ராயன்: விமர்சனம்!

சினிமா

உதயசங்கரன் பாடகலிங்கம்

இது யாருக்கான படம்?!

தனுஷ். தமிழ் திரையுலக வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர். அவர் ஒரு சிறந்த நடிகரா அல்லது ரசிகர்கள் ஆராதிக்கிற நட்சத்திரமா? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது கடினம். காரணம், ஒரே படத்தில் இக்கேள்விக்கு இருவிதமாகப் பதிலளிக்கும் வகையிலேயே இதுவரை அவரது ‘பெர்பார்மன்ஸ்’ இருந்து வந்திருக்கிறது.

அதனாலேயே, தனுஷின் 50 வது படமான ‘ராயன்’னை அவரே இயக்கி நடிக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை ஆச்சர்யத்தில் தள்ளியது. அப்படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், பிரகாஷ் ராஜ், செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா உட்படப் பல கலைஞர்கள் இடம்பெறுகின்றனர் என்பது மேலும் நமது எதிர்பார்ப்புகளை உயர்த்தியது. தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடுகிற ஒரு ‘கமர்ஷியல் படமாக’ ராயன்’ இருக்கும் என்று பல பிரபலங்கள் நம்பிக்கை தெரிவித்தனர். தற்போது அப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப ‘ராயன்’ இருக்கிறதா? அது தரும் காட்சியனுபவம் எத்தகையதாக உள்ளது?

நாயகனின் உலகம்!

சிறு வயதில் பெற்றோர் எங்கு சென்றனர் என்று தெரியாமல், இரண்டு சகோதரர்கள், கைக்குழந்தையாக இருக்கும் சகோதரியின் உயிரைக் காப்பாற்ற ஒருவரைக் கொலை செய்கிறார் ஒரு சிறுவன். அவரது பெயர் காத்தவராயன். முத்துவேல் ராயன், மாணிக்கராயன், துர்கா ஆகியோர் அவரது உடன்பிறந்தவர்கள். கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வரும் அவர்கள் நால்வரும், மெல்ல வளர்ந்து பெரியவர்கள் ஆகின்றனர்.

ஒரு ‘பாஸ்ட்புட்’ உணவகமொன்றை நடத்துகிறார் காத்தவராயன் (தனுஷ்). அவ்வப்போது அவருக்கு உதவிகரமாக இருந்துவரும் முத்துவேல் ராயனுக்கு (சந்தீப் கிஷன்) ஊர் சுற்றுவதே முழு நேர வேலை. இளைய சகோதரர் மாணிக்கராயன் (காளிதாஸ்) ஒரு கல்லூரியில் பயில்கிறார். துர்கா வீட்டு நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்கிறார்.

தங்களை ஆளாக்கிய சேகர் (செல்வராகவன்) மட்டுமே அவர்களுக்கு என்று அந்நகரத்தில் இருக்கும் ஒரே உறவு. அந்தப் பகுதியில் செல்வாக்குமிக்க நபராக இருக்கிறார் துரை (சரவணன்). முத்துவேல் ஏதேனும் அடிதடிப் பிரச்சனைகளில் சிக்கும்போது, அவரிடம் சென்று பேசுவதும் மன்னிப்பு கேட்பதும் காத்தவராயனின் வழக்கம். ஒருமுறை அப்படிப் பஞ்சாயத்திற்குச் செல்ல, ‘இனிமே ஒரு பிரச்சனைன்னா நான் தலையிட மாட்டேன்’ என்று எச்சரிக்கிறார் துரை. அதனால், முத்துவேலிடம் எரிந்து விழத் தொடங்குகிறார் காத்தவராயன்.

முத்துவேலைத் தீவிரமாக மேகலா (அபர்ணா) காதலிப்பது காத்தவராயனுக்கு இன்னொரு பிரச்சனையாக இருக்கிறது. ‘ஒரு வேலைக்குப் போனா உனக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன்’ என்று அவரிடம் சொல்கிறார் காத்தவராயன். ஆனால், முத்துவேல் கேட்பதாக இல்லை.

இதற்கு நடுவே, துரையோடு இருந்து வரும் மோதல் காரணமாக, அவரைப் பழிவாங்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார் சேதுராமன் (எஸ்.ஜே.சூர்யா). ஆனால், இரு தரப்புக்கும் இடையே சமாதானம் மட்டுமே நிலவி வருகிறது.

அந்தப் பகுதிக்கு மாற்றலாகி வந்த போலீஸ் அதிகாரி (பிரகாஷ்ராஜ்) அவர்களுக்கு இடையே நிலவும் அமைதியைக் குலைக்கத் திட்டமிடுகிறார். அந்த வலைக்குள் முத்துவேல் தவறிச் சிக்கிக் கொள்கிறார்.

