டைனோசர்ஸ் – விமர்சனம்!

Published On:

| By Monisha

Dinosaurs Tamil Movie Review

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு படம் பார்க்கச் சென்று, ரொம்பவே ஆச்சர்யகரமான அனுபவத்துடன் திரும்பி வந்தால் எப்படியிருக்கும்? ’டைனோசர்ஸ்’ அப்படியொரு படமாக அமைந்திருக்கிறது.

சரி, படத்தின் ட்ரெய்லர் பார்த்தால் வடசென்னை தாதாக்களின் வாழ்வைச் சொல்லும் ஒரு ‘கேங்ஸ்டர் ஆக்‌ஷன்’ படமாகத்தானே தெரிந்தது? எவ்வாறு அது மாதிரியான படங்களில் இருந்து வித்தியாசப்படுகிறது?

வடசென்னை வாழ்க்கை

சாதி, மத வித்தியாசங்களைத் தாண்டி ஒரே பகுதியில் குடியிருப்பவர்கள் என்ற வகையில் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்தாலும், அங்கிருக்கும் சாலையார் (மானெக்‌ஷா) எனப்படும் பெரிய மனிதரைக் கண்டால் பயந்து நடுங்குகின்றனர். காரணம், அவர் ஒருகாலத்தில் குத்துச்சண்டை வீரராகவும் பெரிய ரவுடியாகவும் அறியப்பட்டவர். இப்போதும் வெளியுலகுக்குத் தெரியாமல், தனது படை பரிவாரங்களோடு ‘கேங்ஸ்டர்’ ஆகவே இருந்து வருகிறார்.

அதே பகுதியில் ஒரு பெண் (ஜானகி சுரேஷ்) தனது மகன்கள் தனா (ரிஷி ரித்விக்), மண்ணுவோடு (உதய் கார்த்திக்) வசிக்கிறார். அவரது கணவரும் ரவுடியாக இருந்து வன்முறைக்குப் பலியானவர் தான். அதனால், தனது பிள்ளைகள் ரவுடி ஆகி வாழ்வை இழந்துவிடக் கூடாது என்று கவனமாக வளர்க்கிறார்.

தனாவின் நெருங்கிய நண்பரான துரை (ஸ்ரீனி) சாலையாரிடம் அடியாளாக இருந்தவர், மனம் திருந்தி ஏதேனும் ஒரு தொழிலைச் செய்து சாதாரணமாக வாழ முடிவு செய்கிறார். திருமணமான சில நாட்களில், பட்டாசு விற்பனையில் இறங்க ஏற்பாடுகளையும் மேற்கொள்கிறார். இந்த நிலையில், ஓராண்டுக்கு முன் ஒரு அரசியல் கட்சி பிரமுகரைக் கொன்றது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவாகிறது. குற்றம்சாட்டப்பட்ட 8 பேரில் துரைக்குப் பதிலாக தனா சிறைக்குச் செல்கிறார்.

இந்த நிலையில், திருவிழாவுக்கு நன்கொடை வாங்க வேண்டும் என்று சொல்லி கிளியார் என்பவரின் வீட்டுக்கு துரையையும் சில இளைஞர்களையும் சாலையாரின் கையாள் ஒருவர் அழைத்துச் செல்கிறார். துரை யாரைக் கொலை செய்தாரோ அவரது மைத்துனர்தான் அந்த கிளியார். பயமும் பதற்றமுமாக துரையும் மண்ணுவின் நண்பர்களும் வீட்டினுள் இருக்க, தற்செயலாக அவர்களுடன் வந்த மண்ணு வெளியே காரில் காத்திருக்கிறார்.

அந்த நேரத்தில், துரைதான் தனது தங்கையின் கணவரை கொலை செய்தவர் என்று கிளியாருக்கு தெரிய வருகிறது. கொலை வழக்கில் சரணடைந்தவர்களில் துரை உட்பட 3 பெயர்களில் வந்தவர்கள் மட்டும் புதியவர்கள் என்பதை போலீசாரிடம் போனில் விசாரித்து அறிகிறார். ஒவ்வொரு பெயராக அழைத்து, தன் மச்சினரைக் கொலை செய்தவர் இவர்தானா என்று கண்டறிய முயல்கிறார். நடப்பது என்னவென்று துரைக்கும் நன்கு தெரிகிறது.

