தோனி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் Lets get married என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பில் அறிமுகமாக உள்ளது.
தோனி, பல கோடி இளைஞர்களை கட்டிப்போட்ட மந்திரச் சொல். கிரிக்கெட்டில் நீளமான கேசத்துடன் தோன்றி பந்துகளை நாலாபுறமும் சிதறவிட்டு, யார் இந்த பையன் என்று பலரையும் புருவம் உயர்த்த வைத்தவர் தோனி.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 1981-ஆம் ஆண்டு சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை பம்ப் ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
சிறு வயதிலேயே உள்ளூர் கிரிக்கெட்டில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தோனி, பின்னாளில் இந்திய அணிக்கு தலைமை பொறுப்பேற்று வழிநடத்தி சென்றார்.

2004-ஆம் ஆண்டு முதல் தோனி, இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட ஆரம்பித்தார். பேட்டர் மற்றும் விக்கெட் கீப்பரான தோனியின் சிறப்பான ஆட்டத்தால் 2007-ஆம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் கேப்டன் ஆனார்.
கேப்டன் கூல், தல என்று தனது ரசிகர்களால் அழைக்கப்படும் தோனி, தனது வியூகத்தாலும் , நெருக்கடியான சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
இதனால் டி20, ஒரு நாள், டெஸ்ட் ஆகிய மூன்று தொடர்களிலும் அசைக்கமுடியாத கேப்டன் ஆனார்.
2007 முதல் 2017-ஆம் ஆண்டு வரை டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும், 2008 முதல் 2014-ஆம் ஆண்டு வரை டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தோனி கேப்டனாக இருந்தார். 2007 டி20 உலக கோப்பை, 2011 உலக கோப்பையை இவரது தலைமையின் கீழ் இந்தியா கைப்பற்றியது.
தோனி தனது பினிஷிங் ஷாட்களாலும், ஹெலிகாப்டர் சிக்சர்களாலும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார்.
இந்திய அணியில் மட்டுமல்லாது ஐபிஎல் போட்டிகளிலும் தோனி சிறப்பான கேப்டனாக செயல்பட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 4 முறை கோப்பையை வாங்கி தந்துள்ளார்.
இப்படி ஆக்ரோஷமாக வெளிப்பட்டு வந்த தோனியின் ஆட்டம், 2012-ஆம் ஆண்டிற்கு பிறகு தொய்வை சந்தித்தது.
இதனால் 2014-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும், 2017-ஆம் ஆண்டு டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளிலில் இருந்தும் தோனி தனது ஓய்வை அறிவித்தார்.
கிரிக்கெட்டில் இவரது பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில் கேல் ரத்னா, பத்மஸ்ரீ, பத்ம பூஷண் உள்ளிட்ட விருதுகளை இந்திய அரசு இவருக்கு வழங்கி சிறப்பித்தது.
2016-ஆம் ஆண்டு நீரஜ் பாண்டே இயக்கத்தில் M.S. Dhoni: The Untold Story என்ற தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டது. இந்த படத்தில் தோனி தனது இளமை காலத்தில் எதிர்கொண்ட சவால்களை நீரஜ் பாண்டே தத்ரூபமாக காட்சிப்படுத்தினார். மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் தோனி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
சமீபகாலமாக விளம்பரங்களில் பிஸியாக நடித்து வந்த தோனி, தற்போது சினிமாவிற்கு எண்ட்ரி கொடுத்துள்ளார். அவரது தோனி தயாரிப்பு நிறுவனம் தமிழில் தனது முதல் படத்தை தயாரிக்க உள்ளது.
முன்னதாக ரோர் ஆஃப் தி லயன் என்ற ஆவணப்படத்தையும், வுமன்ஸ் டே அவுட் என்ற விழிப்புணர்வு குறும்படத்தையும் தோனி என்டெர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்தது.

இந்த நிறுவனம் தென் இந்தியாவில் படம் தயாரிக்க உள்ளதாகவும், இதற்காக முன்னணி நடிகர்களான விஜய், மகேஷ்பாபு, பிரித்விராஜ், கிச்சா சுதீப் உள்ளிட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவல்களை தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் மறுத்தது.
இந்தநிலையில் தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் தமிழ் படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.
Letsgetmarried என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இவர் அதர்வா தி ஆர்ஜின் என்ற முப்பரிமாண கிராஃபிக் நாவலை எழுதியுள்ளார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படம் குறித்து தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கூறும்போது, “இந்திய நட்சத்திர வீரரான மகேந்திர சிங் தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து தோனி எண்டர்டெயின்மென்ட் என சொந்தமாக பட நிறுவனத்தை தொடங்கி தமிழில் தங்கள் முதல் திரைப்படத்தை தயாரிக்கின்றனர். இது குடும்ப பொழுதுபோக்கு படமாக தயாராக உள்ளது. இந்நிறுவனம் அனைத்து மொழிகளிலும் படங்களை தயாரிப்பதற்கு களம் இறங்கி வருகிறது.” என்று தெரிவித்துள்ளது.
கிரிக்கெட்டில் தனது அசராத ஆட்டத்தால் ரசிகர்களுக்கு என்டர்டெயின்மென்ட் கொடுத்து வந்த தோனி, சினிமாவிலும் என்டர்டெயின்மென்ட் கொடுப்பாரா என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
செல்வம்
ஈரோடு கிழக்கு: ’தெலுங்கு’ வாக்காளர்களை குறி வைக்கும் ’விடுதலைக் களம்’