ஒருநாள் பாரில் துரையின் மகனைக் கொல்ல சேதுராமன்னின் ஆட்கள் காத்திருக்கின்றனர். அன்றைய தினம் மது போதையின் உச்சத்தில் இருக்கும் முத்துவேலும் அங்கிருக்கிறார். அப்போது, அவரிடத்தில் வந்து சண்டையிடுகிறார் மேகலா. அவரை அடித்துவிடுகிறார்.

அதனைக் கண்டு துரையின் மகன் சிரிக்கிறார். போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அவர்களோடு சண்டையிடுகிறார் முத்துவேல். அப்போது, சேதுராமனின் ஆட்களும் களத்தில் குதிக்கின்றனர். அந்த மோதலில் துரையின் மகன் கொல்லப்படுகிறார்.

நடந்ததைக் கேள்விப்படும் துரை, ‘உன்னோட தம்பி இனி இல்லைன்னு நினைச்சுக்கோ, விடியுறதுக்குள்ள அவனை என்கிட்ட அனுப்பிடு’ என்று மொபைலில் காத்தவராயனை அழைத்து எச்சரிக்கிறார்.

அதனைக் கேட்டதும் காத்தவராயன் என்ன செய்தார்? துரையும் சேதுராமனும் அந்த சகோதரர்களை என்ன செய்தனர் என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

காத்தவராயனைச் சுற்றியே முழுக்கதையும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இதர பாத்திரங்களுக்கு இதில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அதுவே, இத்திரைக்கதை செறிவாக இருப்பது போன்ற தோற்றத்தைத் தருகிறது. ஆனால், இயக்குனர் சொல்லும் கதையில் பல தகவல்கள் விடுபட்டிருப்பது அந்த எண்ணத்தை முற்றிலுமாகக் குலைத்துப் போடுகிறது.

திருப்தி கிடைக்கிறதா?

நாயகன் தனுஷே இதன் இயக்குனர் என்பதால் இப்படத்தை தனது ஆக்‌ஷன் காட்சிகளுக்கான பில்டப்’பால் அவர் நிறைக்கவில்லை. அதேநேரத்தில், வழக்கத்திற்கு மாறான கேங்க்ஸ்டர் ட்ராமா ஆகவோ, இருக்கை நுனியில் அமர வைக்கிற ஆக்‌ஷன் சித்திரமாகவோ இது அமையவில்லை. இப்படிப் பல மைனஸ், ப்ளஸ் அம்சங்கள் இதில் நிறைய இருக்கின்றன.

இரண்டு கேங்க்ஸ்டர்களை வேட்டையாட போலீஸ் தரப்பு இடையே புகுந்து குழப்பத்தை உருவாக்குகிறது என்பது பழைய கதை. அதனால், இப்படத்தில் புதிதாக ஏதும் இல்லை.

சகோதரர்களுக்கு இடையிலான பாசமும், அது அறுபடாத வகையில் இருப்பதற்கான காரண காரியங்களும் இதில் தெளிவாகச் சொல்லப்படவில்லை. அதனால், இரண்டாம் பாதி நம் மனதோடு ஒட்ட மறுக்கிறது.

தனுஷ் படைத்த பாத்திரங்களை, இன்றைய சமூகத்தோடு ஒப்பிட்டு ‘படிமங்கள்’, ‘அது’, ‘இது’ என்று சிலர் பாராட்டலாம். ஆனால், சாதாரண பார்வையாளரைச் சுவாரஸ்யப்படுத்தாத எந்தவொரு விஷயமும் இது போன்ற ஒரு படைப்புக்கு ஆறாம் விரல் என்பதை இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும். அப்படித்தான் ‘ராயன்’ உள்ளது.

போலவே, திரைக்கதையில் சில தகவல்கள் சொல்லாமல் தவிர்க்கப்பட்டிருக்கின்றன அல்லது விடுபட்டுள்ளன. பிரகாஷ்ராஜ் தனது தந்தை இந்த ஊரில்தான் கொலை செய்யப்பட்டார் என்று சொல்வது போன்று பல தகவல்கள் அப்படிச் சொல்லக் காரணங்களாக விளங்குகின்றன. அந்த தவறு ஏன் நிகழ்ந்தது என்பது படத்தொகுப்பாளர், இயக்குனருக்கே வெளிச்சம்.

இந்தப் படத்தில் பெரும் எண்ணிக்கையில் நடிப்புக்கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களது நடிப்பு குறை சொல்லும்படியாக இல்லை என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும். அவர்களது இடத்தை தனுஷ் எடுத்துக்கொள்ளாதது இன்னொரு சிறப்பு.