சரியாக, அந்த நேரத்தில் மண்ணு வீட்டிற்குள் வருகிறார். ‘துரைண்ணா..’ என்று சத்தமாக அவரை விளிக்கிறார். அதைக் கேட்டதும், கிளியாரின் அடியாட்கள் கொலைவெறி கொல்கின்றனர்.

அதன்பின் என்ன நடந்தது? துரை, மண்ணு உட்பட அங்கிருந்தவர்கள் உயிர் பிழைத்தார்களா? அன்று, அவர்களைக் கிளியார் வீட்டுக்கு சாலையார் அனுப்பியது ஏன் என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது ‘டைனோசர்ஸ்’ இரண்டாம் பாதி.

உண்மையைச் சொன்னால், இது ஒரு வழக்கமான கேங்க்ஸ்டர் கதை. ஆனால், திரையில் காட்சிகளாக விரியும்போது வடசென்னையின் ஒரு பகுதியில் இருப்பவர்களின் வாழ்வை நேரடியாகக் காணும் அனுபவம் கிடைப்பதே இயக்குனர் ஆர்.மாதவன் செய்திருக்கும் மாயாஜாலம். திரைக்கதை மற்றும் காட்சியாக்கத்தில் அவர் கையாண்டிருக்கும் ‘ரியாலிஸ்டிக்’ ட்ரீட்மெண்ட் தான் ‘டைனோசர்ஸ்’ படத்தைப் பார்க்கச் செய்யும் முக்கிய அம்சம்.

Dinosaurs Tamil Movie Review

கலக்கும் முகங்கள்

இதில் நாயகனாக உதய் கார்த்திக் தோன்றியிருக்கிறார். ’கருத்தம்மா’வில் வந்த மகேஸ்வரியின் சகோதரர் இவர். ஏற்கனவே நடுநிசி நாய்கள், காத்தாடி போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனாலும், இப்படத்தில் நாயகனாக அவர் அமர்க்களம் செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். வசனம் பேசும் விதம், உடல்மொழி போன்றவற்றில் பழைய விஜய், அஜித், விக்ரம், சூர்யா படங்களை நினைவூட்டுகிறார். அது திரையில் பலனளித்திருப்பது நல்ல விஷயம்.

சாய் பிரியா தேவா நாயகியாக அல்லாமல், நேரில் பார்க்கும் ஒரு அழகிய பெண் போலத் திரையில் தெரிகிறார். அதுவே அவரது பிளஸ் ஆகவும் மைனஸாகவும் உள்ளது. நாயகனின் நண்பர்களாக வருபவர்களில் பலரது முகம் நம் நினைவில் நிற்கிறது. அந்த அளவுக்கு அவர்களது பெர்பார்மன்ஸ் திரையில் இடம்பெற்றுள்ளது. ரிஷி ரித்விக், ஸ்ரீனி, ஜானகி சுரேஷ், மானெக்‌ஷா, சாலையாரின் கையாள், துரையின் மனைவி, கிளியாராக நடித்தவர் உட்பட முதன்மை பாத்திரங்களில் வருபவர்களில் பலர் நம் கவனம் ஈர்க்கின்றனர்.

இவர்களை தவிர்த்து ‘டைனோசர்ஸ்’படத்தில் கிட்டத்தட்ட இரண்டு டஜன் முகங்கள் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். ஓரிரு ஷாட்கள் என்றபோதும், அவர்களது நடிப்புத்திறன் என்னவென்று நன்றாகத் தெரிகிறது. இவர்களோடு, நெடுநாட்களுக்குப் பிறகு நடிகர் செந்திலும் திருமலை இயக்குனர் ரமணாவும் இதில் இடம்பெற்றிருக்கின்றனர் என்பது இன்னொரு ஆச்சர்யம். இவர்கள் அனைவருமே வெறுமனே பாத்திரங்களாக மட்டுமே தெரிவது இப்படத்தின் பலம். கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி அதற்கொரு உதாரணம்.

