கேப்டன் விஜயகாந்தின் தவசி படத்திற்கு சீமான் வசனம் எழுதியது உண்மையா? என்ற கேள்விக்கு அப்படத்தின் இயக்குநர் உதயசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்(71) நேற்று முன்தினம் (டிசம்பர் 28) காலமானார். அவரது பூத உடல் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் நேற்று (டிசம்பர் 29) இரவு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதற்கிடையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த தூத்துக்குடியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “விஜயகாந்த் என்றால் துணிவுதான். அவருடைய தவசி படத்துக்கு நான் உரையாடல் எழுதினேன். அப்போதுதான் அவரிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது,” என்றார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் படத்தின் டைட்டில் கார்டில் நன்றி என உங்கள் பெயர் இடம் பெறுகிறது. ஆனால் கதை, திரைக்கதை, வசனம் என இயக்குநர் உதயசங்கரின் பெயர் தான் படத்தில் வருகிறது.
நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறதா? என சமூக வலைதளங்களில், சீமானிடம் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் அப்படத்தின் இயக்குநர் உதயசங்கர் இந்த சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து யூடர்ன் நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ” சீமான் தான் அந்த படத்திற்கு வசனம் எழுதினார்.
அவர் அப்போது இயக்குநர் வாய்ப்பிற்காக காத்திருந்தார். அதனால் வசனம் என அவர் பெயரினை போட்டால் பின்னர் இயக்குநர் வாய்ப்பு கிடைக்காமல் போய் விடுமோ என்பதற்காக, பெயர் போட வேண்டாம் என கேட்டு கொண்டார்.
கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான 3 படங்கள் சரியாக போகாதததால் இயக்குநர் வாய்ப்பு அடுத்து கிடைக்காமல் போய் விடுமோ?
படங்களுக்கு வசனம் எழுத கூப்பிட்டு விடுவார்களோ? என்ற பயம் அவருக்கு இருந்தது. அதனால் யோசித்து பெயர் போட வேண்டாம் என கேட்டு கொண்டார். எனக்கு அதில் விருப்பமில்லை.
என்றாலும் அவர் சொன்னதால் வேறு வழியின்றி அவர் வசனம் எழுதியதை போடாமல், டைட்டில் கார்டில் மட்டும் அவர் பெயர் போட்டோம்.
படத்திற்கு வசனம் முழுவதும் அவர் தான் எழுதினார். ஷூட்டிங் செல்லும்போது சின்னச்சின்ன திருத்தங்களை மட்டும் நான் செய்தேன். தவசி படத்திற்கு வசனம் எழுதியது சீமான் தான்,” என தெரிவித்து உள்ளார்.
2001-ம் ஆண்டு வெளியான தவசி படத்தில் கேப்டன் விஜயகாந்துடன் இணைந்து சௌந்தர்யா, பிரத்யுஷா, நாசர், வடிவேலு, ஜெயசுதா, வடிவுக்கரசி என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்திருந்தனர்.
தவசி திரைப்படத்தில் கேப்டன் பேசிய ”துளசி கூட வாசம் மாறுனாலும் மாறும். இந்த தவசி வார்த்தை மாற மாட்டான்டா. சொன்னா சொன்னது தான்.
”இந்த தவசிக்கு அன்பா பேசவும் தெரியும். தேவைப்பட்டா அருவா வீசவும் தெரியும்” போன்ற வசனங்கள் ரசிகர்கள் மத்தியில், மிகுந்த வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்: ஸ்டாலின் திறந்து வைத்தார்!
”ஒரு முறையாவது பாகிஸ்தான் செல்லுங்கள்”: ரசிகருக்கு தோனி அறிவுரை!