சந்தீப் கிஷன் – அபர்ணா ஜோடியின் காட்சிகள் ரசிகர்களைச் சட்டென்று ஈர்க்கத்தக்கவை. ஒரு காட்சியில் அபர்ணா மது அருந்துவதாகக் காட்டியிருக்கிறார் தனுஷ். மது அருந்துவதில் ஆண், பெண் பேதம் பார்ப்பது அபத்தம் என்றாலும், ரசிகர்கள் கொண்டாடும்விதமாக அதனைக் காட்ட வேண்டுமா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

துஷாரா விஜயனுக்குப் பின்பாதியில் முக்கியத்துவம் அதிகம். அதேநேரத்தில் இதர பாத்திரங்களுக்கு அழுத்தம் தரும் விதமாக இன்னும் கொஞ்சம் ஷாட்கள், காட்சிகளைச் சேர்த்திருக்கலாம் என்ற வருத்தம் உண்டு. முக்கியமாக எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜுக்கு இதில் இன்னும் கொஞ்சம் காட்சிகளைச் சேர்த்திருக்கலாம்.

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு, செறிவானதொரு ‘கேங்க்ஸ்டர்’ படம் பார்த்த உணர்வைத் தருகிறது. பிரசன்னா ஜிகேவின் படத்தொகுப்பு, கதையைப் புரிந்துகொள்வதில் இருக்கும் சிரமங்களை அகற்றத் தவறியிருக்கிறது.

கலை இயக்குனர் ஜாக்கி குழுவினர், சண்டைப்பயிற்சிக் கலைஞர்கள், டிஐ, விஎஃப்எக்ஸ் என்று தொழில்நுட்பக் கலைஞர்கள் உழைப்பு இதில் கொட்டப்பட்டிருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் ஓகே ரகமாக உள்ளன. அதேநேரத்தில், முன்பாதி முழுக்கக் காட்சிகளை மனதோடு தைக்கச் செய்வதில் அவரது பின்னணி இசை முக்கியப் பங்காற்றியிருக்கிறது.

ஒரு இயக்குனராக, இப்படத்தில் பெரும் உழைப்பைக் கொட்டியிருக்கிறார் தனுஷ். ஆனால், அதற்கேற்ப பிசிறுகள் இன்றி திரைக்கதை அமைக்கத் தவறியிருக்கிறார்.

காத்தவராயன் எனும் பாத்திரம் ஏன் அமைதியாக வாழ விரும்புகிறது? பதின்ம வயதுகளில் அவர் என்ன வம்பில் மாட்டிக் கொண்டார்? குறிப்பிட்ட போலீஸ் அதிகாரியைத் தவிர, அவருடன் திரியும் இரண்டு போலீசாரை தவிர, திரையில் வேறு காவல்துறையினர் தென்படாதது ஏன்? இது போன்ற பல கேள்விகளுக்கு திரைக்கதை பதிலளிக்காதது பெருங்குறை.

முக்கியமாக, முதல் பாதி முழுக்க ஒருவிதமாகவும், இரண்டாம் பாதி இன்னொரு திசையிலும் நகர்கிறது. அது ‘ட்ராமா’வாக அமைய நிச்சயம் துணை நிற்கும். ஆனால், பரபரவென்ற ஒரு ஆக்‌ஷன் படத்தை தனுஷ் தனது 50வது படமாக தருவார் என்ற எதிர்பார்ப்போடு அது கொஞ்சம் கூடப் பொருந்தவில்லை. அதோடு, ‘இது யாருக்கான படம்’ என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

இந்த அபிப்ராயத்தை ஏற்காதவர்கள், ‘ராயன்’ படத்தை ‘கிளாசிக்’ என்று கொண்டாட வாய்ப்புகள் அதிகம். இதுவரை நாம் பார்த்த படங்களுக்கு மாறான காட்சியனுபவத்தை இப்படம் வழங்குவது அதற்குக் காரணம் ஆகலாம்.

அவரவர் விருப்பங்களைப் பொறுத்து, இப்படம் திருப்தியையும் அதிருப்தியையும் தரும். ’அதனைப் பெறுவதற்காக தியேட்டருக்கு செல்லலாமே’ என்று எண்ணத்தைத் தூண்டும் அளவுக்கு ‘ராயன்’ நல்லதொரு உழைப்பைக் கைக்கொண்டிருப்பதை மறுக்க முடியாது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரோகிணியில் ’ராயன்’ படம் பார்த்த தனுஷ்… வைப் மோடில் ரசிகர்கள்!

தன்னுயிரை கொடுத்து குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய டிரைவர்: வீடுதேடிச் சென்ற அமைச்சர்கள்!

+1
1
+1
0
+1
0
+1
6
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *