இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான் – மனிஷா கொய்ராலா நடித்து 1998ஆம் ஆண்டு வெளியான கிளாசிக் திரைப்படமான ‘தில் சே( உயிரே)’ படத்தின் கிளைமாக்ஸ் ஸ்கிரிப்டில் மாற்றப்பட்டதாக நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ‘ ’தில் சே’ படத்தின் ஒரிஜினல் ஸ்கிரிப்ட் படி என் கதாபாத்திரம் மட்டுமே மனித வெடிகுண்டாக மாறி இறந்து போகும். ஷாருக்கான் சாக மாட்டார். ஆனால், படத்தில் என்னுடன் சேர்ந்து ஷாருக்கானும் இறப்பதாக மாற்றப்பட்டது’ எனக் கூறியுள்ளார்.
பான் இந்தியா என்கிற வார்த்தை சினிமா உலகிற்குள் ஒலிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே வெளியான கிளாசிக் ரொமாண்டிக் பான் இந்திய திரைப்படம் ‘தில் சே’ . இந்தப் படத்தில் தீவிரவாத அமைப்பில் இருக்கும் மனிஷா கொய்ராலாவை ஆல் இந்தியா ரேடியோ ஊழியரான ஷாருக்கான் காதலிப்பார். மனிஷாவின் பின்னணி பற்றி அறியாத அவருக்குள் காதல் மலர, பின்னால் எல்லாம் தெரியவரும். கிளைமாக்ஸில் ‘ எனை காதலிக்கிறேன் என்று சொல், இங்கிருந்து போய் வேற புது வாழ்வை தொடங்கலாம்’ என ஷாருக்கான் மனிஷாவிடம் கேட்பார்.
அதற்கு மனிஷா மௌனம் சாதிக்க, ‘என்னை உன் கூட சாகவாவது விடு’ என கட்டி அணைப்பார். இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி அணைக்க, மனிஷா உடம்பில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டு வெடிக்க.., இருவரும் அந்த நொடியில் இறப்பதாக படம் நிறைவடையும்.
இந்தத் திரைப்படம் வெளியான போது விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களே கிடைத்தன. வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறாவிடினும் ஓவர்சீஸ் பாக்ஸ் ஆஃபிசில் மிகப் பெரிய வெற்றியையே பெற்றது. குறிப்பாக லண்டனின் டாப் 10 வசூல் செய்த படங்களின் பட்டியலில் இடம்பெற்ற முதல் இந்திய திரைப்படம் என்கிற பெருமையை ‘தில் சே’ பெற்றது.
படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், ஒலிப்பதிவாளர் எச்.ஸ்ரீதர் ஆகியோருக்கு இந்தப் படத்திற்காக தேசிய விருது வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான ஃபிலிம் ஃபேர் விருதும் வழங்கப்பட்டது. மேலும், இயக்குநர் மணிரத்னத்திற்கு 49ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ‘NETPAC’ பிரிவின் கீழ் விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
விண்வெளி நாயகா… ‘THUG LIFE’ படத்தின் ரிலீஸ் தேதி தெரியுமா?
’அமரனின் கமாண்டிங் ஆபிஸரே!’ : 70ஐ தொட்ட கமல்… குவியும் வாழ்த்துகள்!