தோனியின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று உடற்கூராய்வு செய்த மருத்துவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை பாந்திராவில் உள்ள தனது வீட்டில் பிணமாகக் கிடந்தார் .
தூக்கிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரேத பரிசோதனையிலும் அவர் கொலை செய்யப்படவில்லை என்று கூறப்பட்டது.
சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணையை நடத்தி வந்த மும்பை போலீசார், அவரது காதலி ரியா சக்கரவர்த்தி மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் வாரிசு நடிகர்கள், பெரிய நடிகர்களின் தலையீட்டால் சுஷாந்த் படவாய்ப்புகளை இழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர் இந்தி திரையுலகில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கத்தால் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்தது.
இது தொடர்பாக மும்பை போலீசார் பிரபல இயக்குனர்கள், தயாரிப்பு நிறுவனங்களிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து சுஷாந்த் சிங் வழக்கு சி.பி.ஐ.க்கு மாறியது.
காதலி ரியா சக்கரவர்த்தி, நண்பர் சித்தார்த் பிதானி மற்றும் வீட்டு வேலைக்காரர்கள் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வாங்கி கொடுத்ததாகவும் கூறி போதை பொருள் தடுப்பு பிரிவினர் அவர்களை கைது செய்தனர்.
ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என்று உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும், ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். இன்றுவரை சுஷாந்த் சிங் வழக்கில் மர்மம் விலகாமல் இருந்தது.
இந்தநிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர், அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை, மாறாக கொலை செய்யப்பட்டார் என்று கூறியுள்ளார்.
சுஷாந்தின் உடலை பிரேத பரிசோதனை செய்த குழுவில் இருந்த ரூப்குமார் ஷா, சமீபத்தில் ஒரு நேர்காணலில், நடிகரின் உடல் மற்றும் கழுத்தில் பல காயங்கள் இருந்ததாகக் கூறியுள்ளார்.
“சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்தபோது, கூப்பர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக ஐந்து இறந்த உடல்களைப் பெற்றோம். அந்த ஐந்து உடல்களில் ஒன்று விஐபி உடல்.
நாங்கள் பிரேத பரிசோதனை செய்யச் சென்றபோது, அவர் சுஷாந்த் என்றும், அவரது உடலில் பல காயங்களும், கழுத்தில் இரண்டு முதல் மூன்று காயங்களும் இருப்பதை அறிந்தோம்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் கொல்லப்பட்டதாக அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தும், ‘விதிகளின்படி’ வேலை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் பிரேத பரிசோதனை செய்த ரூப்குமார் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
“முதன்முறையாக சுஷாந்தின் உடலைப் பார்த்தபோது, அது தற்கொலையல்ல, கொலை போல் இருப்பதாக என் சீனியர்களிடம் உடனடியாகத் தெரிவித்தேன். நாங்கள் மருத்துவ விதிகளின்படி செயல்பட வேண்டும் என்று நான் அவர்களிடம் சொன்னேன்.
இருந்தாலும், சீக்கிரம் புகைப்படம் எடுத்துவிட்டு, உடலை போலீஸாரிடம் ஒப்படைக்கும்படி என் சீனியர்கள் என்னிடம் சொன்னார்கள். எனவே, நாங்கள் இரவில் மட்டுமே பிரேத பரிசோதனை செய்தோம்” என்று ஷா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கலை.ரா
யாத்திரையை நிறுத்த உளவுத்துறை: காங்கிரஸ் குற்றச்சாட்டு!
தேசிய மகளிர் குத்துச்சண்டை: தமிழக வீராங்கனை வெற்றி!