வணங்கான் படப்பிடிப்பில் இயக்குநர் பாலா தன்னை அடித்ததாக கூறியிருந்த நடிகை மமிதா பைஜூ, தற்போது அதனை மறுத்துள்ளார்.
இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் திரைப்படத்தில் முதலில் நடிகர் சூர்யா மற்றும் மமிதா பைஜூ நடித்தனர்.
ஆனால் இருவரும் ஒரு கட்டத்தில் படத்தில் இருந்து விலகிய நிலையில், தற்போது அருண்விஜய் மற்றும் ரோஷிணி பிரகாஷ் ஆகியோரை கொண்டு படத்தை முடித்துள்ளார் இயக்குநர் பாலா. சமீபத்தில் அப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதற்கிடையே மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான ‘பிரேமலு’ படத்தின் மூலம் நடிகை மமிதா பைஜூ கவனம் ஈர்த்துள்ளார். அதனைத்தொடர்ந்து அவர் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், வணங்கான் திரைப்படத்தில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறியிருந்தார்.
அவர் அதில், “பாலா சார் இயக்கத்தில் வணங்கான் படம் மூலம் நான் தமிழில் அறிமுகமாக இருந்தேன். ’நான் அவ்வபோது திட்டுவேன், பெரிதாக எடுத்துக்கொள்ளாதீங்க’ என ஏற்கெனவே சொல்லியிருந்தார். எனினும் நான் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஒரு பாடல் படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. அதற்கு பாடிக்கொண்டே ஆடவேண்டும். அதற்காக பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் போதே பாலா சார் என்னை ஆடிக்காட்டும்படி கூறினார். அதற்கு நான் தயாராகாத நிலையில் பதற்றத்தில் சரியாக ஆடவில்லை. அதனால் எனக்கு பின்னாலிருந்த அவர் என்னை தோள்பட்டையில் அடித்தார்.
இதுபோன்று பல முறை என்னை அடித்துள்ளார். சூர்யா சார் ஏற்கெனவே அவரோடு படம் பண்ணியிருப்பதால் அவர் எப்படியென தெரிந்துவைத்திருந்தார். புதிதாக இணைந்ததால் எனக்குத்தான் தெரியவில்லை” என கூறியிருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து பலரும் இயக்குநர் பாலாவிற்கு எதிராக கருத்து பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் நடிமை மமிதா பைஜூ தன் இன்ஸ்டா பக்கம் மூலம் மீண்டும் விளக்கமொன்றை கொடுத்துள்ளார்.
அதில், “நான் தமிழ் திரைப்படத்தில் ஈடுபடுவது தொடர்பாக இணையத்தில் பரப்பப்படும் செய்தி முற்றிலும் ஆதாரமற்றது. ஒரு திரைப்பட விளம்பர நேர்காணலின் ஒரு பகுதி மட்டும் எடுக்கப்பட்டு, ஒரு பொறுப்பற்ற தலைப்பை உருவாக்குவதற்காக வேண்டுமென்றே தவறாக வீடியோ வெளியிட்டுள்ளனர்.
படத்தின் ப்ரீ புரொடக்ஷன், புரொடக்ஷன் என ஒரு வருடத்திற்கு மேல் பாலா சாருடன் நான் வேலை பார்த்திருக்கிறேன். நான் ஒரு சிறந்த நடிகையாக மாறுவதற்கு அவர் எப்போதும் என்னை ஊக்குவித்தார்.
அந்தப் படத்தில் பணிபுரிந்தபோது மனரீதியாகவோ அல்லது உடல்ரீதியாகவோ நான் எந்த விதமான துன்புறுத்தலையும் அனுபவிக்கவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.
பிற பட வாய்ப்புகள் காரணமாகவே, பிறகு அந்தப் படத்திலிருந்து விலகினேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வர்த்தக சிலிண்டர் விலை உயர்ந்தது!
முதல் வேட்பாளர் பட்டியலில் தமிழ்நாடு? மோடி- அமித் ஷா நள்ளிரவு ஆலோசனை!
காஸாவின் பலி எண்ணிக்கை 30,035 ஆக உயர்வு!