ஜோன்ஸ் வி.ஆனந்தின் ஒளிப்பதிவு, படம் பார்க்கும் நாமே தரையில் உருண்டு புரண்டு எழுந்த உணர்வை ஊட்டுகிறது. கலைவாணனின் படத்தொகுப்பில் ஆக்‌ஷன் காட்சிகள் அனல் தெறிக்கின்றன. அதே கூர்மையைத் தொடக்கத்தில் வரும் அரை மணி நேரக் காட்சிகளிலும் காட்டியிருக்கலாம். ஆனால், திரைக்கதையோடு மக்கள் செட்டில் ஆக வேண்டும் என்ற யோசனையில் மெதுவாக நகரும் அக்காட்சிகளை அப்படியே விட்டிருக்கிறார். கலை இயக்குனர் வலம்புரிநாதன், சண்டைப்பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம் இருவரும் இப்படத்திற்குப் பின் ரொம்பவே பிஸியானவர்களாக மாறிப் போவார்கள். அந்த அளவுக்கு அவர்களது குழுவினர் திரையில் உழைப்பைக் கொட்டியிருக்கின்றனர்.

திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார் எம்.ஆர்.மாதவன். ஒரு கமர்ஷியல் படத்தில் என்ன மாயாஜாலம் செய்யலாம் என்பதை அவர் நன்கு உணர்ந்திருப்பது பாராட்டிற்குரிய விஷயம். அதுவே, ட்ரெண்டை மீறி இப்படியொரு கேங்க்ஸ்டர் ஆக்‌ஷன் படத்தை கமர்ஷியல் வெற்றியாக மாற்ற முனைந்திருக்கிறது.

அசத்தும் ஆக்‌ஷன்

இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இரண்டு விஷயங்களில் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். முதலாவது, கொஞ்சம் கூட செயற்கைத்தனம் இல்லாமல் நிஜமாகவே வடசென்னையின் ஒரு பகுதிக்குள் நாமே நுழைந்த உணர்வை ஏற்படுத்தும் திரைக்கதை ட்ரிட்மெண்ட். இரண்டாவது, காட்சிகளின் அளவைத் தீர்மானிப்பதில் அவர் கைக்கொண்டிருக்கும் தனி பாணி.

ஏனென்றால், சில காட்சிகள் வெறுமனே இரண்டு, மூன்று ஷாட்களுடன் முடிந்து விடுகின்றன. சில காட்சிகள் பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு நீள்கின்றன. இந்த படத்தில் கிளியார் வீட்டிற்குள் துரை மாட்டிக் கொள்வதும், இறுதிச் சடங்கொன்றில் கலந்துகொள்ள வரும் சாலையாரிடம் மண்ணு வம்பிழுப்பதும் அப்படிப்பட்டவை தான். அந்தக் காட்சியாக்கம்தான் இயக்குனரை தனித்து அடையாளம் காட்டுகிறது.

’டைனோசர்ஸ்’ ஒரு வித்தியாசமான கமர்ஷியல் ஆக்‌ஷன் பட அனுபவத்தைத் தருகிறது. சரண் இயக்கிய ‘வட்டாரம்’ உட்பட ஏற்கனவே நாம் பார்த்த சில படங்களை நினைவூட்டுகிறது. அதேநேரத்தில், பழைய ராம்கோபால் வர்மா படம் பார்த்த உணர்வையும் ஊட்டுகிறது.

வடசென்னையில் வாழ்பவர்கள் அனைவருமே ரவுடித்தனம் மிக்கவர்கள் என்ற எண்ணத்தைச் சில காட்சிகள் விதைத்தாலும், அதையும் மீறி ‘வன்முறை இல்லாத வாழ்வே நிம்மதியைத் தரும்’ என்று சொன்ன வகையில் சிறந்த பொழுதுபோக்கு படமாகவும் உள்ளது. அதற்காக, முதல் அரை மணி நேரக் காட்சிகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பதே இதனை ரசிப்பதற்கான நிபந்தனை.

அந்த தடையைத் தாண்டிவிட்டால், லாஜிக் பார்க்காமல் ஒரு ரோலர்கோஸ்டர் பயணம் செய்த அனுபவத்தை நிச்சயம் தரும் இந்த ‘டைனோசர்ஸ்’. ஆனால், ஏன் இந்த படத்திற்கு இப்படியொரு டைட்டில் என்று மட்டும் கேட்கவே கூடாது.

உதய் பாடகலிங்கம்

தங்கம் விலை உயர்ந்தது: இன்றைய நிலவரம்!

கைதான பாமகவினருக்கு 15 நாள் காவல்: மீண்டும் கால்வாய் வெட்டும் என்.எல்.சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel