைத்தபோது என்ன பெரிதாகச் செய்திருக்கப் போகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் ஒரு குழுவாக அனைவரின் உழைப்பும், துடிப்பும் தெரிகிறது. புதுமையாகச் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் புரிகிறது. படம் மிகப் பெரிய வெற்றி பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..” என்றார்.
இராமானுஜம்
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: நீதிபதி கேள்வி!
விஷாலுக்காக இறங்கி வருவாரா விஜய்?